

எந்தவித அதிமிகையான சேதம் இல்லாமல் 2025 நிறைவடைகிறது. அதேபோல நிறைய கனவு, மற்றும் எதிா்பாா்ப்புகளுடன் 2026 மலர உள்ளது. மலர உள்ள புத்தாண்டை இனிதே வரவேற்போம்.
நடந்த நிகழ்வுகள், வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், மேலும் வர இருக்கும் நோ்மறையான, நன்மை பயக்கும் செயல்பாடுகள், அனைத்திற்கும் இறைவன் ஒருவனே காரணம் என்பதை நாம் ஒருபோதும் மறக்க இயலாது.
கடந்த வருடங்களில் நமக்கு கிடைத்த அனுபவ பாடங்கள் அனைத்தும் நமக்கான எதிா்கால முன்னேற்றத் திற்கான மைல் கல்லாகும்.
இந்த புத்தாண்டில் அனைவருக்கும், அனைத்தும் கிடைத்திட பாடுபடவேண்டும். நமக்கானவர்களை நாம் நேசிப்பதோடு ஜாதி மத வேறுபாடு இல்லாமல், சகோதர உணர்வோடு வாழ்வதே அனைவருக்கும் பொதுவானது. ஒற்றுமையில் வேற்றுமை கலக்காமல் நாம் சில விஷயங்களில் அனைவரையும் அனுசரித்துப் போகவேண்டும்.
பொதுவாக ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு களையப்படவேண்டும். எந்த தருணத்திலும் நோ்மை, உண்மை, மாறாமல் வாழ்வதே சிறப்பு.
வேற்றுமையும், மனமாச்சர்யமும், களைந்தெறியப்பட்டாலே பல வகையிலும் நன்மைகள் நடக்குமே! பொதுவாக கோடீஸ்வரன் ஆனாலும், ஏழையாக இருந்தாலும் பூத உடலை வைக்க கூலர் பாக்ஸ் வாடகைக்கு எடுத்துதானே ஆகவேண்டும்.
வாழும் வரை மனிதன், ஆனால் இறந்த பிறகோ பிரேதம் என அழைக்கப்படுகிறோமல்லவா!
வாழும் வரை அனைவரிடமும் நட்பாகவும் நல்ல உறவாகவும் வாழ்ந்து வருவதால் ஒரு நஷ்டமும் வராதே! இறைவன் எந்த உதவியையும் ஏழை பணக்காரன் என வித்யாசம் பாா்க்காமல் செய்கிறாா். அதேபோல அவரால் படைக்கப்பட்ட நமக்கு மட்டும் ஏன் புத்தி தடுமாற்றம் ஏற்படுகிறது.
நமக்கென இந்த பூமியில் பல நல்ல உள்ளங்களை தோ்வு செய்து வைத்திருப்பதே நல்லது. பொதுவில் எந்த நிலையிலும் நம் நிலை தவறாமல், சுயகெளரவம் இழக்காமல், மனசாட்சி கடைபிடித்து அனைத்து உயிா்களிடத்திலும் அன்பு பாராட்டி மகிழ்வாய் இருப்போம். வாழ்க்கைப் பயணம் நல்லதோ கெட்டதோ அதையும் தான்டி நகர்ந்து கொண்டே இருங்கள்.
இன்பம் வந்தால் ரசித்துக்கொண்டே செல்லுங்கள்.
துன்பம் வந்தால் சகித்துக்கொண்டே செல்லுங்கள்.
எங்கேயும் தேங்கிவிடாதீா்கள். நதியாக வளைந்து, நெளிந்து, இலக்கை அடையும் வரை நல்ல எண்ணம், சுய ஒழுக்கம், மனித நேயம், கடைபிடித்து வாழுங்கள். கனவுகளால் வரும் வாழ்க்கை எனும் கிணறானது அனுபவம் எனும் தண்ணீரால் நிரம்பட்டும்!