உளவியல் அறிஞர்கள் பல எளிய வழிகளின் மூலம் ஒருவரது தன் மதிப்பை உயர வைக்க முடியும் என்று சொல்கிறார்கள். சில நேரங்களில் சில தவறுகளே கூட நன்மைகளைச் செய்திருக்கின்றன. உங்களால் முடியும் என்பதை எப்படிச் சொன்னால் என்ன? உங்களால் முடியும் என்பது உங்களுக்குப் புரியவேண்டும் அவ்வளவுதான். இப்போது இந்தக் கதையைக் கேளுங்கள். எப்படி என்று உங்களுக்கே புரியும்.
அது ஒரு விடுதியுடன் கூடிய பள்ளி. பல மாணவர்கள் அதில் படித்து வந்தார்கள். விடுதிக்காப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் அந்தப் பொறுப்பையேற்க வந்தார். அவரிடம் ஒரு பட்டியல் அளிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் அந்த விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அனைவரின் பெயரும் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு நேராகவும் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுதிக் காப்பாளராக பொறுப்பேற்க வந்தவர் இந்த எண் அந்தந்த மாணவனின் அறிவுக் கூர்மையைக் குறிக்கும் கணிப்பு என்று தவறாக எண்ணிக்கொண்டார்.
எந்த மாணவனின் பெயருக்கு நேராக அதிக மதிப்புள்ள எண் இருந்ததோ அவனே அந்த விடுதியில் உள்ளவர்களில் மிகவும் அறிவுள்ளவன் என்று அவர் எடுத்துக் கொண்டார். அவர்களை அதை அடிப்படையாகக் கொண்டே நடத்தத் தொடங்கினார்.
தேர்வு முடிவுகள் வெளியானபோது மாணவர்கள் பெற்றிருந்த மதிப்பெண்களுக்கும் அவர்களது அறிவுக் கூர்மைக்கான மதிப்பிட்டு எண்ணுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார் காப்பாளர்.
அங்கு அவருக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அவர் கணித்திருந்த கணிப்பு அப்படியே அதற்குப் பொருந்தியது. அவர் யார் யார் கெட்டிக்காரர்கள் என்று நினைத்திருந்தாரோ, அவர்கள் எல்லாருமே நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்கள்.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது தெரியுமா? மாணவர்களின் பெயருக்கு நேராகக் குறிப்பிடப்பட்டிருந்த அந்த எண்கள் உண்மையில் அவர்களது அறிவுக் கூர்மையைக் குறிப்பவை அல்ல. அவர்களுடைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளின் எண்கள்தான் அவை.
இதைக்காப்பாளர் தவறாகப் புரிந்து கொண்டிருந்திருக்கிறார். ஆனால் இந்தத்தவறு காரணமாக நன்மையே விளைந்தது. அறிவுத் திறன் குறைவாக இருந்தவர்களைக் கூட இவர் அவர்கள் பேரறிவாளர்கள் என்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை அப்படியே நடத்தினார்.
காப்பாளரின் இந்த அணுகுமுறை தன் மதிப்புக் குறைவாக இருந்த மாணவர்களை மாற்றி அமைக்கக் காரணமாக அமைந்து விட்டது. உண்மை தெரியாது செய்த அவருடைய இந்தச் செய்கை அவர்களுக்குள் நம்பிக்கையை ஊட்டச் செய்தது. நாம் உண்மையாகவே திறமை படைத்தவர்களாக இருக்கிறோம் என்று அவர்களை உணரச்செய்தது. அவர்களுக்கு அது பெரும் ஊக்கத்தை அளித்தது.
இப்படி இல்லாமல் இருந்த திறமையையே இருப்பதாக எண்ண வைக்கலாம் என்னும்போது உங்களிடம் இருக்கிற திறமையை உணர்வதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது இப்போதே முயற்சி செய்யுங்கள். உங்களிடம் இருக்கும் திறமை எது? இப்போதே கண்டுபிடியுங்கள்.