எதுவுமே சரியில்லையா?
‘எனக்கு நேரம் சரியில்லை. இந்த வீடு ராசியில்லை. தொட்டதெல்லாம் துலங்கவே மாட்டேன் என்கிறது. நான் செய்யும் வேலையில் முழுத் திருப்தியில்லை. அலுவலகம் என்பது ஜெயில் மாதிரி இருக்கு’ என்று வருந்தும் நபரா நீங்கள்? ‘எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி எல்லாமே கெட்டதா நடக்குது என்று புலம்புபவரா?’
ஒருவருக்கு தான் வசிக்கும் வீடோ, செய்யும் வேலையோ பிடிக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்படவோ கவலைப்படவோ தேவையில்லை.
“எனக்கு இந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை. ஒரு வசதியும் இங்கில்லை. என் ஆபிசுக்குப் பக்கத்துல இருக்குன்ற ஒரே காரணத்துக்காகவே எல்லா அசெளகரியங்களையும் பொறுத்திட்டு இருக்கிறேன்’’ என்றோ “இங்க நல்ல சம்பளம் கிடைக்குது. ஆனால், எப்போதும் சிடுசிடுக்கிற மேலதிகாரி, என் முதுகுக்கு பின்னால புறம் பேசிக்கிட்டு, எப்படா என் காலை வாரிவிடலாம்னு காத்திருக்கிற சக பணியாளர்கள்னு எப்பயும் நரகத்தில இருக்குற பீலிங்’’ என்றோ புலம்பியபடி வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? என்ன பலன் இருக்கிறது?
சூழ்நிலையின் காரணகர்த்தா யார்?
மனித வாழ்க்கையின் மேல் சூழ்நிலைகள் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆனால், அந்தச் சூழ்நிலையை உருவாக்குவது யார் தெரியுமா? மனிதர்களாகிய நாம்தானே? சூழ்நிலை என்பது நாம் வசிக்கும் இடம் மற்றும் பணிபுரியும் அலுவலகத்தை மட்டும் குறிப்பது அல்ல. நாம் தேர்வு செய்து வாசிக்கும் புத்தகங்கள், விரும்பி அணியும் உடைகள், ரசித்துக் கேட்கும் பாடல்கள், பழகும் மனிதர்கள், செய்யும் வேலை, நம் ஆழ்மனதில் பதிந்துள்ள எண்ணங்கள் இவை அனைத்துமே சூழ்நிலையில்தான் சேரும். மூளை அவற்றை கிரகித்து வெளிப்புற சூழ்நிலைக்கு தகுந்தவாறு மனிதனுக்கு உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் தீர்மானிப்பது அவருடைய மனோநிலையே. மனதில் தோன்றும் எண்ணங்களே ஒருவருடைய வாழ்வை வடிவமைக்கிறது. நல்ல எண்ணங்களையும் நேர்மறை எண்ணங்களையும் உயர்ந்த லட்சியங்களையும் கொண்டு செயலாற்றினால் நாம் நினைத்ததை அடையலாம்.