மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல. யார் வேண்டுமானாலும் அதை உடைத்தும் போட்டு போவதற்கு. அது நம்மோடு எப்போதும் இருக்க வேண்டிய மூச்சுக் காற்று. மகிழ்ச்சியை நாம் மூச்சுக் காற்றாக வைத்து நிரப்பினால் அதை நாம் நழுவ விடவும் மாட்டோம். தொலைக்கவும் மாட்டோம். ஆனால் மகிழ்ச்சியைக் கையில் பிடித்து வைக்க நினைத்தால் அது விரலிடுக்கில் நழுவித்தான் செல்லும்.
சின்னஞ்சிறு குருவி ஒன்று ஒருநாள் கனவில் அழகிய உலகம் கண்டது. விழித்ததும் தான் கண்ட கனவு உலகத்துக்கு எப்படியாவது போக எண்ணி ஒரு மரத்தில் கீழ் அமர்ந்திருந்த ஜோதிடரை விவரம் சொல்லி வழி கேட்டது. அவர் எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன். ஆனால் விலையாக ஒரு சிறகு நீ கொடுக்கணும் என்றார்.
அவர் சொன்னவழியே சென்றது. பிறகு வழி தெரியவில்லை. அங்கு வந்த பாம்பிடம் கேட்டது. அது நான் தெரிந்த வரை சொல்கிறேன். ஆனால் ஒரு இறகு வேண்டும் என்றது.
இப்படியே அற்புத உலகின் மகிழ்ச்சியை அனுபவிக்க வழி சொன்னவர் களுக்கெல்லாம். சிறகு கொடுத்து முடிவாக இது கனவில் கண்ட உலகத்தைக் கண்டது. அதற்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. யோசித்தபோது சந்தோஷத்தைத்தேடி அலைய சிறகுகளை வழி நெடுகிலும் பிய்த்துக் கொடுத்ததால் முடமாகி பறக்க முடியாமல் போனது புரிந்தது. மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பாமல் அது எங்கேயோ வெளியில் இருப்பதாக நினைத்துத் தேடுவதைத்தான் இக்கதை உணர்த்துகிறது.
மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் பலரும் சந்தோஷம் என்ற தேடலில் உண்மையில் தங்களிடம் இருக்கும் சந்தோஷங்களை தாங்கள் அறியாமையே இழக்கிறார்கள். நாம் என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சூழலில் மகிழ்ச்சி குறைவது இயல்பு.
அந்த நேரத்தில் மகிழ்ச்சியை சுரக்க வைக்கும் என்டார்ஃபின் ஹார்மோன்கள் அதிகரிக்கும் வகையில் நம் செய்கைகள் அமைந்தால் போதுமானது. குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டு பேசுவது, பிடித்த இடங்களுக்குச் செல்வது, பிடித்த உடை உடுத்துவது, என்று எல்லா சந்தோஷ் சிறகுகளை பலர் வெட்டி வீசுகிறார்கள். கடைசியில் எதை மகிழ்ச்சி என்று நினைத்துத் தேடினீர்களோ அது கிடைக்கும்போது மனம் உடல் தளர்ந்து கிடைத்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதைச் செய்தால் சந்தோஷமாக இருப்பேன். அது கிடைத்தால் சந்தோஷமாக இருப்பேன் என்று எண்ணாமல் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருக்கப் பழகுங்கள். உண்மையான சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒரு தொற்று.
மகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால்தான் மற்றவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும். எனவே மகிழ்ச்சியை உங்களுக்குள் நிரப்புங்கள். அதைப் பிறர் உடைக்கும் அளவுக்கு பலூன் காற்றாக வைக்காமல் உங்களால் மட்டுமே கையாள முடிந்த, நீங்கள் முழுமையாக உணர்ந்து அனுபவிக்கக் கூடிய மூச்சுக் காற்றாக நிரப்புங்கள். மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல. அது சுவாசக் காற்று. அதை முழுமையாக சுவாசிக்கத் கற்றுக் கொண்டால் எப்போதும் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.