பெரும் மகிழ்ச்சியுடன் வாழ வைப்பது பெருந்தன்மையே!

motivation image
motivation imageImage credit - pixabay.com

நாம் நமது வீட்டில் ஏதாவது வேலை செய்யும்போது ஏதாவது தவறு செய்து விட்டால் வீட்டில் திட்டு கிடைக்குமோ என்று பயப்படுவோம். அதை அவர்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்பதற்கு மனம் இருந்தாலும் அதிக அச்சம் நம்மை ஆட்கொள்ளும். என்ன சொல்வார்களோ என்ற பயம் அதிகரிக்கும். அப்படி சூழ்நிலையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்பதிவில் காண்போம். 

எனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக என் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அந்த வீட்டிற்கு வந்த புதுப்பெண் பால் காய்ச்சி கொண்டு, ஒரு பக்கம் காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருந்தார். அப்பொழுது பால் பொங்கி சிறிதளவு வழிந்து விட்டது. மாமியார் என்ன  சொல்லப் போகிறார்களோ? என்று பயந்து கொண்டு அந்த புதுப்பெண் நின்றிருந்தார். மாமியார் அடுக்களைக்குள் நுழையவும் கொஞ்சம் பயந்தவர், அத்தை அத்தை தெரியாமல் என்று பாலை காட்டினார். கண்களில் அந்தப் பெண்ணிற்கு நீர் முட்டிக் கொண்டு வந்தது.

இதைக் கவனித்த எனது அத்தை அடடே! ஏம்மா இதற்கு போய் அழுகிறாய். நான் ஏதாவது சொல்லி விடுவேனோ என்று பயப்படுகிறாயா? இப்பொழுது என்ன நிகழ்ந்து விட்டது? சிறிது அளவு தான் பால் பொங்கி வழிந்திருக்கிறது . அதனால் என்ன? அந்தப் பாலில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கலந்து அனைவருக்கும் காப்பி கலக்கலாம். இல்லையென்றால் இருக்கிற பாலில் காபி கலந்து அனைவரும் கொஞ்சம் குறைவாக குடிக்கலாம். அவ்வளவுதானே! இதற்கு போய் கவலைப்படலாமா? இதே தவறை நான் செய்திருந்தால். .. தவறு எல்லோருக்கும் நிகழும்.  அடுத்து அதுபோல் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். 

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியோடு இருக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை சிரிக்க வேண்டும்?
motivation image

இதைக் கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் பெரிது படுத்தக் கூடாது என்று பெருந்தன்மையாக கூறிவிட்டு, கீழே பொங்கி இருந்த பாலையும் சுத்தப்படுத்தி மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார். அப்பொழுது அந்தப் புது பெண்ணின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே.  அதன் பிறகு அத்தையை முந்திக்கொண்டு, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு தானே செய்தார். இன்னும் சொல்லப்போனால் கடைசி காலம் வரையில் அந்தப் புதுப்பெண் அப்படித்தான் நடந்து கொண்டார்.

தக்க சமயத்தில் மனம் நோகாமல் பெருந்தன்மையோடு கூறும் சில வார்த்தைகள் காலம் கடந்தும் மனதில் நிற்கும் என்பதற்கு இது ஒரு சாட்சி. 

நாமும் யாரிடம் எந்தக் குறையைக் கண்டாலும் அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு, உகந்த வார்த்தையை கூறி சமாதானப்படுத்தி, நாமும் சமாதானம் அடைவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com