
தகவல் தொடர்பு திறன்கள், நாம் தகவல்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம், பெறுகிறோம், மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதை வரையறுக்கும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தகவல் தொடர்பு திறன்கள் முன்பை விட மிகவும் தேவையானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. தகவல் தொடர்பு திறனின் தேர்ச்சி பெறுவதற்கு நாம் பேசும் திறனையும், கேட்கும் திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நம்முடைய பொருத்தமான உடல் மொழியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பேசும் திறனில் கவனம் செலுத்துதல்:
வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. சொற்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். எனவே தகவல் தொடர்பு திறனில் தேர்ச்சி பெறுவதற்கு முதலில் நாம் பேசும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பேசும் பேச்சில் உள்ள கருத்துக்கள் தெளிவாகவும், சுருக்கமாகவும் இருக்க வேண்டும். அத்துடன் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்கவும் வேண்டும்.
நம்முடைய கருத்துக்களை கூறும் பொழுது நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வெளிப்படுத்த தயங்க கூடாது. ஒருவருடன் பேசும் பொழுது கண்ணைப் பார்த்து பேசுவது எதிரில் இருப்பவருக்கு நம் கவனத்தையும், ஆர்வத்தையும் காண்பிக்கும். இதனால் கண் தொடர்பு என்பது மிகவும் முக்கியம். அத்துடன் நம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது பொருத்தமான சைகைகளை பயன்படுத்துவதும் நல்ல பலனைத் தரும்.
கேட்கும் திறனை மேம்படுத்துதல்:
தகவல் தொடர்பு திறனில் பேச்சிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமாக மற்றவர்களின் கருத்துக்களை கேட்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் மற்றவர்களின் உணர்வுகள், கேள்விகள், பார்வைகளையும், கவலைகளையும் புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களின் கருத்துக்களை அல்லது கண்ணோட்டங்களை நன்றாக கேட்பதும், தவறான புரிதலை தவிர்க்க தெளிவுபடுத்தல்களை கேட்பதும் நன்மை தரும்.
முழு கவனத்தை செலுத்துவதன் மூலம் நாம் பரஸ்பர மரியாதை உணர்வை வளர்த்துக் கொள்வதுடன், நம்முடைய பேச்சைக் கேட்க உணர்ச்சி ரீதியாக பிறரை தயார்படுத்தவும் முடியும். பேசும்பொழுதும் கேட்கும் பொழுதும் நேர்மறையான அணுகு முறையையும் புன்னகையையும் கொண்டிருப்பது தகவல் தொடர்பு திறனை மேம்படுத்த பெரிதும் உதவும்.
உடல் மொழி:
உடல் மொழி என்பது தகவல் தொடர்பின் ஒரு முக்கிய அங்கமாகும். நாம் எப்படி உட்கார்ந்து இருக்கிறோம் அல்லது நிற்கிறோம், கண் தொடர்பு, சைகைகள் போன்ற நம் உடல் ரீதியான எதிர் வினைகள் மூலம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். தகவல் தொடர்பு திறனில் உடல் மொழியில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். சைகைகள், முகபாவனைகள், கண் தொடர்பு, தோரணை போன்ற உடல் மொழியின் மூலம் நாம் நினைப்பதை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.
எழுத்துத் திறனை மேம்படுத்துதல்:
தகவல் தொடர்பு திறனில் தேர்ச்சி பெற எழுதும் திறன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எழுத்துக்களை சரி பார்த்து எழுத்து பிழை மற்றும் இலக்கண பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாக்கியங்களை நீளமாக எழுதாமல் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதப் பழக வேண்டும். பிறருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். தகவல் தொடர்பு திறனை மேம்படுத்த பல்வேறு விஷயங்களை படிப்பது புரிதலை மேம்படுத்தும். அத்துடன் தொடர்ந்து எழுதுவது நம் எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தும் திறனை மேம்படுத்தும்.
பயிற்சி பெறுவது:
பேசுவதற்கு பயிற்சி செய்யவும், இலக்குகளை நிர்ணயம் செய்து கொண்டு உழைக்கவும், தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ளவும் பயிற்சி செய்வதன் மூலம் தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளலாம். தகவல் தொடர்பு பாணியை வெவ்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். கூட்டங்கள், சமூக நிகழ்வுகள் போன்ற வெவ்வேறு அமைப்புகளில் நம்முடைய தொடர்பு திறன்களை பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடி பயன்பெறலாம். தகவல் தொடர்பு திறன் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து நிபுணர்களின் உதவியுடன் கற்றுக் கொள்ளலாம்.