
வாழ்க்கையைப் பற்றி நாம் அதிகமாகவெல்லாம் சிந்திக்க வேண்டாம். அது மிகவும் எளிமையான கோட்பாடுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. அதைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிடும்.
நாம் தொடர்ச்சியாக செய்து வரும் செயல்களில் சிறு மாறுதல்களைக் கொண்டு வரும் போதும், அல்லது இதுவரை நாம் செய்யாத செயலை புதியதாய் செய்ய முயற்சிக்கும் போதும், நம் வாழ்வில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுகிறது. இது நமது வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு நம்மை கொண்டு செல்கிறது.
நீங்கள் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் வேலையை திடீரென்று விட்டு விட்டு புதியதாக ஏதேனும் முயற்சிக்கும் போது உங்கள் வாழ்க்கை அப்படியே வேறு தளத்திற்கு மாற்றப்படுகிறது.
அங்கே நீங்கள் புதிய அனுபவங்களைப் பெற முடியும்.
அங்கே உங்களுடைய விதி வேறு மாதிரியாக செயல்படும்.
நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கலாம், துன்பமும் கிடைக்கலாம்.
ஆனால் முற்றிலும், இதுவரை வாழாத வாழ்க்கை முறையை வாழத்தொடங்கி இருப்பீர்கள்.
இப்படித்தான் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒவ்வொரு தளங்களாக மாற்றம் பெறுகிறது. உங்களுக்கு புரியும்படி கூற வேண்டும் என்றால்,
உங்களுக்கு குடிப்பழக்கம் இல்லை எனில், நீங்கள் குடித்தால் என்னவாகும் என்று நினைத்து பாருங்கள். உங்களுடைய மன நிலையும் பழக்க வழக்கங்களும் முற்றிலுமாக மாறி விடும் அல்லவா.
நீங்கள் நீண்ட நாட்களாக காதலித்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் என்ன ஆகும்? அதன் பின்னர் நடக்கவிருக்கும் விஷயங்களை நம் மனம் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கும். அங்கே புதிய வாழ்க்கையை நீங்கள் வாழத் தொடங்குவீர்கள். அதே போன்றுதான்,
ஒருவர் தன் வேலையை விடும் போதும், புதியதாய் வேலைக்கு செல்லும் போதும்.
ஒருவர் வெற்றி பெறும்போதும், தோற்கும் போதும்.
ஒருவர் காதலிக்கும் போதும், காதலை முறிக்கும் போதும்.
ஒவ்வொரு உயிரும் பிறக்கும் போதும், பிரியும் போதும்.
மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கமானது ஏற்படுகிறது. இது சிலருக்கு நன்மை பயக்கும் சிலருக்கு தீமை பயக்கும். அது அவரவர் கடந்து வந்த வாழ்க்கையின் புரிதல்களைக் கொண்டே அமையும். மேலும் வாழ்க்கையின் பல புதிய புரிதல்கள் நீங்கள் புதிய தளங்களுக்கு நகர்ந்தால் மட்டுமே கிடைக்கும்.