ஒருவனுக்கு எப்பொழுது மகிழ்ச்சி வரும் தெரியுமா? தான் மன நிறைவுடன் இருக்கும் போதுதான். சிலருக்கு எவ்வளவு பணம் வந்தாலும் சரிதான் மகிழ்ச்சி என்பதே வராது. இன்னும் வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.
குறைவான செல்வமும் நிறைவான வாழ்க்கையும் இருந்தால் தானே மகிழ்ச்சி வரும். மகிழ்ச்சி என்பது நம் கையில்தான் இருக்கிறது. மனம் என்ன நினைக்கிறதோ மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம் என்றால் நமது சிறு முயற்சிக்கும் கிடைத்த வெற்றியே நமக்கு மகிழ்ச்சி தந்துவிடும்.
ஏதாவது ஒன்றைப் படைத்துக் கொண்டிருப்பவர் களால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒன்றும் செய்யாமல் தன் புலன்களை எல்லாம் துருப்பிடிக்க விட்டு சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு எதிலும் சலிப்புதான் ஏற்படும். பணத்தைவிட மகிழ்ச்சியில் ஒரு பெரிய வசதி இருக்கிறது. மகிழ்ச்சியை எவரும் கடன் கேட்க மாட்டார்கள். அந்த மகிழ்ச்சியிலுமே பெருமகிழ்ச்சி எது தெரியுமா? நாம் ரகசியமாக செய்த ஒரு நல்ல காரியத்தை பிறர் கண்டுகொள்ளும்போது நமக்கு ஏற்படுகிறதே அதுதான் என்கிறார் ஒரு அறிஞர்.
கல்லூரி மாணவனான ஐன்ஸ்டீன் தன் கல்லூரியில் நடக்கும் நாடகத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தான். அதற்கான தேர்வில் கலந்து கொண்டான். வீடு திரும்பிய அவனிடம் டேய் தம்பி நாடகத்தில் உனக்கு என்ன வேடம் கிடைத்தது? என்று அவரது தந்தை கேட்டார்.
அதற்கு அவன் கூட்டத்தில் அமர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கு என்றான். கவலையுடன் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவரது தந்தை.
அப்பா ஏன் கவலைப்படுறீங்க? வாழ்க்கையில் எது கிடைத்தாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டியது என்று நீங்கள் தானே சொல்லி இருக்கீங்க என்றான். பார்த்தீர்களா! இந்த மனம் உங்களிடம் இருந்தால் நீங்களும் அதிர்ஷ்டசாலிதான் இப்படித்தான் நம் மனத்தை நாம் பக்குவப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தோம் என்றால் எதுவுமே நமக்கு மகிழ்ச்சியாக கிடைக்கும் மகிழ்ச்சியாக தெரியும்.