.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
லட்சியத்தை நோக்கிய பயணத்தில் நாம் அடையும் வெற்றி நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்யும். நம்மை அலட்சியம் செய்பவர்களை ஒதுக்கி லட்சியத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதுதான் வெற்றிக் கனியை பறிக்க உதவும். லட்சியத்தை நோக்கிய பயணத்தில் பல இடர்கள் தென்பட்டாலும் அதனை கடந்து துணிந்து முன்னேற முயலவேண்டும்.
லட்சியத்தை நோக்கி பயணிக்கும்போது தடைகள் பல வரலாம். எதைக் கண்டும் அஞ்சாமல் முன்வைத்த காலை பின் வைக்காமல் லட்சிய வெறியோடு முன்னோக்கி பயணம் மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சவால்கள் இல்லை என்றால் நாம் முன்னேறவில்லை என்று அர்த்தம். எல்லைக்கோட்டை அடைய முடியாவிட்டாலும் கவலைப்படாது தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இலக்கை அடையும்வரை நம்மை விமர்சிப்பவர் களையோ, அலட்சியப்படுத்துபவர்களையோ பொருட்படுத்தாமல் முன்னேறிக் கொண்டே இருக்கவேண்டும். நம் இன்றைய நிலையைக் கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பது தான் இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் நாம் அடையும் வெற்றி.
குறிக்கோளை முடிவு செய்த பின்பு அதற்கான முயற்சிகளில் மட்டுமே நம் கவனம் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். கடந்த கால தோல்வி நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே தவிர பாரமாக இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது. தடைகளையும் அலட்சியங்களையும் கண்டு மிரள்வதை விட தகர்த்தெறிந்து விடுவதுதான் புத்திசாலித்தனம்.
லட்சியத்தை அடைவதற்கான முதல் செயல் லட்சியத்தை நோக்கி செல்வதற்கான பாதையை வகுத்தல். அதாவது சரியாக திட்டம் தீட்டுதல். பிறகு அந்த தீட்டிய திட்டத்திற்கு பலன் கிடைக்கும் அளவிற்கு கடுமையாக உழைப்பது. நம்மில் பலர் நன்றாகவே திட்டம் தீட்டுவோம். ஆனால் செயல்படுத்தும் சமயம் குடும்ப உறவுகளின் நெருக்கடிகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் அலட்சிய போக்காலும் நம் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் துவண்டு போய் பாதியிலேயே லட்சியத்தை கைவிட்டு விடுவோம்.
அப்படி இல்லாமல் நம்மை அலட்சியப்படுத்தும் நபர்களைவிட்டு விலகி இருப்பதும், அவர்களுடன் எந்தவிதமான வாக்குவாதமும் செய்யாமல் மௌனமாக இருப்பதுமே அவர்களுக்கு சிறந்த தண்டனையாக அமையும். ஒரு கட்டத்தில் நம்மை தேவையில்லாமல் அலட்சியப்படுத்தியவர்கள் தானே நம்மைத் தேடி வருவார்கள்.
நம் வளர்ச்சி கண்டு பொறாமையும், தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணத்தினாலும் நம்மை அலட்சியப்படுத்துபவர்களை பொருட்படுத்தாமல் கடந்து செல்வது தான் சிறந்தது. லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அலட்சியம் செய்பவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். லட்சிய பயணத்தின் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றி நிச்சயம்.
செய்வோமா?