வாழ்க்கையை அணுகுவதில் இரண்டு வழி முறைகள் உள்ளன. ஒன்று அதன் போக்கிலேயே வாழ்வது. இன்னொன்று திட்டமிட்டபடி வாழ்வது.
ஒருவர் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்படுவார். அவருக்கு வங்கி வேலை கிடைத்தது. அந்த உத்தரவை குருநாதர் படம் முன் வைத்து வணங்கினார். சிலர் சூழ்ச்சியால் வேலை பறிபோனது. அந்த உத்தரவையும் குருநாதர் படம் முன் வைத்தார். எந்தவித கவலையும் இன்றி தன் வீட்டை கொத்தனார் மூலம் மாற்றி அமைத்தார். அந்த அனுபவத்தைக் கொண்டே சிறிய கட்டட வேலை ஒப்பந்தங்களை எடுத்து வங்கியில் வாங்கிய சம்பளம் அளவு சம்பாதித்தார்.
ஒரு கதை: காட்டில் 3 மரங்கள் பேசிக்கொண்டன. முதல் மரம் "என்றாவது நான் வெட்டப்பட்டால் நிச்சயம் பெரிய கப்பலாவேன். அப்படியில்லை என்றால் ஒரு பணக்காரக் குழந்தையின் தொட்டிலாக ஆவேன்" என்றது.
இரண்டாவது மரம் "நான் வெட்டப்பட்டால் நவரத்னங்களும் தங்கக் கட்டிகளும் சுமக்கும் பெரிய கப்பலாவேன்" என்றது.
மூன்றாவது மரமோ "நான் வெட்டப்படுவதையே விரும்பவில்லை. இந்த மலை உச்சியில் இதுதான் சொர்க்கம் என தெய்விகத்தைச் சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் என்றது.
ஒருநாள் மூன்று மரமும் வெட்டப்பட்டது. பணக்கார குழந்தையின் தொட்டிலாக விரும்பிய மரத்தை தச்சர் ஒரு மாட்டுக் கொட்டிலில் கன்றுக்குட்டியைக் கட்ட கொட்டிலாக்கினார். மரமோ வருத்தப்பட்டது. ஆனால் ஒரு அற்புதத் திருநாளில் யேசு பிறந்த போது அந்தக் கொட்டிலில் கிடத்தியபோது அதற்கு பேரானந்தம். இத்தனை பெரிய பேறு கிடைத்ததே என மகிழ்ந்தது.
கப்பலாவேன் என்ற இரண்டாவது மரம் சாதாரண மீன்பிடி படகாகியது. அதன் கனவுகள் நொறுங்க, கண்ணீர்விட்டது. ஆனால் அந்த படகில் யேசு கால் வைத்து ஏறி பயணித்தார். போதனைகள் புரிந்தார். மரம் மெய் மறந்து "அட, நான் நினைத்ததை விட நடந்தது சிறப்பானது." என்று மகிழ்ந்தது.
மூன்றாவதாக வெட்டிய மரத்தை தச்சர் குற்றவாளிகளை சுமக்கும் சிலுவையாக ஆக்கப்பட்டது. "ஐயோ குற்றவாளிகளை சுமக்கப் போகிறேனே" என அழுதது. ஆனால் இயேசு இதில் அறையப்பட்டார். காலம் காலமாக அந்தச் சிலுவை விடுதலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அது சொர்க்கத்தின் திறவு கோலாகிவிட்டது.
பாருங்கள். அவை திட்டமிட்டபடி வாழ்க்கை நடவாது எண்ணியதை விட மேலான பெருமையையே அவை பெற்றன. காந்தி மகாத்மா ஆக கனவு கொண்டாரா? திட்டமிட்டாரா? மிக எளிய குடிசையில் மேசை நாற்காலி கூட போட்டுக் கொள்ளாமல் ஆசிரமம் நடத்தினார். கழிவறை கழுவினார். தானே தன் துணிகளை துவைத்தார். ஆனால் அவரது ஆஸ்ரமம் வந்த பெரிய பணக்காரராக ரவீந்த்ரநாத் தாகூர் காந்தியின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு "நீங்கள் மகாத்மா. மகாத்மா" என பிரகடனம் படுத்தினார். மகாத்மா என்று தாகூர் முன்மொழிய, பிரபஞ்சத்தால் வழிமொழியப்பட்டார்.
பட்டுப்புழு தன் பாதுகாப்புக்காக கூட்டைக் கட்டிக் கொண்டு உள்ளே வரத் திட்டமிடுகிறது. பாவி மனிதர்கள் அந்த கூட்டினை பட்டு நூலுக்கான அதைக் கொன்று போடுகிறார்கள்
கூடு பாதுகாப்பு ஏற்பாடா? அல்லது மரணவாசலா? இரண்டும்தான் என்கிறது உலகம். எல்லா விதிக்கும் எதிர் விதியும் உண்டு என்று புரிந்தால் சந்தோஷம்.