Motivation image
Motivation imageImage credit- pixamaf5

உங்கள் காதும் கருத்தும் கூர்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம்!

ப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்று வள்ளுவர் எழுதினார். தரமான யோசனைகளை  தள்ளக் கூடாது. கொள்ளவேண்டும். காதுகளை அடைத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் கண்ணும் காதும் திறந்திருந்தால் எங்கிருந்தோ கேட்கும் யோசனைகள் எவ்வளவு பயன்தரும் என்பது தெரியும். 

லிங்கன் ஜனாதிபதி ஆனபிறகு நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் பேசும்போது, ஒரு சிறுமியை பெயரைச் சொல்லி மேடைக்குக் கூப்பிட்டார். பலமுறை தோற்றும் தான் இந்தமுறை வெற்றி பெற்றதற்கும் காரணம் அந்தச் சிறுமி என்று புகழ்ந்தார். அப்படி அந்தச் சிறுமி லிங்கனுக்கு என உதவி செய்தாள். வெற்றி பெற.

ஆப்ரகாம் லிங்கன் ஒல்லியான உடல்வாகு உடையவர். அவர் கன்னங்கள் ஒட்டிப்போய் முகத்தில் பள்ளங்கள் இருந்தன. அம்மை தழும்பு வேறு. முகம் விகாரமாக இருந்தது‌ அதைக் கவனித்த சிறுமி அவருக்கு ஒரு ஆலோசனை எழுதி இருந்தாள்.

"தாடி வளர்த்துக் கொண்டால் உங்கள் முகம் கம்பீரமாக  அழகாக இருக்கும்" என்று எழுதியிருந்தாள். இப்போதுள்ள உங்கள் முகத்தைப் பெண்கள் பார்க்க விரும்புவதில்லை என்ற உண்மையை அவள் வெளிப்படுத்தி இருந்தாள்.

லிங்கனின் தேர்தல் பொறுப்பாளர்கள் அவளது கடிதத்தைக் குப்பையில் போடும் சமயத்தில் அங்கு வந்த லிங்கன் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தார். அந்த சிறுமியின் யோசனையை ஏற்று  தாடி வளர்த்தார். கம்பீரமாக காட்சி அளித்து  ஜெயித்தார். அதற்காக அந்த சிறுமியை  தேடி நன்றி தெரிவித்தார் லிங்கன். 

நமது பெரிய சிக்கல்களுக்கு பெரிய பெரிய மனிதர்கள்தான் யோசனை சொல்லவேண்டும் என்பதில்லை. எங்கிருந்தோ வரும் எளிய யோசனைகளும் வெற்றி தரும்.

 ஒரு பற்பசை கம்பெனியில் விற்பனையை அதிகரிப்பது பற்றி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பல யோசனைகள் தரப்பட்டன. விளம்பரத்தைப் கூட்டுவது, இலவச இணைப்பு தருவது, பரிசுகள் கூப்பன் தருவது.  போட்டிகள் நடத்துவது  என்று பல யோசனைகளை அள்ளி விட்டார்கள். அப்போது அங்கிருந்த கடைநிலை ஊழியர் ஒருவர் பற்பசை ட்யூபில் வாயை அகலப்படுத்த ஒரு யோசனை கூறினார்.  சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள். ஆனால் அவர் யோசனையை நிர்வாகம் ஏற்றது. அது அபார பலன் அளித்தது எப்படி?. வாய் பெரிதான பிறகு பின்பக்கமாக அழுத்தும்போது  கூடுதலாக பசை வெளியேறியது‌ இதனால் கூடுதலாக வாங்க நேர்ந்தது. விற்பனை கூடிவிட்டது. சின்னச் சின்ன யோசனைகளை அலட்சியப்படுத்தாமல் முடிவெடுத்தால் வெற்றி நிச்சயம்.

 அமெரிக்காவில் பல மாடிக் கட்டடம் கொண்ட ஹோட்டலில் எல்லாம் சிறப்பாய் இருந்தன. ஆனால் அங்கு இருந்த லிஃப்ட் மெதுவாக இயங்கியது பலருக்கும் பிடிக்கவில்லை. லிஃப்டை மாற்றப் பல லட்சம் செலவாகும். 

பலமுறை ஆலோசனைகூட்டம் நடத்தியும் பலனே இல்லை. முடிவில் ஒரு சாதாரண ஹோட்டல் ஊழியர்  ஒருவர் லிப்டுக்குள் உள்ளேயும் வெளியேயும் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் பொருந்தச் சொன்னார். உள்ளிருக்கும் நபர்கள் தங்கள் முகத்தைத் திருப்பிக் திருப்பிப் பார்க்கும் ஜோரில் லிஃப்டின் தாமதத்தை மறந்தார்கள். வெளியே இருப்பவர்கள் காத்திருக்கும் நேரத்தில் தங்கள் தோற்றத்தை சரி செய்வதில் செலவழித்தார்கள். புகார் தப்பித்தது. யார் சொன்னால் என்ன?

உங்கள் காதும், கருத்தும் கூர்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

logo
Kalki Online
kalkionline.com