
ஒப்பீடு இல்லாத இடத்தில் முன்னேற்றம் இருக்காது என்பது உண்மைதான். அதற்காக தேவையில்லாத விஷயங்களில் மற்றவரோடு நம்மை ஒப்பிட்டு பார்ப்பது நம் நேரத்தை வீணாக்குவதுடன் மகிழ்ச்சியையும் குறைத்துவிடும். எதில் எல்லாம் நாம் நம்மை பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறோம்? நம்முடைய திறமை, வெற்றிகள், தகுதி போன்றவற்றை மற்றவர்களின் திறமை, தகுதியுடன் ஒப்பிட்டு பார்த்து நிம்மதி இழக்கிறோம். ஒப்பீடுகளுக்கு முடிவே கிடையாது. நம்மை விட உயர்ந்த சூழ்நிலையில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து ஏங்குவதும் தவறு. அதேபோல் நம்மை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களோடு நம்மை ஒப்பிட்டு பெருமிதம் கொள்வதும் தவறு. இவை இரண்டுமே நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லாது.
நமக்கான வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி என்று நமக்கு கிடைக்கும் தனித்த அனுபவங்களைக் கொண்டு வாழப் பழக வேண்டும். உலகின் சிறந்த செல்வங்களான அன்பு, மனிதநேயம், இரக்கம், பெருந்தன்மை போன்றவற்றை கொண்டு உயர்ந்த நோக்கங்களையும், லட்சியங்களையும் அடைய பாடுபட வேண்டும். சமூகத்தின் பார்வையில் அதிக பணம் சம்பாதிப்பதே வெற்றி என்ற அளவுகோலில் இருந்து நம்மை விடுவித்துக் கொண்டு நேர்மையுடன் உழைத்து முன்னேற பார்க்க வேண்டும்.
பிறரோடு நம்மை ஒப்பிட்டு பார்ப்பதை விட அவர்களின் செயல்களால் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களையும், விளைவுகளையும் நாம் படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம். அது நம் முன்னேற்றத்திற்கு உதவும். இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் அவரவருக்கென்று தனித்த ரோல் உண்டு. நம் ரோல் என்னவோ அதில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால்போதும். அடுத்தவர்கள் முன்னேறி விட்டார்கள் நாம் இன்னும் முன்னேறவில்லையே என்று கவலைப்பட தேவை இல்லை.
வாழ்க்கை என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும், வாய்ப்பு களையும் தருவதில்லை. கிடைக்கும் வாய்ப்பை இழக்காமல் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ முயலவேண்டும். நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து உயர்வடைய முயற்சிக்கலாம். ஆனால் வாழ்க்கையையே ஒப்பிட்டால் பொறாமை உணர்வு தான் மேலோங்கும். இதனால் நம்முடைய நிம்மதியை இழக்க வேண்டி வரும். அத்துடன் நாம் ஒப்பிட்ட நபருடைய வாழ்க்கையைப் போல் நாமும் வாழ நினைத்து தவறான வழியில் செல்ல தூண்டும் எண்ணம் கூட உருவாகும்.
பிறருடன் நம்மை ஒப்பீடு செய்வதால் தாழ்வு மனப்பான்மை உருவாகும். வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறன் குறைந்து வாழ்வின் மேல் ஒரு பயம் வந்துவிடும். சில நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகி நோயாக உருவெடுக்கும். எனவே வாழ்க்கையில் பிறரோடு ஒப்பிடுவது தவறு இல்லை. ஆனால் அது முன்னேறும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். எந்த உயர்வும் ஒரே நாளில் வந்து விடாது. அதற்கு கடினமான உழைப்பு, பொறுமை இரண்டும் அவசியம். எனவே மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதற்கு முன் அவர்கள் அந்த நிலையை அடைய எடுத்த முயற்சியையும், உழைப்பையும் வேண்டுமானால் நம்முடன் ஒப்பீடு செய்து கொண்டு திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!