உழைப்பினால் களைப்படைவதை விட மனிதர்கள் விமர்சனங்களால் அதிகம் நொறுங்கிப் போகிறார்கள். நம்மை பிறர் விமர்சிப்பதை நாம் விரும்புவதில்லை. ஒரு படைப்பு அல்லது செயலையோ சமூகத்திற்கு நாம் வழங்கிவிட்டு பிறகு அதை விமர்சிக்க சமூகத்திற்கு முழு உரிமை உள்ளது. பாராட்டியே ஆகவேண்டும் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்.
பெர்னார்ட் ஷாவிடம் ஒரு எழுத்தாளர் தன் படைப்பைப் பற்றி விமர்சனம் தர வேண்டினார். ஷா அவர்கள் உங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது. சொந்தமானதாகவும் இருக்கிறது என்று வாழ்த்தினார்.
எழுத்தாளருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் என்று தொண்டையை கனைத்து ஷா "சொந்தமான எதுவும் நன்றாக இல்லை. நன்றாக இருந்த எதுவும் உங்கள் சொந்த சரக்கில்லை என்று அவமானப்படுத்தினார்.
விமர்சனங்களைப் புத்தர்போல் புன்னகையால் புறந்தள்ளலாம். மௌனத்தால் மரணமடையச் செய்யலாம். பதிலுக்கு சின்ன கிண்டல் கேலி செய்வது பிழையல்ல. அதுவும் சுகமே.
ஒரு ஹோட்டலில் வடை சாப்பிட்டவர் எரிச்சலுடன் சர்வரைக் கூப்பிட்டு பதினைஞ்சு ரூபாய் போட்டிருக்கே
சின்ன வடையாக இருக்கே என்றார். சர்வர், சார் பெரிசா இருந்து மோசமாக இருந்தால் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க. அதை யோசியுங்க சார் என்றார் அந்த சர்வர்.
விமர்சனங்களை சந்திப்பது முதிர்ச்சியின் அடையாளம். வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றி ஒரு சம்பவம் சொல்வார்கள். அவரை ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். சர்ச்சில் தூங்கிவழிந்தாரே ஒழிய நாடகத்தை ரசிக்கவில்லை. அவரை அழைத்த அன்பர் நீங்கள் நாடகமே பார்க்கவில்லையே எப்படி விமர்சிக்கப் போகிறீர்கள் என்றார். அடடே தூக்கம் கூட ஒரு வகை விமர்சனம்தான். உன் நாடகத்தைப் பார்த்தால் தூக்கம் தூக்கமாக வருகிறது என்று இவ்வளவு நேரம் விமர்சனம் செய்தேன். புரியவில்லையா என்றாராம்.
மேலை நாட்டில் மன்னர் ஒருவர் கவிதை எழுதி எல்லா பத்திரிகைகளும் பாராட்டவேண்டும் என்று உத்தரவிட்டார். பலரும் பயந்து பாராட்டினார்கள். ஒரே ஒரு பத்திரிகை மட்டும் "ஒரு அரசரின் கடமை நாட்டில் தீமைகளும் கெட்டவைகளும் நடக்காமல் தடுப்பது. அதை நிறைவேற்ற மோசமானவை தவறானவைகளை விளக்க வேண்டிய கட்டாயம் மன்னருக்கு உண்டு. மோசமான கவிதையை எழுதி இது போன்ற கவிதைகள் உருவாகக் கூடாது என மக்களுக்கு வழிகாட்டியுள்ள மன்னரை மனமாற பாராட்டுகிறோம்." என்று எழுதியது.
அரசரானாலும் சரி ஆண்டவனே யாராலும் சரி விமர்சனங்களுக்கு உள்ளாவதைத் தடுக்க முடியாது. பிறருக்கு நம்மை விமர்சிக்க உரிமை உண்டு என்பதை ஒப்புக் கொண்டால் மட்டுமே நம் சந்தோஷத்தைக் தக்க வைக்க முடியும். அதைத் தடுக்கவோ மறுக்கவோ அடக்கவோ முனையும் போது நம் சந்தோஷம் பறி போகக்கூடும்.
மிக அழகான உயர்ந்த சிலை செய்திருந்தார் ஒரு சிற்பி. எல்லோரும் அதை பாராட்ட ஒருத்தர் அந்த சிலை மூக்கு மட்டும். சிறிது கோணலாகிவிட்டது என காச்மூச்சென கத்தினார். பொறுமையுடன் ஒரு ஏணியில் ஏறி தன் சிற்றுளி சுத்தியலால் அதை தேய்த்தார். மேலிருந்து கல் தூசி விழுந்து. கீழே குறை கூறியவர் போதும் போதும் மிக அழகாக இருக்கிறது என்று அவர் இறங்கியதும் தழுவிப் பாராட்டினார்.
அவர் போனதும் சிற்பியின் சீடர்கள் இவன் என்ன பெரிய ரசிகனா அவன் பேச்சைக்கேட்டு ஏன் மேலே ஏறி செதுக்கினீர் என்றனர். சிற்பியோ நான் போகும்போதே கல் தூள் எடுத்துப் போய் மூக்கைத் தட்டுவதுபோல் தட்டி தூள் கொட்டுவது போல் கொட்டினேன். அவனது அகங்காரம் திருப்தி அடைந்தது. இதில் எனக்கென்ன நஷ்டம் என்றார். விமர்சனங்களை இப்படியும் சந்திக்கலாம்.