ஒரு மரத்துக்கு இருக்கும் ஊக்கம் உங்களுக்கு இருந்தால் வெற்றி நிச்சயம்!

motivation image
motivation imageImage credit - pixabay.com

நாம் கோபத்தில் திட்டும்போது  மரம் மாதிரி வளர்ந்திருக்கே என்று ஏசுவது அநீதியல்லவா. காரணம் மரம் காய் தரும். கனி தரும். செத்தாலும் விறகாகும். மனிதன் செத்தால் தானாக எரிய மாட்டான். விறகு வைத்து  எரிக்க வேண்டும். எனவே மரம்போல், மாடு போல என்று மனிதனை தாழ்த்துவதாக நினைத்துப் படைப்பை தாழ்த்தக்கூடாது. எல்லா மரமும் ஒளியை நோக்கியே தன் பயணத்தைத் தொடங்கும். எப்படியாவது வெளிச்சத்தில் பிரவேசிக்க ஏங்கும் தாவர தர்மம் கூட இன்றி  இருட்டில் புதைய விரும்பும்  மனிதன் மரமா? மரத்தை விட மட்டமா.?

பலமற்ற முருங்கையை  ஆடிக்காற்று அடியோடு வீழ்த்திவிடும்போது கூட முருங்கைக்கு மூர்க்கம் உண்டு. வெட்டிய துண்டு கூட மண்ணில் புதைந்து வேர் விடத் துடிக்கும். விருட்டென்று எழுந்து விருட்சமாய் விஸ்வரூபம்  காட்டும். மாமரம் வெட்டிய இடத்தில் முளைக்கும். முருங்கையோ வெட்டிய துண்டு கூட துளிர்க்கிறது. மரத்திற்கு இருக்கும் இந்த வைராக்கியம்  வெறி வேகம் எத்தனை மனிதருக்கு இருக்கிறது? ஆஸ்திரேலியக் காடுகளில் ஒரு வகை புல் மரம் இருக்கிறது. புல் மரமா?. ஆமாம் புல் மரம்தான்.. கொடிய தீ பரவி காட்டையே அழித்தாலும் புல் மரம் அழிவதில்லை. மேல் பகுதி கருகினாலும் அதன் குருத்து அழிவதே இல்லை. என்றாவது மழை பெய்யும்

குருத்து கிளம்பும். இந்த மரங்கள் மனிதனை விட மட்டமா?. வாழ வேண்டும். வாழ்ந்தே ஆக வேண்டும் ‌ என்கிற வைராக்கியமும்   ஆவேசமும்  மரம் நடத்தும் மகத்தான பாடம்.

உரம் என்கிற ஊக்கம் இல்லாதவரை மரம் என்று திட்டுகிறார் திருவள்ளுவர். ஊக்கம் இல்லாத மனிதரை மரம் என்று அவர் கூறுவது நியாயமா.? மரம் கூட உயிர் வாழ வேண்டும்  உயர வேண்டும் என்ற வேட்கையும் முயற்சியையும்  ஆவேசமும் உடையது.‌ அதுவும் இல்லாத மனிதனை மரம் என்று சொல்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் இலக்கியச் சொற்பொழிவாளர் சுகிசிவம் அவர்கள். இதற்கு அவர் ஒரு விளக்கம் கூறுகிறார். ஒரு மருத்துமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்து இறந்தவர்களை வேனில் ஏற்றுக் கொண்டு போனார்கள்.

இதையும் படியுங்கள்:
குன்றில் கோயில் கொண்ட பிறைசூடி பெருமான்!
motivation image

பாதி வழியில் ஒரு பிணம் டிரைவர் தோளைத்தட்டி தண்ணீர் கேட்டது.

செத்தவனுக்கு எதுக்கு தண்ணீர் பேசாமல்படு என்றான் டிரைவர். அய்யோ நான் சாகவில்லை உயிரோடு இருக்கிறேன் என்று பிணம் அலறியது.

பெரிய டாக்டரே சொல்லிட்டாரு நீ செத்ததாக. நீ சொன்னா நான் நம்பணுமா என்றாராம் டிரைவர்.

இந்தக் கதை மாதிரி வள்ளுவன் சொன்னால் சொன்னதுதான் என்று சாதிக்க விரும்பவில்லை. அழிவை எதிர்க்கும் ஆவேசத்தை மரங்களிலிருந்து படியுங்கள். ஒரு மரத்துக்கு இருக்கும் ஊக்கம் உங்களுக்கு இருக்குமானால் வெற்றி நிச்சயம்.

மாமுனிவர் வள்ளுவன் எதிர்பார்க்கும் ஊக்கம் உங்களுக்கு இருந்தால் வெற்றி சர்வ நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com