மகிழ்ச்சியோடு இருக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை சிரிக்க வேண்டும்?

மார்ச் 20 - உலக மகிழ்ச்சி தினம்!
Motivation Image
Motivation Imagepixabay.com

கிழ்ச்சியே மனித வாழ்வின் உந்து சக்தி. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பாரமாகிவிடும். எண்ணங்களின் வலிமைக்குக் காரணமும் மகிழ்ச்சியின் மனநிலைதான்.

மகிழ்ச்சியாக ஏன் இருக்க வேண்டும்? காரணம் மகிழ்ச்சியே ஆரோக்கியத்தின் ஆணிவேர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒருவரின் மனநிலைக்கும் அவரது மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதில் மகிழ்ச்சி குறையக் குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். எப்போதும் சந்தோஷமாக இருங்கள். உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் துடிப்புடன் செயல்படும் என்கிறார்கள். எதையும் பாசிட்டிவாக எதிர்கொண்டு வாழும் நேர்மறையாளர்களே 85ம் அதற்கு மேலும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

மகிழ்ச்சியாக இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் மகிழ்ச்சியை தொலைத்தவர்களுக்கு நோய்களும், நோய் தொற்றுகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு இதய நோய்கள், உயர் ரத்தம் அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறைவு. மகிழ்ச்சி மனநிலையில் வாழ்கிறவர்கள் மகிழ்ச்சியற்ற மனநிலையில் வாழ்கின்றவர்களைவிட சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள். காரணம் அவர்கள் பொதுவாக ஆரோக்கியமான உணவு முறைகளையும், சுய ஒழுங்கு முறைகளையும் கடைப்பிடிப்பதும்தான்.

மகிழ்ச்சியான மனநிலை கொண்டவர்களுக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுகிறது, உடலில் எலும்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கிறது. ரத்தத்தில் பிளாஸ்மா அடர்த்தி சீராக இருக்கிறது.

என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தால் இருக்கலாம். அதற்கு சில முயற்சிகள் செய்தால் போதும். உற்சாகத்துடன் இருக்க அக்கறை கொண்டவர்கள் அதை தூண்டும் முயற்சிகளில் இறங்கவேண்டும். அதற்கு நேர்மறை எண்ணங்களையும், செயல்களையும் செய்யவேண்டும். அதை பயிற்சிகள் மூலம் அடையலாம்.

உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை தேடி வெளியே கொண்டு வாருங்கள். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எது நேர்ந்தாலும் சரி, அதிலிருந்து வெளியே வரும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள். தெளிவான முடிவுகளில் அன்றாட நிகழ்வுகளை எதிர்கொள்ளுங்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால்தான் அடுத்த முன்னேற்றம் நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்.

எந்த கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிபணியாமல் இருங்கள். அதற்கு முன்னால், உங்கள் ‘மைன்டு செட்’டை மாற்றுங்கள். எதையும் மாற்ற முடியும் என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். உங்களை சுற்றி நேர்மறை சிந்தனை உள்ளவர்களை வைத்துக்கொள்ளுங்கள். எதிர்மறை சிந்தனையாளர்களை விலக்கி வையுங்கள்.

உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முதலில் சின்னச்சின்ன லட்சியங்களை முடிவுசெய்து அதை அடையுங்கள். உங்கள் மீது உங்களுக்கு மதிப்பு ஏற்படும்.

உங்கள் வெற்றிகளை தினமும் கொண்டாடுங்கள். உங்களின் வெற்றி பாதையில் தொடர்ந்து நடைபோட அந்த உற்சாகம் உதவும். ஒருபோதும் வெற்றி மகிழ்ச்சிக்கு காரணமல்ல. மகிழ்ச்சிதான் வெற்றிக்கு காரணம்.

மன இயல்பு மாற்றத்திற்கு உதவும் மாமருந்து சிரிப்பு. ஒரு நாளைக்கு 20 முறை சிரியுங்கள் அல்லது புன்னகை புரியுங்கள். அதுவே உங்களை மகிழ்ச்சி மனநிலைக்கு எளிதாக மாற்றும் எளிய வழி என்கிறார் பிரிட்டிஷ் மனவியல் நிபுணர் பால் மைக்கேல்.

இதையும் படியுங்கள்:
தீராத வாய்வுத் தொல்லையா? அவசியம் நீங்கள் இதை எடுத்துக்கொள்ளுங்கள்!
Motivation Image

நமது உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள் நம்மை மகிழ்ச்சி மனநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. அந்த ஹார்மோன்களின் சீரான சுரப்பிற்கு சில பயிற்சிகளும், சில முயற்சிகளும் தேவை. அவற்றில் சில, அன்றாடம் இளம் சூரிய ஒளியில் அரைமணி நேரம் உடற்பயிற்சி, ஆழ்ந்த மூச்சு பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகள் .நிம்மதியான 8 மணி நேர தூக்கம், மனதிற்கு பிடித்த விளையாட்டு அல்லது ஹாபிகளில் கொஞ்ச நேரம் செலவிடுதல் .குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழித்தல். வாரம் ஒரு முறை மசாஜ் செய்து கொள்தல்.எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மனம் விட்டு பேசி மகிழ்ச்சி மனநிலையில் இருப்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும் அதுதான் நம் ஆரோக்கியம் காக்கும் மகிழ்ச்சி தெரபி. உலகின் மிகப்பெரிய விஷயம் உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது. அதைவிட மிக உயர்ந்த விஷயம் மற்றவரின் மகிழ்ச்சிக்கும் நீங்கள் காரணமாக இருப்பது. நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து, உங்களைச் சார்ந்தவர்களையும் மகிழ்சியாக வைத்துள்ளீர்கள் என்றால்  நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com