காதலர் தினத்தில் உங்களையும் கொஞ்சம் காதலியுங்கள்!

Motivation Image
Motivation Imagepixabay.com

நீங்கள் எப்போதாவது உங்களுடைய பழைய புகைப்படத்தையோ அல்லது ஆல்பத்தையோ எடுத்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு பத்து வருடத்திற்கு முன்பு எடுத்திருந்த புகைப்படமென்றால் இன்னும் நல்லது. அதுபோன்ற பழைய புகைப்படத்தை பார்க்கும்போது அதில் நாம் தற்போது இருப்பதை விட அழகாக தெரிவோம்.

அப்போ எவ்வளவு அழகாக இருந்திருக்கிறோம். இப்போது இருப்பதை விட எடை குறைவு, இளமை போன்றவற்றை நினைத்து நம்மை பார்த்து நாமே பொறாமை பட்டு கொண்டிருப்போம். ‘இப்போது என்ன இப்படி மாறிவிட்டோம்’ என்று தோன்றும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து வயதாகி, தோல் சுருங்கிய பிறகு தற்போது நாம் எப்படி இருக்கிறோமோ அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தால் அதை பார்த்து அப்போது நாம் பொறாமைப்படுவோம்.

ஆக மொத்தத்தில் எந்த சமயத்திலுமே நம்மை நாம் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டிக் கொள்ளவில்லை, பெருமைப்பட வேண்டிய நேரத்தில் பெருமை படவில்லை, நம்மை நாம் ஆராதிக்க வேண்டிய நேரத்தில் ஆராதிக்கவில்லை. எல்லாம் காலம் போன பிறகே புலப்படுகிறது.

உங்களை நீங்களே பாருங்கள்? இப்போது இந்த நொடியில், ‘நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்’ என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நிறைய சமயங்களில் அழகு சாதனப்பொருட்களை நாடி செல்வதும், உடற்பயிற்சி கூடங்களை தேடுவதும் நம்மை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்காகவே என்பதையும் தாண்டி நம்மில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவோ என்று தோன்றுவதுண்டு.

இதையும் படியுங்கள்:
காதலர் தினம் – வெள்ளை பன்றிக்குட்டியும் இஞ்சி மிட்டாயும்!
Motivation Image

அழகு நிரந்திரமில்லை எனினும் அது பல வழிகளில் நம் வாழ்விலும் நம்முடைய நம்பிக்கையிலும் விளையாடி கொண்டிருக்கிறது என்பது உண்மை தான்.

இருப்பினும் சுய அன்பு என்பது எவ்வளவு முக்கியம். நம்மை அடுத்தவருடன் ஒப்பிடுவதும், நம்மை நம்முடனேயே ஒப்பிட்டு வெறுத்து கொள்வதும் எவ்வளவு கொடுமையான விஷயம்.

இன்று காதலர் தினத்தில், உங்களை நீங்களே காதலியுங்கள். உயரமோ, குட்டையோ, கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, எடை அதிகமோ நம்முடைய அழகையும், நம்முடைய உடலையும் நாம் காதலிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

‘இப்படியெல்லாம் நீ இருப்பதை மாற்றி கொண்டால் நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்பவர்களை விடுத்து நீ எப்படியிருந்தாலும் உன்னை பிடிக்கும் என்று சொல்லும் காதலே சிறந்ததாகும். உங்களை சுற்றி அதுபோன்ற மக்களை வைத்துக்கொள்ளுங்கள்.

மைலி சைரஸ்...
மைலி சைரஸ்...

பிரபலமான பாடகியான மில்லி சைரஸின், ‘பிளவர்ஸ்’ என்னும் ஆங்கில பாடலில் வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.

எனக்கு நானே பூக்கள் வாங்கி கொடுத்துக்கொள்வேன்.

மணலிலே என் பெயரை எழுதிக்கொள்வேன்.

என்னுடன் நானே மணிக்கணக்கில் பேசிக்கொள்வேன்.

என்னை நானே நடனமாட அழைத்து செல்வேன்.

என் கைகளை நானே பற்றிக் கொள்வேன்.

ஏனெனில் நீ என்னை காதலிப்பதை விட, நான் என்னை அதிகமாக காதலிக்கிறேன்.

‘நாம் அழகாக இருக்கிறோம்’ என்பதை மற்றவர்கள் நம்மை பார்க்கும் விதத்தின் மூலம் தெரிந்து கொள்ள தேவையில்லை. நம்மை நாம் பார்க்கும் விதத்திலேயே மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். நம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்கலாம், அதையெல்லாம் கடந்து நம்மை அழகாக நாம் நினைக்கும் போது,  இந்த உலகத்தின் கண்களுக்கும் நாம் அழகாகவே தோன்றுவோம்.

காதல், அன்பு ஆகியவை இன்னொருவர் நமக்கு கொடுக்கும்போது தான் அதற்கு மதிப்பு என்றில்லை. நம்மிடமிருந்தே அதை உருவாக்கலாம். அதனால், உங்களை நீங்களே காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள், இன்றிலிருந்து!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com