நம் வாழ்வில் வெற்றியைப் பெற வேண்டுமாயின் கடின உழைப்பு முக்கியம் தான். ஆனால், அதைவிட முக்கியம் புத்திசாலித்தனமாக செயல்படுவது. இல்லையெனில் கடின உழைப்பும் வீணாகி விடும். புத்திசாலித்தனத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறது இந்தப் பதிவு.
வாழ்வில் பலருக்கும் உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் பலர் இங்கு உழைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், முன்னேறுவதில் தான் சிக்கலே இருக்கிறது. உழைத்துக் கிடைக்கும் பணத்தில் தங்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே முக்கால்வாசி செலவாகி விடுகிறது. இந்நிலையில், முன்னேறுவதைப் பற்றி பலரும் பெரிதாக சிந்திப்பதில்லை.
இன்றைய நிலையில் அனைவருமே உழைக்கின்றனர். இருப்பினும் ஒருசிலர் மட்டுமே வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைகின்றனர். மற்றவர்கள் இன்னமும் முன்னேற்றம் அடையும் வழியைத் தேடிக்கொண்டு தான் இருக்கின்றனர். மாதச் சம்பளம் வாங்கும் பணியாளர்கள் பலரும் கடினமாக உழைக்கின்றார்களே தவிர, தம்முடைய உழைப்பை எப்படி முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என அறியாமல் இருக்கின்றனர். முன்னேற்றத்திற்கு உழைப்பு மட்டுமே போதாது; புத்திசாலித்தனமும் அவசியமாகும்.
நமது இலக்கைத் தீர்மானிக்காத வரையில், நாம் அடுத்தவரின் கனவை நிறைவேற்ற ஊழியர்களாக பணியமர்த்தப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய கனவை நோக்கி நீங்கள் பயணிக்கும் போது தான், உங்களின் கடின உழைப்புக்குத் தகுந்த ஏற்றம் கிடைக்கும். இல்லையெனில் மாத இறுதியில் சம்பளம் மட்டுமே கிடைக்கும். அதற்காக மாதச் சம்பளம் வாங்குவோரை குற்றம் சொல்லவில்லை. பணிபுரிந்து கொண்டே தங்கள் வாழ்வை முன்னேற்றும் வழியைக் கண்டறிந்து புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.
புத்திசாலித்தனத்தை எடுத்துக் கூற உதாரணத்திற்கு...
ஒரு மாட்டை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்றால், கயிறு கட்டி இழுத்துச் செல்வார்கள். சிலசமயம் மாடு உடனே வந்துவிடும். சிலசமயம் உடன் வர மறுத்து முரண்டு பிடிக்கும். உழைப்பாளிகளாக சிந்திப்பவர்கள் பலரும் மாட்டை எப்படியாவது இழுத்துச் செல்ல நினைப்பார்கள். ஆனால், புத்திசாலித்தனமாக சிந்திப்பவர்கள் மாட்டிற்கு தீவனத்தைக் கொடுத்துக் கொண்டே மாட்டின் மீதே அமர்ந்து செல்வார்கள். இந்த இடத்தில் கடின உழைப்பை விட புத்திசாலித்தனம் சிறப்பாக வேலை செய்தது. இதைப் போன்று தான் எங்கு எதைப் பயன்படுத்த வேண்டுமோ, அதனைப் பயன்படுத்தினால் விரைவில் வெற்றியை ஈட்டி விடலாம்.
ஒவ்வொருவருக்கும் சிந்திக்கும் திறன் மாறுபட்டு இருக்கும். ஒரு பிரச்னையை தீர்க்கும் இடத்தில் கூட புத்திசாலித்தனம் வெளிப்படும். ஒரு வேலையை எப்படி மிக எளிதாக செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுத்துவதும் புத்திசாலித்தனம் தான். பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் அதனை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டாலே, பல சிந்தனைகள் நமக்குள் தோன்றும்.
இதுவரையில் நீங்கள் கடின உழைப்பை மட்டுமே நம்பியிருந்தால், இனி புத்திசாலித்தனமாக செயல்படவும் கற்றுக் கொள்ளுங்கள்.