நம் கவலையை அடுத்தவருடன் பகிர்ந்துக் கொள்வது சரியா? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Sand Home In Beach
Sand Home In BeachImage Credits: Wordpress.com
Published on

ந்த உலகில் கவலையில்லாத மனிதர்கள் என்று யாருமேயில்லை. எல்லோருக்கும் ஏதேனும் மனக்கவலைகள் இருக்கும். அப்படியிருக்கையில், அதை நாம் எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்வது சரியான செயலா? அப்படி நம் கவலையை பகிர்ந்துக் கொண்டாலுமே அதை அனைவரும் ஒரே மாதிரிதான் எடுத்துக்கொள்வார்களா? இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு ஊரில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். இதில் மனைவிக்கு கணவன் மீது ஒரு வருத்தம் இருந்தது. என்னவென்றால், அந்த கணவர் தன்னுடைய மனக்கவலையை எல்லாம் பார்க்கும் அனைவரிடமும் கொட்டி தீர்த்துவிடுவார். இது மனைவிக்கு பிடிக்கவில்லை. அதை அவர் கணவரிடம் சொல்லிப் பார்த்தார். ‘கவலையை பகிர்ந்துக்கொள்வது தவறில்லை. ஆனால், பார்ப்பவர்கள் அனைவரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை’ என்று எடுத்துரைத்தார். இருப்பினும், கணவன் அதைக் கேட்பதாக இல்லை. அவர் செய்வதை செய்துக்கொண்டேதான் இருந்தார்.

இப்படியிருக்கையில் ஒருநாள் அந்த கணவனும், மனைவியும் கடற்கரைக்கு சென்றனர். அங்கே கடல் அலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே ஒரு சிறுவன் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அழகாக மணலால் வீடு கட்டி கோபுரம் எழுப்பி அவனால் முடிந்த அளவிற்கு அந்த மணல் வீட்டை அழகுப்படுத்தினான்.

மணல் வீட்டை கட்டி முடித்ததும் அதை தன் தந்தையிடம் காட்ட வேண்டும் என்று அவரை அழைத்து வர வேகமாக சென்றான். அவன் தந்தையிடம் தான் கட்டிய மணல் வீட்டை வந்துப் பார்க்குமாறு கூறினான். அதற்குள் கடலோரமாக குதிரையில் வந்த நபர் அந்த மணல் வீட்டை கவனிக்காமல் அதன் மீது ஏறிச் சென்று விடுகிறார். தன் தந்தையை அழைத்து வந்த சிறுவனுக்கு மிகவும் வருத்தம். தன்னுடைய மணல் வீடு இப்படி இடிந்துப்போய் விட்டதே என்று அழத்தொடங்கினான்.

இதை கடற்கரைக்கு வந்த அனைவருமே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலரின் முகத்தில் அலட்சியம், இன்னும் சிலர் பாவமே என்று இரக்கப்பட்டனர், சிலர் இதையெல்லாம் எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இது எல்லாவற்றையும் கணவனும், மனைவியும் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது மனைவி கணவனிடம் கேட்கிறார், ‘என்னங்க அந்த பையனே அவன் கட்டிய மணல் வீடு இடிந்துவிட்டது என்று அழுகிறான். இதை ஏன் சுற்றியுள்ளவர்கள் எரிச்சலுடன் பார்க்கிறார்கள்’ என்று கேட்கிறார்.  அதற்கு கணவன் சொல்கிறார், ‘அந்த பையனுக்கு வேண்டுமானால் அது பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், சுற்றியிருப்பவர்களுக்கு அது வெறும் மணல் வீடுதான்’ என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
மற்றவர்கள் உங்களை நிராகரிப்பதற்காக வருத்தப்படுறீங்களா?
Sand Home In Beach

இதைக்கேட்ட மனைவி ஒரு புன்முறுவலுடன் சொல்கிறார், ‘அந்த பையனுடைய கவலையை இங்கு சுற்றியுள்ளவர்கள் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்த உங்களுக்கு ஏன் உங்களுடைய கவலையையும் நீங்கள் பகிர்ந்துக்கொள்ளும் அனைவருமே ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பது புரியவில்லை’ என்று கேட்டார். அத்தனை நாட்கள் தன் மனைவி சொன்ன போது புரியாதது. அன்று அந்த கணவனுக்கு நன்றாக விளங்கியது.

இந்த கதையில் வந்தது போலத்தான் உங்களுடைய கவலையை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் அவ்வாறு கவலையை பகிர்ந்துக்கொள்வதை முழுமையாக யாருமே கேட்க மாட்டார்கள். உங்கள் கவலையை நீங்கள் எப்படி புரிந்துக்கொள்கிறீர்களோ அவ்வாறு புரிந்துக்கொள்ளவும் மாட்டார்கள். உங்களுடைய கவலையை கேட்டு அதற்காக வருத்தப்படும் அல்லது அறிவுரைக் கூறும் உங்களுடைய நலன் விரும்பிகளிடம் மட்டுமே உங்கள் கவலைகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com