மகிழ்ச்சி என்பது அடுத்தவர் கையில் இல்லை: உங்களுக்குள் இருக்கும் நிம்மதியை மீட்டெடுப்பது எப்படி?

சந்தோஷம் வெளியுலகில் இல்லை; ‘என்ன வாழ்க்கைடா இது’னு புலம்புற மனசிலேதான் இருக்குது
True Happiness Tips
True Happiness TipsImage credit: AI
Updated on

"சந்தோசமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டால், எதிரில் இருக்கும் பெரும்பாலானவர்களின் பதில், "என்ன வாழ்க்கைடா இது?" என்பதாகத்தான் இருக்கும். ஏழை பணக்காரனை பார்த்தும், பணக்காரன் ஏழையை பார்த்தும், "சந்தோஷமாக இருக்கின்றனர்" என மாறி மாறி நினைத்துக் கொள்கின்றனர்.

அடுத்தவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று அவர்களிடம் உள்ள பொருளை வைத்து தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் பொருள் உங்களிடம் வந்தால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்களா?

உண்மையில் சந்தோஷம் எங்கிருந்து வருகிறது என ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற உங்களது எண்ணத்தில் தான் அது இருக்கிறது.

ஒரு விஷயத்தில் உள்ள பிரச்சனைகளை பார்க்க தெரிந்தவர்களுக்கு, அதில் இருக்கும் சந்தோசத்தை பார்க்க முடிவதில்லை; ஏனெனில், அதுதான் உங்களின் பழக்கமாகவே இருக்கிறது.

ஐந்து நண்பர்கள் இணைந்து ஒரு சோகமாக திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதில் இருக்கும் ஒருவர் மட்டும் சந்தோசமாக, அதில் இருக்கும் சினிமாத் தனத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான்.

கவலைக்கான காரணங்களை தேடித் தேடி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட, சந்தோசமாக இருக்க வேண்டும் என ஒருவர் நினைப்பது ஒன்றும் பேராசை கிடையாது. அடுத்தவருடைய நிம்மதியை கெடுத்து தான் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைப்பதுதான் முற்றிலும் தவறு.

Auto Ride
Auto RideAI Image

ஒரு ஆட்டோவில் சவாரி செய்து விட்டு, ஆட்டோக்காரர் கேட்கும் பணம் உங்களுக்கு அதிகமாக தெரிகிறது. "ஏன் இவ்வளவு கேட்கிறாய்?" என்றவுடன், "பெட்ரோல் விலை என்ன விலை விக்கிது தெரியுமா?" எனக்கேட்ட ஆட்டோக்காரரின் கேள்வியால் உங்களுடைய சந்தோசம் தொலைந்து விடுகிறது.

"எனக்கா பெட்ரோல் விலை தெரியாது!" என அவருடன் சண்டைக்கு நின்று, உங்களது அறிவை மெய்ப்பித்தால் ஒன்றும் ஆகி விடப் போவதில்லை; உங்களுடைய சந்தோச மனநிலை கெட்டது தான் மிச்சம். ஏனெனில், அடுத்த சவாரியை ஏற்றிக்கொண்டு ஆட்டோக்காரர் பறந்து விடுவார்.

ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என மனதிற்குள் முடிவு செய்து விட்டால், அவரது சந்தோஷத்தை தடுக்க யாராலும் முடியாது. ஆனால், அடுத்தவரிடம் உங்கள் சந்தோசம் இருக்கும் போது உங்களுடைய மகிழ்ச்சி சாத்தியமில்லை.

தனக்குள்ளேயே சந்தோசத்தை வைத்திருப்பவன், அதை வெளியே எங்கேயும் தேடிக் கொண்டிருக்க மாட்டான். குழந்தையின் பேச்சு, ரயில் பயணம், வானம், நட்சத்திரம் இப்படி உலகத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அவனுக்கு சந்தோஷத்தையே கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
பணம், பதவி இருந்தும் நிம்மதி இல்லையா? நிஜமான சந்தோஷம் இருக்குமிடம்!
True Happiness Tips
Happy Family
Happy FamilyAI Image

உங்களுடைய மகிழ்ச்சி அடுத்தவரிடம் இருக்கும் பொழுது, அவர்கள் உங்களது சந்தோஷத்தை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதில் யாரையும் குற்றம் சொல்லி பலன் இல்லை. ஆட்டோக்காரரின் பேச்சுக்கு உங்களது சந்தோசம் கெட்டுவிட்டது என்றால், உங்களுடைய சந்தோஷ சிந்தனை பலமில்லாமல் இருப்பதாகத்தான் அர்த்தம்.

முதலில் ஒரு நாளை தீர்மானித்து, "இன்று நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கப் போகிறேன்" என முடிவெடுத்து கொள்ளுங்கள். அன்று காலை காபி குடிப்பது முதல், நண்பர்களுடன் சந்தோசமாக பேசுவது, நம்முடன் பணிபுரிபவர்களிடம் முக மலர்ச்சியோடு உரையாடுவது, குடும்பத்தினரிடம் சிரித்த முகத்தோடு பேசுவது என சந்தோசமாக அந்த நாளை அனுபவித்து பாருங்கள்.

உங்களைச் சுற்றி இருப்பவர் சந்தோஷமாக இருப்பதை உணரலாம்; கூடவே நீங்களும் சந்தோசமாக இருந்திருப்பீர்கள். ஆகவே, சந்தோஷத்தை உங்களுக்குள் வைத்திருங்கள். அப்படி வைத்திருக்கும் போது, உங்களுடைய சந்தோசத்தை யாராலும் தொந்தரவு செய்து கெடுக்க முடியாது; மற்றவர்களுக்கு சந்தோஷத்தை நீங்களே வாரி வழங்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com