
கேலி கிண்டல் செய்பவர்களை அவர்களின் பேச்சுகளுக்கோ, செயல்களுக்கோ மதிப்பளிக்காமல் புறக்கணிப்பதன் மூலம் எளிதாக சமாளிக்கலாம். கேலி கிண்டல் செய்பவர்களை பயமின்றி எதிர்கொள்ளப் பழகவேண்டும். அவர்கள் சொல்வதை பொருட் படுத்தாமல் நம்முடைய வேலையை பார்த்துக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இப்படிப்பட்டவர்களுடன் பேசி, எதிர்த்து வாதிட்டு நம் நேரத்தை வீணடிப்பதைவிட வேறு நல்ல செயல்களுக்கு நேரம் ஒதுக்குவது நல்லது.
சிலர் வேண்டுமென்றே நம்மை கேலி செய்து நம்முடைய தன்னம்பிக்கையை தகர்க்க பார்ப்பார்கள். இப்படி மறைமுகமாக செயல்படுபவர்களின் செயல்களைப் புரிந்துகொண்டு அவர்களை விட்டு ஒதுங்கி விடுவதுதான் நல்லது. அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
சிலர் நம்மை இழிவு படுத்துவதாகத் தோன்றினால் அவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே வீண் பேச்சு வேண்டாமே என்று கூறி விட்டு தள்ளிச் சென்று விடுவது நல்லது. இதனால் அவர்களின் தேவையற்ற வார்த்தைகள் நம் மனதை அலைக்கழிக்காமலும், புண்படுத்தாமலும் இருக்கும்.
குடும்பத்தில் நான்கு பேர்களுக்கு எதிரில் நம்மை கேலி கிண்டல் செய்பவர்களை சிறிதும் தயங்காமல் "இப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று திட்டவட்டமாக சொல்லி அவர்களிடம் இருந்து விலகிச் சென்று விட நான்கு பேர்களுக்கு எதிரில் அவமானப்பட வேண்டி இருக்குமே என்றெண்ணி கேலி கிண்டல் செய்வதை தவிர்த்து விடுவார்கள். சிலர் நாசூக்காக சொன்னால் புரிந்துகொள்வார்கள். வேறு சிலரோ இப்படி முகத்தில் அடித்தாற்போல் சொன்னால் திரும்பவும் அந்த செயலை செய்ய தயங்குவார்கள்.
கேலியை எதிர்கொள்வது என்பது சவாலான விஷயம்தான். அது மாதிரியான சமயங்களில் அமைதியாக இருக்க முயற்சி செய்யலாம். கோபத்துடன் பதில் அளிப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும். அதற்கு பதில் அந்த இடத்தில் லேசாக நகைச்சுவையை பயன்படுத்தி நாம் அவர்கள் கிண்டல் செய்வதால் பாதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.
அப்படி இருந்தும் சிலர் திரும்பத் திரும்ப நம்மை புண்படுத்தும் வகையில் கேலி செய்து சீண்டினால் உறுதியாக இருந்து அவர்களுடன் ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அத்துடன் கேலி செய்யும் நபர் நாம் மதிக்கும் ஒருவரா என்பதை எண்ணிப் பார்த்து இல்லையென்றால் அவர்களின் கருத்தை நிராகரிப்பதுடன் அவர்களையும் உங்கள் நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிடுங்கள்.
வேலை செய்யும் இடத்தில் சகப் பணியாளர்களால் கேலி செய்யப்பட்டால் அதை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாராவது நம்மை கிண்டல் செய்து சிரித்தால் பயம் கொள்ளவேண்டாம். நாமும் அவர்களுடன் சேர்ந்து சிரித்து விடுவது நல்லது. அப்படி இல்லாமல் அவர்களின் செயல்களுக்கு எதிர் செயல் செய்தால் நம்மை கோமாளி ஆக்கிவிடுவார்கள். கேலி செய்வது கேலி செய்பவர்களின் பாதுகாப்பின்மையே பிரதிபலிக்கிறது. எனவே அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.