பயம் சில குடும்பங்களில் தாய் தரும் நோய் என்று மனநூலார் கருதுகின்றனர். இருட்டில் போகாதே. அதைச் செய்யாதே.இதைத் தொடாதே என்று தாய் பாலுடன் பயத்தையும் தருகிறார். நெஞ்சு பொறுக்குதில்லயே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் என்று குமைந்தார் பாரதி. பணிந்து போவது நல்லதுதான். இதனால் அதிகாரத்தைக் கண்டு அஞ்சுகிறோம். மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவிக்க பலர் தயங்குகிறார்கள்.
நமது பணிவு என்ற பண்பு மறுகோடிக்குச் சென்று மனிதனைக் கோழையாய் பேடியாய் மாற்றி விட்டிருப்பதைக் காண முடிகிறது. அமெரிக்காவில் தோரோ என்றொரு சிந்தனையாளர் இருந்தார். 1845 இல் அடிமைத்தனத்தை எதிர்த்து வரி கொடுக்க முடியாது என்று அரசாங்கத்துடன் போராடி தண்டனையாக ஒருநாள் சிறைக்குப் போனார். அவரது கருத்துக்களே லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய எழுத்தாளரையும், பின்னர் மகாத்மா காந்தியையும் செயல்படத் தூண்டின. அதன் விளைவாகவே ஒத்துழையாமை இயக்கத்தை துவங்கினார் காந்தி. பிரிட்டிஷ் அரசாங்கம் பணிந்தது. மனிதர்களைக் கண்டு மனிதர்கள் பணிவு காட்டும் நிலை முற்றிலும் விசித்திரமானது. அதிகாரிகளில் பலர் தமக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை வேலைக்காரர்கள் ஆகக் கருதுகிறார்கள். நமது மண்ணிலே மனிதன் மனிதனாக வாழ முடியாமல் முதுகெலும்பற்ற புழுவாய் நெளிகிறான். அதிகாரிகளும் பதவியில் இருப்பவர்களும் குடிமக்களை நடத்தும் முறையும் அடிமைப் புத்தியையே காட்டுகின்றன.
நம் அனைவர்க்கும் இப் பிரபஞ்ச அறிவு உறைகிறது. நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் ஒரு மனநிலையை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. நம்மால் முடியுமா என்ற சந்தேகம் நம்மால் முடியாது என்ற நம்பிக்கையாக ஊறி நமது தாழ்வு மனப்பான்மை யாக வெளிவருகிறது. பிறரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதில் மூலமாக நாம் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க நினைக்கிறோம். கடல் பூராவும். தண்ணீர் இருந்தாலும் கடல் நீர் கப்பலுக்குள் புகாத வரை கப்பல் அமிழ்ந்து போவதில்லை. அதே போல்தான் பயமும். மனம் எனும் கப்பலுக்குள் சஞ்சலம், பயம், திகில், பீதி, சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை எந்த பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது.
எதற்கெடுத்தாலும் ஒப்பாரி வைப்பார்கள் தைரியத்தை விலைக்கு வாங்க வேண்டும். புத்தகக் கடைகளில் எல்லாம் பாரதியின் பாடல்கள் என்ற பெயரில் தைரியம் விற்கப்படும்போது ஏன் பலர் அழுகிறார்கள். பயன்மெனும் பேய்தனை அடித்தோம். பொய்மைப் பாம்பைக் பிளந்துயிரைக் குடித்தோம் என்று வீர முழக்கமிடுகிறார் பாரதி. நமது உள்ளத்திலே பயத்திற்கு மாற்றான எண்ணங்களை. உள்ளேவிட பாரதியின் வீரம் செறிந்த பாடல்களின் சக்தி தவிர சக்தி மிகுந்தவை வேறில்லை.