
நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன சில சமயங்களில் நமது எண்ணமானது பலிதம் ஆகிறது. சில நேரங்களில் அதுவே தோல்விகளில் முடிகிறது. அந்த நேரம் நாம் தோல்விகண்டு துவளக்கூடாது. தோல்விக்குப் பின்னால் வெற்றியின் பாதை வேகமாய் வருகிறது, அதில் நாம் இடம்பிடிக்காமல் விட்டுவிட்டால் நமது மனம் சோா்வடைந்தல்லவா போய்விடும். அப்போது நம்மை இந்த உலகம் உதாசீனம் செய்ய காத்திருக்குமே!
நாம் நமது உடலை பலமாக்க, சீராக்க நிறைய நடப்பதுபோல மனதை பலமாக்க நடந்ததை மறந்து விடவேண்டும்.
நமது செயல்பாடுகளை, தோல்விகளை எதிா்மறை எண்ணங்களோடு விமர்சனம் செய்யும் திண்ணை தூங்கி வீரர்களிடம் ஒரு கண்ணாய் இருப்பதே நல்லது.
கவிஞர் தனது பாடல்வரிகளில்,
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என தெளிவாக குறிப்பிட்டிருப்பாரே!
ஆக, நமது எண்ணம் நன்றாக இருந்தால், தெய்வம் நமக்கு துணையிருப்பாரே! சொா்க்கமும், நரகமும் வானத்தில் இல்லை, நாம் வாழும்போது நம்மால் தோ்ந்தெடுக்கும் வாழ்க்கையில்தான் உள்ளது. நமது எண்ணமும் செயலும் நன்றாக அமையவேண்டும்.
உலக வழக்கில் ஒரு சொலவடை உண்டு, எண்ணம்போல வாழ்வு என நாட்டுக்கோட்டை செட்டியாா்கள் சொல்வதாக வாக்கியம் வருமே!
ஒருநபர் நன்றாக வாழ்கிறாா் என்பதை அறிந்து நமது கேமரா மனதானது அவரைப்பாா்த்தவுடன் அய்யோ இவர் மேலும் மேலும் நன்றாக வாழ்கிறாரே என படம் பிடிக்கிறதே! அந்த நிலையில் நமது கெடுமதி புத்தியான பொறாமை எண்ணமானது அவரைச் சென்றடையாது. மாறாக நமது காலடியிலேயே கிடக்குமே!
ஒரு செயலைச் செய்வதற்கு முன் நாம் வைக்கும் லட்சியமும், உயர்வான எண்ணங்களுமே நமக்கு வெற்றியைத்தேடித்தரும்.
அப்போது நம்மை பிடிக்காத சில அனுகூல சத்ரவாதிகள் நமது முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் பல தொல்லைகளைத் தருவாா்கள். அந்த நேரம் நாம் தளராத உறுதியோடு பாரதி சொன்ன பாடல்வரிகள்போல மனதில் உறுதிவேண்டும், வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும். என்ற நோ்மறை சிந்தனையோடு தோல்வி கண்டு துவளாமல் நாம் கொண்ட லட்சியத்தை கை விடாமல் துணிந்து எழவேண்டும்.
அப்போது நமது நல்ல எண்ணமானது நமக்கு ஏதோஒரு வகையில் உதவி புாியுமே! இதைத்தான் திருவள்ளுவர் திருக்குறள்,
அதிகாரம் 62ல், ஆள்வினையுடைமையில்.
"வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீா்ந்தாாின் தீா்ந்தன்றுஉலகு" எனக்குறிப்பிட்டிருப்பாா்.
அவர் சொன்ன வாக்கியங்களுக்கேற்ப நல்ல எண்ணமும் நல்ல செயலுமே நமது வாழ்வின் வெற்றியை தீா்மானிக்கவல்ல பொிய சக்தியாகும். அதை உணர்ந்து நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கட்டும் என்ற நம்பிக்கையோடு வாழ்வதே சிறப்பானது.
நல்ல ஒழுக்கம், நல்ல சிந்தனை, நல்ல மனம், நல்ல பண்பாடு இவைகள் நமக்கு கவசம் போன்றதே! அதையே உறுதியாக கடைபிடித்து வாழலாமே.