

வாழ்க்கையில் நாம் பலவிதமான நபர்களுடன் பழக வேண்டிய சூழல் உள்ளது.
நல்லவர்கள் யாா்..? நமக்கானவர்கள் யாா்..? என பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய சூழல் நிறைந்துள்ளது. இருப்பினும், நாம் கொஞ்சம் முன்யோசனையுடன் பேசுவது போல முன்ஜாக்கிரதையாகவே பழகவேண்டும்.
வர வர உறவு, நட்பு வட்டங்களில் பழகி வரும் விதம், பேசும் நயம் இவற்றில் நெருடல் ஏற்படத்தான் செய்கிறது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரன் சகோதரிகளுக்குள் பல்வேறு நிலைகளில் கருத்தொற்றுமை மிஸ்ஸிங்.
பிறந்தது முதல் கொஞ்சம் வளர்ந்து படித்து வேலைக்கு செல்லும் நிலையில் பல சந்தர்ப்பங்களில் உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது பலகுடும்பங்களின் தொடரும் நிகழ்வே ஆகும்.
அதேபோல திருமணம் என்ற ஒன்று நடந்துமுடிந்து விட்டால் பங்காளிக்காய்ச்சல், ஈகோ இவை தலைதூக்குவதும் மனைவி பேச்சைக்கேட்டு சகோதரர்களுக்குள் மனமாச்சர்யம் என்ற விஷச்செடி துளிா்விடத்தான் செய்கிறது.
சில குடும்பங்கள் ஒற்றுமையின் வடிவமாக திகழ்வதும் உண்டு. நாம் சில வகையான தியாகங்களை செய்துதான் ஆகவேண்டியுள்ளது.
பொதுவாக தியாகம் என்பது பொிய செயல். அது விலை மதிப்பில்லாதது. அதுபோன்று உறவுக்குள் தியாகம் செய்வதும் உறவுகள் ஒற்றுமையாய் இருப்பதும் இறைவனின் கட்டளை. அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
பொதுவாகவே, இயந்திரகதி உலகத்தில் அவரவர் வேலைதான் அவரவர்களுக்கு பொியதாய் தோன்றுகிறது.
அந்த காலத்தில் கூட்டுக்குடும்ப வாழ்வில் ஒற்றுமையும் பாசமும் பற்றுதலும் நிறையவே இருந்து வந்தது. உறவுகளில் அன்பும் பண்பாடும் பொியவர் சிறியவர் என்ற மரியாதையும் தற்சமயம் இல்லை.
இப்படிப்பட்ட நிகழ்வுகளில் நாம் சில தியாகங்களை செய்து தான் ஆகவேண்டும். பொதுவாக தீக்குச்சியானது தன்வாழ்வை முடித்துக்கொண்டு மெழுகு வத்தியை ஒளிரச்செய்கிறது. அது உருகி ஒளி தருகிறது. அதேபோலத்தான் சகோதர சகோதரி நன்மைகளுக்காக சிலவற்றை தியாகம்செய்யும் நிலையே!
அதற்கு மாற்று மருந்து என்பது மனதும் நல்ல எண்ண ஓட்டமும் தான். ஆக, தியாகம் செய்ய வேண்டிய சந்தர்ப்ப சூழலில் தியாகம் செய்தாலும் தாய் தந்தையர்களை மட்டும் எந்த தருணத்திலும் தியாகம் செய்து விடாதீா்கள்.