குழப்பமான மனநிலையில் சரியான முடிவு எடுப்பது எப்படி?


How to make the right decision?
Lifestyle storiesImage credit -pixabay
Published on

ரியான முடிவு எடுப்பதில் குழப்பம் இருக்கா? அப்ப சரி! ஒரு முடிவை எடுத்துவிட்டு அதை சரியாக்க முயற்சி செய்யுங்கள். சரியாக வரும். விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையிலேயே ஒரு முடிவை எடுத்துவிட்டு அதற்கான சாதகமான, பாதகமான விளைவுகளை மனதிற்குள் ஒரு லிஸ்ட் போட்டு பிறகு தீர்மானிப்பது சரியாக வரும்.

பொதுவாக நமக்கு டென்ஷன் இருந்தால் சரியான முடிவு எடுக்க வராது. அதனால் முதலில் டென்ஷனை குறைக்க நமக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும். விருப்பமான புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது, நண்பர்களுடன் உரையாடுவது போன்றவை நம் மன அழுத்தத்தை குறைக்கும்.

முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும் பொழுது ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்திருக்க மனம் ஓரளவு தெளிவுடன் இருக்கும். பிறகு சிந்தித்து எடுக்கும் முடிவும் சரியானதாக இருக்கும். சரியான மனநிலை சரியான முடிவுக்கு மிகவும் அவசியம்.

குழப்பமான மனநிலை காரணமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் அழுத்தம் மனிதர்களுக்கு பல இன்னல்களைத் தரும். மனஅழுத்தம் தரும் சூழல்களை தவிர்க்காத பொழுது அழுத்தம் அதிகரித்து பல நோய்களை கொண்டு வரும். சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுபவர்களை மன அழுத்தம் எளிதில் தாக்கும். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என சரியாக கணித்து முடிவு எடுப்பவர்களுக்கு மன அழுத்தம் பெரும்பாலும் உருவாகும் சூழ்நிலை இருக்காது.

அதேபோல் நம்மால் முடியாத ஒரு செயலை "முடியாது" என்று மறுத்து விடும் மனதெளிவும் அவசியம் தேவை. என்னால் முடியும் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அதனை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் ஏற்படும் மன அழுத்தம் ஆபத்தானது. நம்முடைய மனதை திறமையாக கையாளுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
கோபத்தை கோபித்துக் கொள்ளுங்கள்!

How to make the right decision?

எப்பொழுதுமே குழப்பமில்லாத தெளிவான மனநிலையில் இருக்கும் பொழுது எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். எப்படி கலங்கிய குட்டையில் கல்லெறியக் கூடாதோ அதுபோல் குழப்பமான மனநிலையில் இருக்கும்பொழுது நாம் சிந்தனை ஓட்டத்தை தடை செய்யக்கூடாது. அதற்கு பதிலாக அந்த சிந்தனை ஓட்டத்தை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிந்தனைகள் மெல்ல மெல்ல அதனுடைய வீரியத்தை இழந்து பின் குழப்பம் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தெளிவு ஏற்படும்.‌

சரியான முடிவு எடுப்பதில் குழப்பம் இருந்தால் முதலில் அந்த சூழலில் இருந்து வெளிவரப் பாருங்கள். அத்துடன் பிற செயல்களில் உங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். குழப்பத்திற்கு காரணம் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை என்பதை உணர்ந்து நம்மை மூன்றாம் நபராக நினைத்து அந்த மூன்றாம் நபரின் குழப்பத்திற்கு தீர்வு காண்பதைப்போல் அந்தப் பிரச்னையை அணுகினால் சுமுகமான தீர்வு கிடைக்கும்.

என்ன நான் சொல்வது சரிதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com