"சந்தோஷம் என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை. நாம் வாழும் விதத்தில் இருக்கிறது. வெற்றியும்".
வெற்றிபெற துடிக்கும் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை எண்ணம் நாம் அந்த வெற்றியினால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் நினைத்தது நிறைவேறி வெற்றி கிடைத்து விட்டால் சந்தோஷமாக இருப்பவர்கள் எத்தனை பேர்?
சைக்கிள் வைத்திருப்பவர் இருசக்கர வாகனத்துக்கும் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் நான்கு சக்கர வாகனத்துக்கும் ஆசைப்படுவதுதானே இன்றைய நிலை? இதில் எங்கிருந்து வரும் சந்தோஷம்?
நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது கடந்த செல்பவர்களை உற்று நோக்குங்கள். அதில் 80 சதவீதம் பேர் அக்கம் பக்கம் கவனிக்காமல் இறுக்கமான முகத்துடன் செல்வார்கள். அவர்கள் அனைவரும் நல்ல சம்பளம் தரும் பணியில் இருப்பவர்களே. ஆனால் சந்தோஷத்தை தொலைத்துவிட்டு பணத்தைத்தேடி ஓடுபவர்களாக மாறிவிட்டவர்கள். இதில் எங்கிருந்து வரும் வெற்றி?
இவ்வளவு ஏன்? நம்மையே நாம் சுயபரிசோதனை செய்து கொண்டால் நிச்சயம் தோற்றுத்தான் போவோம். சிறு வயதில் நிலாவை காட்டி அம்மா சோறு ஊட்டியபோது இருந்த சந்தோஷமும் மகிழ்வும் இப்போது அறுசுவை உணவுகள் தருகிறதா? நல்ல கல்வி, சொந்த வீடு, போக்குவரத்துக்கு வாகனங்கள், வங்கியில் லட்சக்கணக்கில் பணம் இத்தனையும் இருந்தும் இன்னும் இன்னும் என்று மற்றவரை பார்த்து சந்தோஷம் இழந்து தூக்கம் இழந்து ஓடி கொண்டிருப்பவர்கள்தான் இங்கு அநேகம் பேர்.
பக்கத்து வீட்டுக்காரர் அமெரிக்கா சென்றால் நாமும் அமெரிக்கா செல்ல வேண்டும், எதிர்த்த வீட்டுக்காரர் கார் வாங்கி இருந்தால் நாமும் அதைவிட பெரிய கார் வாங்க வேண்டும் இப்படி எத்தனை எத்தனை நெருக்கடிகள்? மற்றவர்களுடன் ஒப்பிட்டு அதேபோல் இருக்க வேண்டும் என சிறு வயதில் நமது பெற்றோரால் உந்தப்பட்டு பின்னர் அதுவே நமக்கு பழக்கமாகி விடுகிறது.
ஆனால் யோசித்துப் பாருங்கள். மைதானம் என்றாலே பயம் இருப்பவர்கள் விராட் கோலி ஆகவேண்டும் என்று நினைத்தால் முடியுமா? கோடிக்கணக்கான மக்கள் தொகையில் ஒருவருக்கு இருக்கும் திறமை மற்றொருவருக்கு இல்லை என்பது அறிவியல் நிரூபித்த உண்மை. அதேபோல் ஒவ்வொருவரின் சூழ்நிலையும் வேறு வேறு என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக ஆக வேண்டுமே தவிர அவரைப்போல் நாமும் ஆகவேண்டும் என்று பகல் கனவு கண்டு நம் சந்தோஷத்தை இழப்பது தவறு. நம்முடைய திறமை என்ன நம்முடைய சூழல் என்ன என்று புரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் சந்தோஷமான மனநிலையுடன் நாம் நினைப்பதை சாதித்துக்காட்டும் வெற்றியே மதிப்புமிக்கது.
தோல்விகளையும் தடைகளையும் மகிழ்வுடன் ஏற்று அதிலிருந்து பாடங்களை கற்று நம்முடைய தகுதி இதுதான் என்று உணர்ந்து நமது இலக்கைத் தீர்மானிக்க பழகவேண்டும். அதை விட்டுவிட்டு அடுத்தவர் போல் நாமும் மாறவேண்டும் என்ற விபரீத ஆசை கொண்டு இருக்கும் சந்தோஷத்தை தொலைத்துவிட்டு பெரும் வெற்றி உண்மையான வெற்றி அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.