
இந்த உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் பணக்காரர்களாக பிறப்பதில்லை. தாங்கள் முன்னேற பல வழிகளை யோசித்து உழைத்துத் தான் அவர்கள் பணக்காரர் ஆகிறார்கள். ஆசை, முயற்சி, நம்பிக்கை, தொழில் முறை அறிவு மற்றும் நேர்மையுடன் செயல்படும் எந்த ஒரு சாதாரண மனிதனும் பணக்காரனாக முடியும். அதற்கான வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மூன்று விதமான மனிதர்கள்:
1. முதல் வகை மனிதர்கள்: மனிதர்களில் மூன்று விதமுண்டு. முதல் வகை மனிதர்கள் எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிக்க மாட்டார்கள். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க பயப்படுவார்கள். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளுக்கு மற்றவர்களையோ அல்லது சூழ்நிலையோ குறை கூறுவார்கள். வாழ்க்கையில் வளர்ச்சி இல்லாமல் எப்போதும் ஒரே நிலையில் இருப்பார்கள்.
2. இரண்டாவது வகை மனிதர்கள்: வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவார்கள். ஆனால் சில தோல்விகளை சந்திக்கும் போது அவர்கள் மனம் சஞ்சலப்பட்டு நம்பிக்கையை இழக்கிறார்கள். சில முயற்சிகளுக்குப் பிறகு கைவிடுகிறார்கள். தங்கள் கனவுகளை துரத்தி அவற்றுக்காக போராடாமல் வாழ்க்கையில் கிடைத்ததை வைத்து திருப்தியடைகிறார்கள்.
3. மூன்றாவது வகை மனிதர்கள்: இவர்கள் பல தோல்விகளை சந்தித்த பிறகும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வார்கள். தவறுகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். தங்களது முறைகளை மாற்றுகிறார்கள். வெற்றி பெறும் வரை தங்களது முயற்சியை ஒரு போதும் விடமாட்டார்கள். பெரும்பாலான பணக்காரர்களும் வெற்றிகரமான மனிதர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். விடாமுயற்சி, கற்றுக் கொள்வதில் விருப்பம், சவால்களை தைரியமாக எதிர்கொள்வது ஆகியவையே ஒருவரை பணக்காரராகவும் வெற்றியாளராகவும் மாற்றும் முக்கியக் காரணிகள்.
பணக்காரராக தேவையான விஷயங்கள்:
1. சாதாரண மனிதர்கள் யார் வேண்டுமானாலும் பணக்காரராக முடியும். அதற்கு முதலில் செய்ய வேண்டியது மனதின் எண்ணத்தை மாற்றுவது தான். மிகவும் ஏழ்மையான அல்லது சாதாரண நிலையில் இருக்கும் எந்த மனிதனும் தற்போதைய தன்னுடைய பொருளாதார நிலைமையை வைத்து தான் பணக்காரனாக முடியுமா என்ற சந்தேகத்தை முதலில் விலக்க வேண்டும்.
2. உறுதியான மனநிலையைப் பெற வேண்டும். எத்தனை விதமான இடர்ப்பாடுகள் வந்தாலும் நான் பணக்காரனாகியே தீருவேன் என்கிற மனநிலை உள்ள மனிதன் தான் நினைத்ததை சாதிக்க முடியும்.
3. பணக்காரனாவதற்கு வாழ்க்கையில் குறுக்கு வழிகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் விலக்கிவிட்டு நேர்வழியில் செல்வது மிக முக்கியம். அரசு வேலை, வணிகம், தொழில் முதலீடு போன்ற பல வழிகள் உள்ளன.
4. தான் பணக்காரனாக வேண்டும் என்கிற தீவிரமான ஆசை இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். தன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். தொழில் முறை அறிவைக் கற்றுக்கொண்டு நேர்மையுடன் செயல்பட்டால் பணக்காரனாகலாம்.
5. தலை விதியை நம்பாமல் முயற்சியை தொடரும் மனிதர்கள் நிச்சயம் ஒருநாள் பணக்காரர் ஆவார்கள்.
6. விரைவாக பணக்காரனாகலாம் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். விரைவான திட்டங்கள் எப்போதும் நேர்வழியில் இருக்காது. நியாயமாக பணக்காரனாவதற்கு நல்ல நேர்த்தியான உழைப்பு, திட்டமிடல், புதிய யோசனைகள் மற்றும் முயற்சிகள் தேவை.
7. தன்னால் முடியுமா என்கிற சந்தேகத்தை உதற வேண்டும். தன் முயற்சியில் தோற்று விடுவோமா என்கிற பயத்தையும் விலக்க வேண்டும். முயற்சியில் தோல்விகள் வந்தாலும் அவற்றை வெல்ல வேண்டும். சாதாரண மனிதன் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை உருவாக்க முடியும். தன்னுடைய அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும். தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
8. பணக்காரனாகியே தீருவேன் என்கிற திடமான நம்பிக்கை, திட்டமிடல், தொடர்ந்த செயல்பாடு ஆகியவை அவசியம். தன்னுடைய தொழிலில் நல்ல கவனம் செலுத்தி அதில் முன்னேற முடியும். அதே சமயத்தில் நல்ல முதலீடுகளை ஏற்படுத்தி அதில் வருமானம் வரும் வழியையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழிகளை கடைபிடிக்கும் மனிதர்கள் பணக்காரர் ஆவது உறுதி.