தொடர் முயற்சிகளால் திறக்கப்படும் இறைக் கதவுகள்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

ரு மனிதன் சாதாரண மனிதனாக இருப்பதும், அவன் சாதனையாளராக மாறுவதும் அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளை பொறுத்தே  அமைகிறது. எவ்வளவு தோல்விகளை சந்தித்த போதிலும் கூட யார் ஒருவன் விடாமல் முயற்சி செய்கிறானோ அவனே வெற்றியாளராக மாறுகிறான்.

வாழ்க்கையில் நம் இலக்குகளை அடைய நாம் எடுக்கும் முயற்சிகளை பொறுத்தே  இறைவனின் அனுகிரகமும் நமக்கு கிடைக்கிறது. எளியவர் வலியவராவதும், வலியவர் எளியவராவதும் அவரவர் எடுக்கும் முயற்சிகளை பொறுத்தே. உங்கள் உழைப்பு எவ்வளவு தூரம் வலிமையானதாக இருக்கிறதோ அதைப் பொருத்தே இறைவன் உங்களுக்கு நன்மை செய்வார்.

ஒரு காட்டில் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து வந்தன. அது கோடைகாலமாக இருந்ததால் காட்டில் திடீரென தீ பற்றிக் கொண்டது. உடனே எல்லா பறவைகளும் விலங்குகளும் அந்த காட்டை விட்டு வெளியேறக்கூடிய முயற்சிகளில் ஈடுபடத்  தொடங்கின.

அந்தக் காட்டில் ஒரு சிட்டுக்குருவியும் இருந்தது. அந்த சிட்டுக்குருவியோ, எல்லோரும் காட்டை விட்டுப் போகும் போதும் கூட,  இவ்வளவு நாள் நமக்கு அடைக்கலம் கொடுத்தது இந்த காடு, ஒருவேளை நாம் இந்த தீயை அணைக்காவிட்டால், பின்  நாட்களில் நமக்கு இடம் கொடுத்த காடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடுமே என நினைத்து வருத்தப்பட்டது. 

எல்லா விலங்குகளும் வெளியேறிக் கொண்டிருந்தபோதும் சிட்டுக்குருவிக்கு மட்டும் அந்த காட்டை விட்டு செல்லவே மனம் வரவில்லை.

அது மெதுவாக பறந்து சென்றது. தூரத்தில் ஒரு குளத்தில் சிறிதளவு நீர்  இருப்பதை பார்த்தது. மெதுவாக அந்த நீரை தன் அலகால் கொண்டு வந்து எரியும் தீயில் ஊற்றியது. மற்ற மிருகங்களும் பறவைகளும் சிட்டுக்குருவியை பார்த்து கேலி செய்தன. 

உருவத்தில் மிகச் சிறியதாக இருக்கக்கூடிய நீ உன்னுடைய சிறிய அலகால் நீரை எடுத்துக் கொண்டு வந்து  இந்த தீயை அணைத்து விடுவாயா? வீண்  முயற்சி செய்யாமல் காட்டை விட்டு வெளியேறி உயிர் பிழைத்துக் கொள்ள வழியை பார், என்று அறிவுரை கூறின.

இதையும் படியுங்கள்:
கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவ விடாதீர்கள்!
Motivation article

ஆனால் சிட்டுக்குருவியோ யார் பேச்சையும் பொருட்படுத்தாமல் தனது முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தது. சிட்டுக்குருவியின் முயற்சியை வருண பகவான் மேலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார். சிட்டுக்குருவியின் தொடர் முயற்சிக்கும் அதனுடைய நம்பிக்கைக்கும் உயிர் கொடுக்க  விரும்பினார். ஒரே சொடக்கில் காடு முழுவதும் மழையை பொழிய செய்தார். மழையால் காடு முழுவதும் பரவியிருந்த நெருப்பு அணைந்தது. அனைத்து மரங்களும் காப்பாற்றப்பட்டன. சிட்டுக்குருவியோடு சேர்ந்து மற்ற விலங்குகளும் இறைவனுக்கு நன்றி செலுத்தின.

எனவே நீங்களும் கூட ஒரு போதும், நாம் எளியவர்தானே, நம்மால் என்ன முடியும், நம்மால் எப்படி இவ்வளவு பெரிய காரியங்களை சாதிக்க முடியும்  என குறைவாக எண்ணாதீர்கள்.

வாழ்க்கை என்னும் சக்கரம் நம்பிக்கை எனும் அச்சானியை  பற்றிக் கொண்டுதான் சுழல்கிறது. உங்களது முயற்சிக்கான பலனையும், உங்களது நம்பிக்கைக்கான உயிரையும் கொடுப்பதற்கு இறைவன் காத்துக் கொண்டிருக்கிறார்! தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்! நிச்சயம் இலக்குகளை அடைய முடியும்! நம்புங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com