சிறிய யோசனையும் பெருத்த பயன்பெற உதவும்!
மும்பையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.
ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பலர் அந்த சத் சங்கத்தில் கூடி விவாதிப்பார்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம் என்று. பஜனைகள் செய்வார்கள். ஒன்றாக கூடி பிரார்த்தனை செய்வார்கள். தங்களால் முடிந்த உதவிகளை சமூகத்திற்கு செய்வார்கள், குறிப்பாக நலிந்தவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்.
அங்கு பங்கு பெற வருபவர்கள் பல தரப்பட்ட மக்கள். விரும்பி வந்து சேவை செய்தனர். ஒவ்வொரு வாரமும் எண்ணிக்கையில் அதிகமாக கூடினார்கள்.
ஒரு வாரம் ஒரு இளைஞன் அளித்த யோசனை பற்றி விவாதித்தனர்.
யோசனை மிகவும் எளிதாக தோன்றியது. சிலருக்கு நகைப்பை உண்டாக்கியது. சிலர் இது என்ன பெரிய யோசனை என்றும் எண்ணினார்கள். தயக்கத்துடன் அந்த யோசனையை அமுல் படுத்த ஆரம்பித்தனர்.
முதலில் அந்த யோசனைக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. முதலில், சிலர் பங்கு பெற்றனர். போக போக பலர் ஆர்வம் காட்டினார்கள்.
சில மாதங்களுக்கு பிறகு அந்த யோசனை கூறிய இளைஞன் நான்கு புதிய நபர்களை அழைத்து வந்து அவர்களது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள சொன்னான், அங்கு கூடியிருந்தவர்களிடம்.
வந்த நால்வரும் எளிமையாக இருந்தனர். முதலில் தயங்கினாலும் அவர்களில், ஒரு இளம் மங்கை விளக்கினாள். அவர்கள் பெற்ற, பெரும் பயன்களை கேட்டவர்கள் கலங்கினர். பலர் முன் வந்து தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவினர். அவர்கள் பணம் வாங்க மறுத்து விட்டனர். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டினர். அந்த இளைஞன் அவர்களுக்கு எடுத்து கூறி அந்த பணத்தை பெற்றுக் கொள்ள செய்தான்.
அப்படி என்ன யோசனை செயல் படுத்தப் பட்டது?
அந்த இளைஞன் கூறிய யோசனை:
அவர்கள் கிராமத்தின் அருகில் வசிக்கும் மிக்க எளிய, ஏழை 20 குடும்ப நபர்கள் காகிதங்களை கூழாக்கி அதன் மூலம் அழகான பொருட்கள் செய்து விற்று அதன் வருமானத்தில் வாழ்வாதாரம் நடத்துகின்றனர். அவர்களுக்கு தேவையான பழைய, சிறிய காகிதங்கள் கூட வாங்குவது கடினமாக உள்ளது.
இந்த சத் சங்கதிற்கு வருபவர்கள் அவர்கள் பயணம் செய்யும் பொழுது வாங்கும் பஸ் டிக்கெட்டுக்களை வீணாக்காமல் இங்கு வந்து கொடுத்தால் அவற்றை ஒன்றாக சேகரித்து நான் அவர்களிடம் அளிப்பேன். அவர்களுக்கு மிகவும் உதவும் காகிதத்தால் ஆகிய கைவினைப் பொருட்கள் தயார் செய்ய.
'சிறு துளி பெரு வெள்ளம்' என்ற பழமொழி இங்கு சாலப் பொருந்தும். மேலும், பயன் படுத்திய சிறிய காகிதத்தை மறு சுழற்சி பயனுக்கு அளிக்கும் செயலில் நம்மை அறியாமலேயே நாமும் பங்கு பெற்றோம், என்ற செயலும் நமக்கு மன நிறைவை அளிக்கும் என்றும், அன்று கூறினான்.
தயக்கத்தோடு செயல் படுத்தி, பயன் பெற்றவர்கள் மூலம் கேட்ட பொழுது அனைவரும் மனம் மகிழ்ந்தனர். தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியுடனும் பாடு பட்ட அந்த இளைஞன், எல்லோருடைய பாராட்டையும் பெற்றன்.
எப்படி பட்ட சிறிய யோசனையையும் சோதித்து பார்த்தால், பயன் பெற முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.