ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ஐ. கியூ என்பதற்கு "அறிவாளித்தனம்" மற்றும் "ஆக்கமுள்ள ஆற்றல் சக்தி" என விளக்கம் தருகிறது. நுண்ணறிவு அளவீடு என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஐ கியூ என்றால் என்ன? ஐ கியூ (intelligence quotient) இதன்படி உங்கள் புத்தி கூர்மையின் அளவு எந்த அளவில் உள்ளது என்பதை கணக்கிடுவதாகும். உதாரணமாக ஐசக் நியூட்டனின் ஐ க்யூ 190 ஆகும். அதேபோல் இந்தியாவின் ரிஷி ஷிவ் பிரசன்னா ஐ க்யூ 190ஆகும். 4 வயது சீக்கிய குழந்தை தயாள்கர் ஐ கியூ லெவல் 145.
பொதுவாக ஐ.கியூ 150 க்கும் மேலே இருந்தால் அவர்கள் அறிவாளிகள் என கணக்கிடுகிறார்கள். ஆனால் 150 க்கும் மேல் ஐ. கியூ தேர்வில் மதிப்பெண் பெற்றவர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. என்பதை ஓர் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள உளவியல் துறையின் விஞ்ஞானிகள்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்வில் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஐ கியூ வை சோதித்தார்கள். அதில் 150 க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்றவர்களை பல ஆண்டுகள் கண்கானித்தார்கள். முடிவில் அதிக ஐ கியூ பெற்ற குழந்தைகள் பேராசிரியர்கள், என்ஜினியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், விஞ்ஞானிகள் என ஆனார்களே தவிர யாரும் உலகம் போற்றும் மேதைகள் ஆகவில்லை.
1980 ம் ஆண்டு மர்லின் வான்சாவன்ட் எனும் பெண்மணி உலகிலேயே அதிக ஐ கியூ பெற்ற பெண்மணி என்ற கின்னஸ் சாதனை படைத்தார். பிற்காலத்தில் அவர் உலகம் போற்றும் விதத்தில் எந்த துறையிலும் சாதிக்கவில்லை. ஒரே ஒரு புத்தகம் மட்டும் எழுதினார்.
கார்களின் உலகில் புரட்சி ஏற்படுத்திய ஹென்றி ஃபோர்டு, தந்தி முறையை கண்டுபிடித்த மோர்ஸ் போன்றவர்கள் குறைந்த ஐ கியூ பெற்றவர்கள். இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற லூயிஸ் வால்டர், ஆல்ட்ரின், வில்லியம் சாக்கி போன்றவர்கள் படிக்கும் காலத்தில் மிகக்குறைந்த ஐ கியூ பெற்றவர்கள். தற்போது உலகில் புகழ் பெற்ற ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களை உருவாக்கியவர்கள் எல்லாம் சராசரி ஐ கியூ பெற்றவர்கள்தான்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஐ கியூ விற்கும் ஜீனியஸ் தனத்திற்கும் தொடர்பில்லை என்பதுதான். நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ ஜீனியஸ் ஆகவேண்டுமா?. உங்களுக்கு பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்தி உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவதுதான்.
இன்டெலிஜென்ஸ் என்றால் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டு அதை நினைவில் வைத்துக் கொள்வது என்பதாகும். அதாவது உங்கள் மூளையின் புத்தி கூர்மை எந்த அளவிற்கு உள்ளது என்பதை குறிப்பிடுவதாகும்.
நீங்கள் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தவும் செய்ய வேண்டும். இது உங்கள் மூளையின் ஐ கியூ லெவல் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்விலும் நீங்கள் முன்னேற வழிவகுக்கும்.
தினமும் நீங்கள் நிறைய புதிய ஐடியாக்களை யோசிக்க வேண்டும். அதற்கு நீங்கள் தினமும் நிறைய படிக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் ஒரு நல்ல பழக்க வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக இசை, நாடகம், பாடல் கேட்பது போன்றவை. இவை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமலும் மகிழ்ச்சியாகவும் நல்ல மனநிலையோடும் வைத்துக் கொள்ளும். இதன் மூலம் உருவாக்கும் திறன் மேம்படும்.
தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் மூளையில் எண்டோர்பின் என்ற ரசாயனம் சுரக்கிறது. இது மனநலத்தை அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஹிப்போ கேம்பஸ் அளவை அதிகரிக்கிறது. இதுதான் நம் மூளையின் இன்பாக்ஸ் ஆகும். இதன் மூலம் படைப்பாற்றல், சிந்தனை திறன் அதிகரிக்கும்.
உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, அவர்களுடன் சேர்ந்து குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொள்வது, நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்வது என அனைத்தும் உங்களின் நினைவாற்றல் திறனை வளர்க்கும்.
இது முடியாது, இது நடக்காது, என உங்களுக்குள் நீங்களே சில விஷயங்களை சொல்லிக்கொண்டால் உங்கள் மூளையும் அதை நம்ப ஆரம்பித்துவிடும். எனவே, உங்களால் முடியாது என்று உள்ளுக்குள் ஏதேனும் ஒன்று உங்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தாலும், அதை தகர்த்து “முயன்றுதான் பார்ப்போமே” என்ற எண்ணத்துடன் முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக, நீங்கள் யோசிக்கும் விதத்தில் மாற்றம் தெரியும்.
ஆகவே இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஐ கியூ லெவல் ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் டிவி, லேப்டாப் ,கணினி, தொலைக்காட்சி போன்றவற்றை அளவாக பயன்படுத்தி வாருங்கள். இவைகளை அதிகம் பார்க்கும்போது உங்கள் மூளை சோர்வடைகிறது. இதன் மூலம் மூளையின் செயல்திறன் குறைக்கப்படுகிறது.