நம்மிடம் உள்ள நேர்மறையான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் நாம், நம் குறைகளை தெரியாமல் பார்த்துக் கொள்வதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். பெரும்பாலான நேரங்களில் எந்த ஒரு மனிதனும் சக மனிதனிடம் வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை. தன்னைப் பற்றிய உண்மையான பிம்பம் வெளியில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் பெரும்பாலும் மற்றவர்களிடம் நாம் பழகி வருகிறோம். ஆனால் அவ்வாறு நாம் ஒரு போலியான பிம்பத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள எண்ணும் போது, நம்மால் எந்த ஒரு செயலிலும் முழுமையாக கவனத்தை செலுத்த முடியாது.
நாம் ஒரு செயலை சிறப்பாக செய்து அதில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு முதலில் நம்மிடம் உள்ள குறைகளை நாம் அடையாளம் காண வேண்டும். குறைகள் என்பது இன்று நீங்களாக ஏற்படுத்திக் கொண்டது என்ற எண்ணம் தான் உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலும் நம்மிடம் இருக்கக்கூடிய சிறு, சிறு குறைகள் என்பது நம்முடைய பரம்பரையாகவோ அல்லது நம்முடைய மரபணுக்கள் வழியாகவோ நமக்கு கடத்தப்பட்டதாக கூட இருக்கலாம்.
நாம் நம்முடைய குறைகளை மிகச் சரியாக அடையாளம் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டு, மாற்றுவதற்கு பயிற்சி எடுத்தால் மட்டுமே நம்மால் சிறப்பான காரியங்களை செய்து வெற்றி வாய்ப்புகளை பெற முடியும். எனவே ஒருபோதும் குறைகளை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள்!
குறைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு அடுத்த பணிகளை செய்யும்போது இதோ இந்த சமையல்காரரின் மகன் வெற்றி பெற்றதை போல நாமும் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெற முடியும்!
ஒரு நாட்டில் கவிச்சக்கரவர்த்தி என்ற பிரபலமான சமையல்காரர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டில் உள்ள மன்னருக்கும் அரசவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கவிச்சக்கரவர்த்தியே சமைப்பது வழக்கம். அவர் கை வைத்தாலே உணவு பண்டங்கள் எல்லாம் அமிர்தமாக மாறிவிடும் அளவுக்கு அவ்வளவு உணவுகளையும் சுவையுடன் சமைக்கும் தனித்துவமான கை பக்குவத்தை அந்த சமையல்காரர் பெற்றிருந்தார்.
இவ்வளவு பெயரும் புகழும் வாய்ந்த அரசவையின் பரம்பரை சமையல்காரருக்கு குணசீலன் என்ற மகன் ஒருவன் இருந்தான். தனக்கு பின் தன்னிடம் உள்ள சமையல் கலை அனைத்தையும் தன்னுடைய மகனுக்கு கற்றுத் தர வேண்டும் என்பதில் கவிச்சக்கரவர்த்தி மிகவும் கவனமாக இருந்தார். அதனால் எப்பொழுதும் சமைக்கும் போதெல்லாம் தன்னுடைய மகனை அருகிலே வைத்துக் கொண்டு மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொடுத்து வந்தார். குணசீலனும் தன் தந்தையிடம் பல்வேறு விஷயங்களை கற்று வந்தாலும் அவர் தந்தை சமைத்தது போல அவனால் உணவில் சுவையை கொண்டு வர முடியவில்லை.
இப்படியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த நாட்டின் இளவரசிக்கு திருமணம் செய்வதற்காக சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே அரசர் பல்வேறு இளவரசர்களை அங்கு வரவழைத்து சுயம்வர நடத்த ஏற்பாடு செய்தார். பல்வேறு நாட்டு இளவரசர்களும் வந்திருந்த வேளையில் கவிச்சக்கரவர்த்தி தன்னுடைய திறமையை காட்டி மிகவும் சுவை நிறைந்த உணவுகளை ஒவ்வொருவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார். அவ்வாறு பரிமாறும் போது தான் சமைத்த சுவை நிறைந்த உணவுகளை எல்லாம் தன் மகன் தான் சமைத்தான் என அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் தனக்கு பின் தன்னுடைய மகனும் அரசவையில் சமையல்காரராக பணியாற்ற முடியும் என நினைத்து அவர் அதற்குரிய திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்திக் கொண்டிருந்தார்.
சுயம்வரத்திற்கான வேலைகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பளு தூக்கும் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த நாட்டு இளவரசி எந்த இளவரசன் ஒருவன் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெறுகிறாரோ அவரையே திருமணம் செய்வதென முடிவு செய்து இருந்தாள். போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின், அங்கு ஒரு பெரிய கொப்பரையில் நீர் நிரப்பப்பட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. அனைவரும் பளு தூக்குதல் என்றவுடன் இரும்பு போன்ற உலோகத்தலான கலவையை தூக்குவதாக இருக்கும் என்று நினைத்திருந்த வேளையில் ஒரு பெரிய கொப்பரை முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டதை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர்!
கொப்பரையில் உள்ள தண்ணீரை சிந்தாமல் மற்றொரு இடத்திற்கு நகர்த்த வேண்டும் என்பதுதான் அங்கு நடத்தப்பட்ட போட்டியின் விதி. இளவரசர்கள் பலரும் சென்று தோற்றுப் போயினர். பலரால் தூக்கவே முடியவில்லை, சிலர் தூக்கும்போதே தண்ணீரை நிறைய சிந்தி விட்டனர். கடைசியாக ஒருவர் கூட சுயம்வரத்தில் வெற்றி பெறவில்லை என்ற நிலை வந்த போது, அங்கு உணவு பரிமாறுவதற்காக வந்த குணசீலன் நடப்பதை கவனித்தான். உடனே சற்றும் யோசிக்காமல் சென்று துளியும் நீரை சிந்தாமல் கொப்பரையை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி வைத்தான்.
அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்ட மன்னர், "நீ மிகவும் நன்றாய் சமைப்பாய் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு எடை கொண்ட ஒரு பளுவை உன்னால் இவ்வளவு எளிதாக நகர்த்த முடியும் என்பது தெரியாது. மிக்க மகிழ்ச்சி" என்று கூறினார்.
அதற்கு குணசீலன், "இல்லை அரசே நீங்கள் ஒன்றை தவறாக புரிந்து கொண்டீர்கள்! உண்மையிலேயே எனக்கு சமையல் கலை அவ்வளவு சிறப்பாக வராது. நீங்கள் ருசி பார்த்ததில் பெரும்பாலானதை எனது தந்தை சமைத்தவைகளே. எனக்கான வாய்ப்புகள் கிடைக்காததால் என்னால் அதனை உங்களிடம் கூற முடியவில்லை" என்று கூறினார்.
அதற்கு அரசர், "உன்னுடைய நேர்மையை நான் மிகவும் பாராட்டுகிறேன். உனக்கே என் மகளை மணமுடித்து தருகிறேன்" என்று கூறி அந்த சமையல்காரர் மகன் குணசீலனுக்கே இளவரசியை மணம் முடித்துக் கொடுத்தார்.
அங்கு வந்த மற்ற இளவரசர்கள் அனைவரும் "தாங்கள் வித்தியாசமாக இப்படி ஒரு பெரிய கொப்பரையில் தண்ணீரை நிரப்பி அதனை தூக்க வைத்த காரணம் என்ன?" என்று கேட்டனர்.
அதற்கு அரசரோ, "வழக்கமாக நடத்தப்படும் பளு தூக்கும் போட்டியின் மூலம் உங்களின் திறமை என்ன? என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியும், ஆனால் இங்கு பங்கேற்ற உங்களின் நிதானத்தையும் சாமர்த்தியத்தையும் தெரிந்து கொள்வதற்காகவே நான் இப்படி ஒரு போட்டியை ஏற்பாடு செய்தேன். எதிரிகளின் படையெடுப்பின் போது அவர்களை அழிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நம் நாட்டின் குடிமக்களை காப்பது மிகவும் முக்கியம். அதற்கு நிதானமான ஒரு அறிவு தேவை. அதனால் தான் உங்களுடைய நிதானத்தை பரிசோதிப்பதற்காக இப்படி போட்டியை ஏற்பாடு செய்தேன்" என்று விளக்கம் அளித்தார்.
மேலும், "உங்களில் பலருக்கும் நான் தேர்ந்தெடுத்த போட்டியில் பங்கேற்பதற்கான திறமை உங்களிடம் இருக்கா? இல்லையா? என்பதே உங்களுக்கு தெரியவில்லை. போட்டியை அறிவித்தவுடன் அனைவரும் களம் இறங்கி விட்டீர்கள். உங்களுடைய குறை என்ன? என்பதே உங்களுக்கு தெரியாத போது அதனை நிறைகளாக மாற்றுவதை எண்ணி உங்களால் எப்படி சிந்திக்க முடியும்?" என்று கேட்டார்.
எனவே நாமும் நம்மிடம் உள்ள குறைகளை எப்பொழுதும் மறைத்துக் கொண்டு போலியாக ஒரு பிம்பத்தோடு வாழ முயற்சிக்காமல் குறைகளை ஏற்றுக்கொண்டு அதனை நிறைகளாக்க பயிற்சிகள் எடுப்பதன் மூலம் நிச்சயம் நம்மாலும் வெற்றியின் கதவுகளை திறக்க முடியும்.