சுயஅன்பு என்பது சுயநலமா?

Self-Love
Self-Love
Published on

நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம். அதனை மகிழ்வுடன் வாழ முயல்வதில் சுணக்கம் காட்டக் கூடாது. மனித மூளையில் ஆக்சிடோசின், செரோடோனின், டோபமைன் ஆகிய மூன்று சுரப்பிகளே மகிழ்ச்சியை உருவாக்குகின்றன. தியானம், சுவாசப் பயிற்சிகள், வழக்கமான உடல் பயிற்சிகள் அனைத்தும் இச்சுரப்பிகளை ஊக்குவித்து, நமது மனதையும் உடலையும் நேசிக்க வைக்கின்றன.

நாம் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். மகிழ்ச்சி நம் உடலாலும், மனதாலும் உணரப்படும் ஒரு இனிமையான உணர்வு. சுயஅன்பே நமது தனிப்பட்ட மகிழ்ச்சியின் தொடக்க புள்ளியாகும். உடல், மனம், பொருள் சார்ந்த இன்பங்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன. எனினும் மனம் சார்ந்த  மகிழ்வுகளே நம் மனதில் நீண்ட காலம் நிலைக்கின்றன.

நமது மனதை நேர்மறையாக பயிற்றுவிப்பது நமது உள் மகிழ்ச்சிக்கு மிக முக்கியமானது. மகிழ்ச்சியான நபர்களை சந்திக்கும் போது, நாம் நேர்மறை அதிர்வுகளை பெற முடியும். மகிழ்ச்சியை பெறுவதற்கான ஒரே வழி, தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும் மனிதர்களின் தொடர்பில் தொடர்ந்து இருப்பதுதான்.

நேர்மறை அதிர்வுகளை விட எதிர்மறை அதிர்வுகள்  மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால் தான் நம் வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகளை நாம் எளிதில் மறப்பதில்லை. ஆனால், மகிழ்வான நிகழ்வுகளை எளிதில் நமது மனம் மறந்து விடுகிறது.

வாழ்க்கையின் சிறு, சிறு மகிழ்வான நிகழ்வுகளைக்கூட  நாம்  ரசிக்கக்  கற்றுக் கொள்ள வேண்டும். அடிக்கடி புன்னகைக்கவும், தேவை ஏற்படும்போது வாய் விட்டு சிரிக்கவும் தயங்கக்கூடாது. நாம் மிகவும் விரும்பும் செயல்களை செய்வதில் ஒவ்வொரு நாளும் நமது நேரத்தைச் செலவிடவேண்டும். இதனால் மகிழ்ச்சி நம்வாழ்வில் வந்து குடியேறும்.

நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்ப்பது முக்கியம். இறைவன் படைப்பில் நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். நமக்குள் இருக்கும் தனித் திறனை நாம் தான் கண்டுபிடித்து, அதற்கு உரம் போட்டு வளர்க்க வேண்டும். நமது வளர்ச்சிக்காக அவைகளை முறையாக பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும். நமக்கானத் துறையில் மேலும் தடம் பதித்து வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகளை எடுக்க வேண்டும். இதனால், நமது வாழ்வில் மகிழ்ச்சியும்,பெருமிதமும் கூடும்.

நெடுநாள் கவனிக்கப்படாத மனநலப் பிரச்சினைகள் நமது மகிழ்ச்சியை வெகுவாக பாதிக்கும். இதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். மனம் சோர்வடையும் போது, அதிலிருந்து மிக விரைவாக வெளியே வந்து விட வேண்டும். மனச்சோர்வு மிக அதிகமாகும் போது, வெட்கப்படாமல் உளவியல் ஆலோசனைகளை பெற வேண்டும். இதன் மூலம் நாம் இழந்த மகிழ்ச்சியை விரைவில் திரும்பப் பெறமுடியும்.

மன அழுத்த மேலாண்மை, ஆழ்ந்த தூக்கம், ஆரோக்கியமான சுகாதாரம், சத்தான உணவு, உடற்பயிற்சி,  நன்னடத்தை, பிறர் செய்யும் தீமைகளை உடனே மன்னித்தல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சிறந்த மன ஆரோக்கியம், பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவுதல், தேவைப்படும் போது  ஓய்வெடுப்பது, நகைச்சுவை உணர்வுடனும், நன்றியுணர்வுடனும் இருப்பது, குடும்பத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்ப சுற்றுலா செல்வது, அவர்களுடன் மனம் விட்டு பேசுவது போன்றவை நமது மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன.

மகிழ்ச்சிக்கும், ஒருவரது பொருளாதார நிலைக்கும்  தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. சில பரம ஏழைகள் மகிழ்வோடுதான் வாழ்கிறார்கள். பல பணக்கார குடும்பங்களில் மகிழ்ச்சியின் அடையாளமே இருப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
வெற்றி இலக்கை அடைய சுலபமான 5 வழிகள்!
Self-Love

மகிழ்ச்சி என்பது ஒருவரது அகநிலை. ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருவது இன்னொருவருக்கு மகிழ்ச்சியை தர வேண்டிய அவசியமில்லை. எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் தங்கள் சொந்த மகிழ்ச்சியை வரையறுத்து பின்பற்ற வேண்டும். நமது மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு. நாம் மகிழ்ச்சியுடன் இருக்க மற்றவர்களை நம்புவது, அவர்களின் கைகளில் நமக்கான அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் கொடுப்பது ஆகும். இது ஏமாற்றத்திற்கும், விரக்திக்கும் மட்டுமே வழிவகுக்கும்.

நம்முடைய சுயதேவைகளும், விருப்பங்களும் நிறைவடைந்தால், நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைப்பது தவறு. உண்மையில், நம்மைப் பற்றி மட்டுமே அக்கறைப்படுவதால்  நமது மனஅழுத்தம் கூடவே செய்யும்.

நிதிசார்ந்த மன அழுத்தமே நம்மில் பெரும்பாலோனருக்கு மகிழ்ச்சியின்மைக்கு  காரணமாக அமைகின்றது. எனவே, வாழ்வில் குறைந்த பட்ச அடிப்படை வசதிகளும், கல்வியறியும் போதும் என்னும் எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும். இதில் மனநிறைவு அடைய வேண்டும். 

யதார்த்தத்தில் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்வதன் மூலம் மகிழ்ச்சியை அதிகம் பெறமுடியும். நம்முடைய மதிப்பை காட்டி நாமே மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட, பிறருக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையே மற்றவர்களோடு நம்மை இணைக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முக்கிய அம்சங்களான கருணை, பிறருக்காக அக்கறைப்படுதல் வன்மம் மறத்தல், மனமுவந்து பிறரை பாராட்டுதல் ஆகிவயற்றை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

நமது கோபம் பொறாமை, வெறுப்பு போன்ற வேண்டாத குப்பைகளை மனதில் தேக்கி வைத்து அதனை வாய்வழியாகவும், செயல் வழியாகவும் வெளிப்படுத்தும் போது, நமக்கு இருக்கும் மகிழ்ச்சியும் இருந்த இடம் தெரியாமல் போகிறது.

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நம்மை யாராலும் தடுக்க முடியாது. எனவே, வாழ்க்கையில் நம் அனைவரின் தேடலும்  மகிழ்ச்சிதான். இதில் இருவேறு கருத்துக்களுக்கு இடம் இருக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com