

நாம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது, “நான் தகுதி இல்லாதவன்” அல்லது “எனக்குத் தகுதி இல்லை” என்ற உணர்வில் மூழ்கி விடுகிறோம். சிலருக்கு இது தற்காலிகமான மனச்சோர்வுதான்; ஆனால், சிலருக்கு அது தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) எனும் மனநோயாக மாறி, வாழ்வின் வழிகாட்டியை முழுதாக மாற்றிவிடுகிறது.
தாழ்வு மனப்பான்மை என்பது பிறருடன் ஒப்பிட்டு, தன்னைத் தாழ்வாகப் பார்க்கும் ஒரு மனநிலை. இது ஒருவரின் திறமையைக் குறைப்பதோடு, அவரை வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியாமல் தடுத்துவிடும். இந்நிலை வாழ்க்கையை அழிக்கும் முன், அதை வளரவிடாமல் தடுத்து, தன்னம்பிக்கையைத் திடமாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.
"என்னுள் தன்னம்பிக்கை குறைவு" என்ற எண்ணம் மிகும்போது, அது எளிதில் வளர்ந்து நம் செயலை, உறவுகளை மற்றும் நம் மனதைப் பாதிக்கும். இந்தத் தாழ்வு மனப்பான்மை நம்முன் அடிக்கடி வந்து நிற்பதற்குக் காரணம், மற்றவர்களோடு நம்மை நாமே ஒப்பிடுவதுதான்.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து நம் வாழ்க்கையை அவற்றுடன் ஒப்பிடுகிறோம். அதனால் மனம் சோர்ந்து, “நான் ஏன் இதைச் செய்ய முடியவில்லை?” என்ற கேள்வி நம்மைத் தொடர்ந்து வருந்தச் செய்கிறது.
இவ்வுலகில் யாருக்கும் யாரும் நிகர் இல்லை; ஒவ்வொருவரிடமும் ஒரு தனிச்சிறப்பு உண்டு என்பதை நம் மனதில் ஆழப் பதியவைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது தொடக்கத்தில் சிரமமாகத் தோன்றலாம்; ஆனால், அது நம் கைகளில்தான் உள்ளது. நம்முடைய சிறு வெற்றிகளைக் கொண்டாடி, நமக்குள் இருக்கும் சிறப்பை உணர்ந்தாலே போதும். நாம் மற்றவர்களைப் பாராட்டுவோம்; அதே நேரத்தில், நம் திறமைகளையும் நம்புவோம். “நான் வலிமையானவன், திறமைசாலி, என்னால் முடியும்!” என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், தாழ்வு மனப்பான்மை மறைந்து உயர்வு மனப்பான்மை உருவாகும்.
“எனக்கெல்லாம் எங்கே அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது?” என்ற விரக்தி மனப்பான்மையை விரட்டிவிட்டு, வரும் வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால் உங்களை வெல்ல எவரும் இல்லை. தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், மற்றவரின் வெற்றியோடு ஒப்பிடாமல், அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்.
தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) எனும் அரக்கனை உங்கள் மனக்கோட்டையிலிருந்து வெளியேற்றி விடுங்கள். நீங்களும் ஒரு சிறந்த வெற்றியாளன் தான் என்று உங்களை நீங்களே நம்புங்கள்!