நம்பிக்கை வையுங்கள் குழந்தைகள் மீது!

motivation image
motivation imagepixabay.com

ன் மகளுக்கு எல்கேஜி படிக்கும் போதிலிருந்து ஒரு பழக்கம் உண்டு. பள்ளி விட்டு வந்ததும் அன்றன்றைய வீட்டுப்பாடங்களை எழுதிவிட்டு, ஆசிரியர் நடத்திய பாடங்களை படித்து விட்டுத்தான் மற்ற வேலைகளை கவனிப்பாள். தினசரி படிப்பதால் பரீட்சைக்கு என்று பிரத்யேகமாக படிப்பதற்கு எதுவும் இருக்காது. ஆதலால் தாராளமாக வெளியில் விளையாட அனுப்பி விடுவேன். அங்கு பார்ப்பவர்கள் எல்லாம் உங்கள் அம்மா படி என்று கூற மாட்டாளா? எப்பொழுதும் விளையாடிக்கொண்டே இருக்கிறாயே? என்று கூட கேட்பார்கள். அதற்காகவெல்லாம் நாங்கள் வருந்தியதே இல்லை. 

அதேபோல் தான் பெரிய வகுப்புகள் வரவர ஆசிரியர் நடத்துவதை குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டும், அதிலிருந்து புத்தகத்தில் தான் படித்ததை குறிப்பு எடுத்துக் கொண்ட விஷயங்களை நன்றாக தெளிவாக்கிக் கொண்டும் படிக்க அமருவாள். எதையும் புரிந்து படிப்பதால் சீக்கிரமாக படித்து முடித்து விடுவாள். பரிட்சைக்கு திருப்பி பார்ப்பதும் எளிதாக இருக்கும். 

இதே போல் பி. இ வரை படித்து முடித்தாள். எம்பிஏ படிக்கும் பொழுது நாளைக்கு பரீட்சை என்றால் இன்றைக்கு வலது கை விரல்களில் டீ கப் க்ளாஸ் குத்தி பரீட்சை எழுத முடியாதபடிக்கு ஆகிவிட்டது. அப்பொழுதும் தனக்கு பாடம் நடத்திய லக்சரரையே பரீட்சை எழுத வைத்து, இவள் சொல்ல சொல்ல அவர் எழுதும்படி ஆகிவிட்டது. என்றாலும் பதற்றப்படாமல் டாக்டரிடம் சென்று கட்டு போட்டுக்கொண்டு வந்து பரீட்சை எழுதி முதல் மூன்று ரேங்கிற்குள் வந்து தேர்ச்சிப் பெற்றாள்.

இதெல்லாம் அன்றன்றைய பாடங்களை அவ்வப்பொழுதே படித்து முடித்து விடுவதால் ஏற்பட்ட நற்பயன்கள் என்று தான் சொல்ல வேண்டும். சேர்த்து வைத்து படித்தால் அழுத்தமும், குழப்பமும் அதிகமாகத் தோன்றும். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் முடிவெடுக்க முடியாமல் திணறுவார்கள்.

மேலும் சிறு வயதில் இருந்தே நாளைக்கு காலை 9 மணிக்கு பரீட்சை என்றால், இன்று மதியம் ஒரு மணிக்கு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பிடித்த காரியங்களில் ஈடுபடுவாள். டிவி பார்ப்பாள். டான்ஸ் ஆடுவாள். விளையாடுவாள். எது வேண்டுமானாலும் செய்வாள். நானும் படி,படியென்று கூறமாட்டேன். மனஸை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொண்டு பரீட்சைக்கு செல்வதால் படித்தது எதுவும் மறக்காமல் நன்றாக எழுதி விட்டு வருவாள். இன்று உயர்ந்த பணியில் இருக்கிறாள். 

ஆதலால்  பரிட்சைக்கு படிக்கும் மாணவ மாணவியர்களே தினந்தோறும் படியுங்கள். படித்ததை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எழுதி எழுதி பார்த்து படியுங்கள். கணக்குகளைப் போட்டுப் பார்த்து பதிவு செய்து கொள்ளுங்கள். அறிவியல் வரைபடங்களை அழகாக வரைய கற்றுக் கொள்ளுங்கள். மேப் போன்ற விஷயங்களை எந்த நாடு எங்கிருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பரீட்சைக்கு  முதல் நாளே பரிட்சைக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டிய அத்தனை பொருட்களையும் ஒரு பையில் எடுத்து வைத்து விடுங்கள். கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், பேட் என்று தேடிக் கொண்டிருக்க வேண்டாம். 

படிக்கும்போது தனியாக அமர்ந்து எந்த இடத்தில் எப்படி படித்தோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். புரியாததை நன்றாக புரியும் வரை படியுங்கள். வெறுமனே மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொண்டு படித்தால் .பரீட்சை எழுதுவது எளிது .படித்ததும் மறக்காது. மனப்பாடம் செய்வதும் ஈஸியாக முடியும். மார்க் வாங்குவதும் சுலபம். 

குறிப்பாக சிறுவயதில் இருந்தே வீட்டுப் படங்களை மாத்திரம் செய்து வைத்துவிட்டு, அப்புறமாக படித்துக் கொள்ளலாம் என்று விளையாட போகாமல், பாடத்தையும் படித்து முடித்துவிட்டு, தனக்குப் பிடித்த காரியங்களில் ஈடுபடுங்கள். அது எல்லா நேரத்திற்கும் உதவும். எந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்கும் அது உறுதுணையாக இருக்கும். 

 பெற்றோர்களின் கவனத்திற்கு;

குழந்தைகள் படிக்கும் பொழுது எதையும் தொணதொணக்காமல் அவர்கள் விருப்பத்திற்கு படிக்க விடுங்கள். தூங்கும் நேரத்தில் தூக்கம் வந்தால் நன்றாக தூங்க விடுங்கள். தோழிகளுடன் சேர்ந்து படிக்கும் பொழுது அரட்டை அடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் தான் நேரம் விரயமாகும். அவரவர் வழியில் அவரவர் படிக்கட்டும். ஒவ்வொருவரும் படிக்கும் விதமும், நேரமும் மாறுபடலாம். அதைப் புரிந்து கொண்டு, அதற்கு உறுதுணையாக இருங்கள் போதும். பிள்ளைகள் நன்றாகவே படிப்பார்கள். நலமுடன் பரீட்சை எழுதுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com