
சிரத்தையும் தன்னம்பிக்கையும் நாம் எப்பொழுதும் ஒரு செயலில் காட்டினால் நமக்கு தோல்வி என்பது கிடையாது எப்பொழுதுமே வெற்றிதான் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.
ஒரு மிகப் பிரபலமான கம்பெனியில், ஒரு சமயம் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக தகுதியும், திறமையும், பொறுப்புமிக்க ஓர் அதிகாரி வேண்டும் என்று செய்தித்தாளில் அறிவிப்பு செய்திருந்தனர். இதைக் கண்ட வேலையற்ற எண்ணற்ற இளைஞர்கள் அவ்வேலைக்கு விண்ணப்பம் செய்தனர். அந்த கம்பெனி தகுதியானவர் களைத் தேர்ந்தெடுத்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பி இருந்தது. நேர்முகத்தேர்வில் பலர் கலந்து கொண்டனர்.
நேர்முகத் தேர்வில் பல பிரிவுகள் இருந்தன. நூற்று ஐம்பது பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்த கம்பெனி கடைசியாக இருபது பேரைத் தேர்வு செய்தது. இனி அந்த இருபது பேரிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு கம்பெனிக்கு இருந்தது. எப்படித் தேர்ந் தெடுப்பது என்பதை நிர்வாகம் கூடி ஒரு முடிவுக்கு வந்தது.
குறிப்பிட்ட நாளில் அந்த இருபது பேரும் வந்து சேர்ந்தனர். கம்பெனி வரவேற்பறையில் அவர்கள் அமரவைக்கப் பட்டனர். தாங்களே அறிவாளி, தங்களுக்கே அந்த வேலை கிடைக்கும் என்று பேசிக் கொண்டனர்.
ஒரு சிலர் தங்களை மற்றவர்கள் சற்றுக் கூடுதலாக மதிப்பிட வேண்டும் என்று கருதி தங்கள் செல்போனை எடுத்து உரத்த குரலில் மற்றவர்களுடன் அரட்டை அடித்து தங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
அந்த வரவேற்பறை முழுக்க இரைச்சலும், கூச்சலும், சிரிப்பும், மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
இதிலிருந்து சற்று ஒதுங்கித் தன்னந்தனியே அமைதியாக அமர்ந்திருந்தான் ஒரு இளைஞன். அவன் யாரிடமும் பேசவில்லை. எந்தவிதப் பந்தாவும் செய்யாமல் இருந்தான். அந்த நேரத்தில் மிக மெல்லிய குரலில் அங்கிருந்த ஒலி பெருக்கியில், அந்தச் செய்தி ஒலிபரப்பாயிற்று.
ஒரே அமளி துமளியும் சிரிப்புமாக இருந்த அந்த அறையில், அந்த ஒலிபரப்பு ஏற்பட்டதை ஒருவரும் கவனிக்கவில்லை. ஆனால், அந்த இளைஞன் அந்த ஒலிபரப்பைக் காதைக் கூர்மையாக்கிக் கேட்டான்.
இந்த அறிவிப்பானது யார் காதில் விழுகின்றதோ, அவர்தான் இந்த அலுவலகத்தில் மிகவும் கவனமானவர் பொறுமையானவர், எதையும் கருத்தொருமித்துக் கேட்பவர் என்பது உண்மையாகிறது. அவர்களே இவ்வேலைக்கு தகுதியானவர் என்று நிர்வாகம் கருதுகிறது.
அப்படிப்பட்டவர் யாராக இருந்தாலும் உள்ளே வந்து வேலையில் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ளலாம். மறுமுறை இந்த அறிவிப்பு செய்யப்படமாட்டாது.
மற்றவர்களின் காதுகளுக்கு எட்டாத இந்த அறிவிப்பை அந்த இளைஞன் மட்டும் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். பின் அவன் தன் இருக்கையைவிட்டு எழுந்து உள்ளே சென்று, தன் பணி நியமன உத்தரவைப் பெற்றுக் கொண்டான்.
சிரத்தையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கு வெற்றி எப்போதுமே உண்டு.