
ஒரு வேலையை இன்று செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்போம். ஆனால், சில சமயங்களில் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு சூழ்நிலையால் அந்த வேலையை முடிக்க முடியாமல் நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிக்கொண்டே போவது உண்டு. இவ்வாறு வேலைகளைத் தள்ளிப்போடும் பழக்கம் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்னையாகும். இந்நிலையில், தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எப்படி என்பதை இங்கே பார்ப்போம்:
சிறு சிறு படிகளாகப் பிரிக்கவும்: பெரிய வேலைகளைக் கண்டால் ஒரு வித பயமும், சோர்வும் ஏற்படுவது இயல்பு. இதனை தவிர்க்க நம் வேலைகளைச் சிறிய சிறிய பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு செயல்களையும் முடித்த பிறகு மனதிற்கு ஒரு சாதனை செய்த உற்சாக உணர்வு கிடைக்கும். இது அடுத்த கட்ட வேலையைச் செய்யத் தூண்டும்.
திட்டமிடுங்கள்: ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள். தினசரி செய்ய வேண்டிய பட்டியலை (To-do list) தயார் செய்வதால் எது முக்கியம், எதை முதலில் செய்யவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
சரியான நேரத்தைத் தேர்வு செய்யுங்கள்: ஒவ்வொருவருக்கும் ஒரே நேரத்தில் வேலை செய்யும் திறன் இருக்காது. சிலர் காலையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள், சிலர் மாலை, இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அந்த குறிப்பிட்ட நேரத்தில் கடினமான வேலைகளை செய்து முடிக்க முயற்சி செய்யலாம்.
தொடக்கத்தில் கவனம் செலுத்துங்கள்: வேலையைத் தொடங்குவதுதான் மிகவும் கடினமான பகுதி. ஒருமுறை தொடங்கினால், அதை முடிப்பது எளிமையாகிவிடும். வெறும் 5 நிமிடம் வேலை செய்து பார்க்கலாம் என்று மனதில் நினைத்தாலே, வேலையின் ஆர்வத்தினால் அந்த 5 நிமிடங்களும் பல மணிநேரங்களாக மாற வாய்ப்பு இருக்கிறது.
தள்ளிப்போடும் பழக்கத்திற்கான காரணத்தைக் கண்டறியுங்கள்: ஏன் ஒரு வேலையைத் தள்ளிப்போடுகிறீர்கள் என்று யோசித்து பாருங்கள். அது தோல்விக்கான பயமா, ஆர்வமின்மையா, சரியான புரிதல் இல்லாததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை முதலில் கண்டறிய வேண்டும். இவ்வாறு முதலில் காரணங்களை கண்டறிந்தால் அதை சரிசெய்வதற்கான வழியையும் கண்டறிய முடியும்.
மனதை ஒருமுகப்படுத்துங்கள்: இது போன்ற சூழலில் சமூக ஊடகங்கள், மொபைல் நோட்டிபிக்கேஷன் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்ப்பது அவசியம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி அதனை முழுமையாக முடித்துவிட பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் நினைத்த ஒரு சிறிய செயலைக்கூட செய்து முடிக்கும்போது, உலகத்தையே ஜெயித்துவிட்டதைப் போன்ற ஒரு பெரிய சந்தோஷம் கிடைக்கும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தள்ளிப்போடும் பழக்கத்திற்கு இன்றே முற்றுப்புள்ளி வைத்து, இன்றே செய்து முடியுங்கள்.