

வானத்தில் செயற்கைக் கோள்கள் (ராக்கெட்) எப்படிப் பறக்க விடப்படுகின்றன என்பதைக் கவனித்தால், ஒரு குறிப்பிட்ட உயரம் வரை வாயு அழுத்தத்தினால் செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட உயரத்தை அது சென்றடைந்தவுடன் இன்னொரு விசை வேலை செய்து, செயற்கைக்கோளை வேண்டிய உயரத்திற்குச் செலுத்துகிறது. செயற்கைக்கோள் சென்றடைய வேண்டிய நிலையைப் படிப்படியாகத்தான் எட்டுகிறது. இது பல கட்டங்களில் நிகழ்கிறது.
இலக்கைச் சென்றடையவும் நாம் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு எளிதில் வெற்றி பெறலாம். மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு மலைக்கவேண்டிய அவசியமில்லை. சிறிய இலக்குகளை அல்லது குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை முதலில் அடையவேண்டும். பின்னர் ஓர் இலக்கை அடைந்தவுடன் அதையே தளமாக்கிக் கொண்டு அடுத்ததொரு இலக்கை உருவாக்கி அதையும் சுலபத்தில் அடைந்துவிடலாம். மொத்தத்தில் இலக்கு இல்லாமல் வாழ்க்கை முன்னோக்கி நகருவதில்லை. இலக்கே இல்லாத வாழ்க்கை செக்குமாடு வாழ்க்கையாக, ஒரே வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
எது அடையக்கூடியதோ அதுவே இலக்காகிறது. நம்முடைய முழு ஆற்றல் என்ன என்று நமக்குத் தெரியாமலிருக்கலாம். அதனால் எதை அடைய முடியுமென்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அதை முதலில் இலக்காக்கிக் கொண்டு உங்கள் முயற்சிகளைத் தொடங்குங்கள். இலக்கு இல்லாமல் வாழ்க்கைச் செயல்பாடுகள் அமைவதில்லை.
பெரிய மரத்துண்டு ஒன்று இருக்கிறது. அந்த மரத்துண்டுக்குள் எத்தனையோ வடிவங்கள் மறைந்திருப்பதாகக் கருதலாம். அந்த வடிவங்கள் வெளிப்பட வேண்டுமானால், தச்சன் அந்த மரத்துண்டை வைத்து வேலை செய்வது அவசியமாகிறது. ஆனால் தச்சன் உளியைப் பிடித்து வேலையைத் தொடங்குமுன், அந்த மரத்திலிருந்து என்ன வடிவத்தை அவன் செய்ய விரும்புகிறான் என்று தீர்மானித்த பிறகே வேலையைத் தொடங்கவேண்டும். குதிரை வடிவத்தைச் செய்ய விரும்புகிறானா, யானை வடிவத்தைச் செய்ய விரும்புகிறானா என்பதை அவன் முதலில் தீர்மானிக்க வேண்டும்.
எதைச் செய்வது என்கிற முடிவுக்கு வராமல் உளியைக் கையிலெடுப்பதில் அர்த்தமில்லை. மரத்துண்டு இருக்கிறது. உளி இருக்கிறது என்பதற்காக, எந்தவிதமான நோக்கமுமின்றி மரத்துண்டை சிதைத்துக்கொண்டே போனால், முடிவில் ஒன்றும் மிஞ்சாது. உழைப்பும் வீணாகிப்போகும். இலக்கை நோக்கிக் குறிவைத்தால் அதில் தவறக்கூடாது.
மகாபாரதத்தில் ஒரு சம்பவம். பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனர்களுக்கும். துரோணர்தான் வில்வித்தைக் கற்றுக் கொடுத்தார்.
அவர் ஒரு சமயம் தொலைதூரத்திலுள்ள மரத்தின்மீது அமர்ந்திருக் கும் ஒரு பறவையைச் சுட்டிக் காட்டி அதன் வலது கண்ணை நோக்கிக் குறிவைத்து அம்பு எய்த வேண்டும் எனச்சொன்னார். மாணாக்கர்களை ஒவ்வொருவராக அழைத்துக் குறிவைக்கச் சொல்லி, 'இப்போது என்ன தெரிகிறது?' என்று கேட்டார். ஒவ்வொருவரும் மரம் தெரிகிறது, கிளை தெரிகிறது. இலை தெரிகிறது என்றார்கள். அர்ச்சுனனைக் குறிவைக்கச் சொன்னப் போது உனக்கு என்ன தெரிகிறது?' எனக் கேட்டார். 'பறவையின் வலது கண்ணைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை'யென்று அர்ச்சுனன் பதில் சொன்னான்.
குறிவைத்த இலக்கைத் தவிர வேறு எதுவுமே அர்ச்சுனன் கண்களுக்குத் தெரியவில்லை. அதாவது இலக்கைத்தவிர வேறு எதிலும் அவன் கவனம் சிதறவில்லை. இந்தக் கதை உணர்த்துகின்ற பாடத்தினை, இலக்கைச் சென்று அடைய விரும்புகின்றவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்வது நல்லது. இலக்கை நிர்ணயித்த பிறகு அதை அடைவது மட்டும்தான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது.