
வெற்றிக்கு அத்தியாவசிய தேவையான இந்த மட்டற்ற தன்னம்பிக்கை உணர்வை சிறு வயது முதலே வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். அதை தகுந்த முறையில் பெற்றோர்தான் குழந்தைகள் மனத்தில் ஏற்படுத்த வேண்டும். காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளில் கூட இந்தத் தன்னம்பிக்கை உணர்வை சேர்த்துச் சொல்வது சிறு வயதிலேயே குழந்தையின் மனத்தில் இந்த உணர்வு வேரூன்றி வளருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உதாரணத்திற்கு ஆமை முயல் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையை நாம் எப்போதும் நிதானமாக செய்வதால் வாழ்கையில் ஜெயிக்கலாம் என்ற கருத்தைச் சொல்கிறோம். அதோடு தோற்றுப் போன அகங்காரம் பிடித்த முயல் அழுது கொண்டே சென்றதாக முடிக்கிறோம்.
அதற்கு பதில் இந்தக் கதையின் மூலம் குழந்தைகளுக்கு இரண்டு நீதிகளைச் சொல்லலாம். ஒன்று வழக்கம் போல் நிதானம் வெற்றியைத் தேடி தரும் என்பது. இன்னொன்று தோற்று போன முயல் நிச்சயம் அடுத்த முறை நான் ஜெயிப்பேன் என்று சொல்லியதாகச் சொன்னால் குழந்தைகளின் சின்னஞ்சிறு மனத்தில் ஒரு தோல்வி வாழ்வின் முடிவல்ல என்ற எண்ணத்தோடு முயன்று அடுத்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். இம்மாதிரியான எண்ணங்கள் பிஞ்சு உள்ளங்களில் உருவாவதுதான் ரொம்ப முக்கியம்.
தன்னம்பிக்கை உடையவர்கள் எந்தக் காலக்கட்டத்திலும் எந்த மாதிரி சூழ்நிலையிலும் நிலை குலைய மாட்டார்கள். அழுது புலம்பி அடுத்தவர்களின் நிம்மதியைக் குலைக்க மாட்டார்கள். அவர்களால் எந்த மாதிரியான சூழ்நிலையையும் அச்சமின்றி நேருக்கு நேர் நின்று சந்திக்க முடியும். இது ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் நம்மில் பலருக்கு வெற்றி என்பது எட்டாக் கனியாக இருப்பதற்குக் காரணமே தன்னம்பிக்கைக் குறைவாக இருப்பதால்தான் நம்மைப் பற்றி நாமே முழுமையாக புரிந்துகொள்வதில்லை.
நாமே அவசரப்பட்டு நம்முடைய முயற்சிக்கு மங்களம் பாடிவிடுகிறோம் என்பதுதான் கசப்பான யாராலும் மறுக்க முடியாத உண்மை. இந்த உணர்வு நம்மிடம் இருக்கும் வரை வெற்றி நம் பக்கம் திரும்பி கூட பார்க்காது. இது உறுதி. இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.
தன்னம்பிக்கை இல்லாமல் ஒருவர் வெற்றி பெற முடியும் என்று யாராவது சொன்னால் அவர் விதண்டாவாதமாகப் பேசுகிறார் என்றுதான் அர்த்தமே தவிர அது ஒரு கருத்து என்று கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே அளவற்ற தன்னம்பிக்கையே வெற்றியின் சின்னமாக இருக்கிறது.