இன்றைய காலச்சூழலில் வாழ்க்கை என்பது பலவிதமான எதிர்பார்ப்புகளோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது.
என்னால் எல்லாம் முடியும். எனக்கு எல்லாம் வேண்டும் என்ற சிந்தனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
ஆனால், பொருள் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கூட முதுமையின்போது இயலாமையால் தவிக்கிறார்கள்.
அந்த நேரத்தில், வாழ்வில் பெற்ற அனைத்து நலன்களும் வீண் என்றே அவர்கள் கருதுகின்றனர். இதே சிந்தனையை உள்வாங்கி வாழ்வை நகர்த்தினால் நாம் இயல்பாக வாழமுடியும்.
தன் வாழ்வில் நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்ற புலம்பலோடு இளைஞன் ஒருவர் துறவியை தேடிச்செல்கிறான்.
அவரை பார்த்ததும் தன் அனைத்து குறைகளையும் கொட்டித் தீர்க்கிறான். சில நிமிட மவுனத்துக்கு பிறகு அந்த துறவி, ‘இளைஞனை பார்த்து, 'உன் வாழ்வின் எதிர்பார்ப்பு என்ன...?‘ என்று கேட்கிறார்.
உடனே இளைஞன், ‘எனக்கு மகிழ்ச்சி வேண்டும்‘ என்று துறவியிடம் கூறினான்.
பின்னர், ‘மகிழ்ச்சிக்காக என்ன செய்தாய்...? எதை எல்லாம் இழந்திருக்கிறாய்‘ என்று துறவி கேட்டார். ஆனால், துறவி கேட்டதற்கு இளைஞனால் எந்த பதிலும் கூற முடியவில்லை. அவன் அப்படியே அமைதியாக நிற்கிறான்.
இன்றைய உலகில் நாமும் ஏராளமான எதிர்பார்ப்புகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு வாழ்கின்றோம். ஆனால் நல்லது எதையும் இழப்பதற்கு நாம் முன் வருவதில்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப்படும் நாம் எதுவுமே வேண்டாம் என சிந்திப்பது இல்லை.
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் உதவிக்கு நன்றியை கூட எதிர்பார்க்க கூடாது.
எதிர்பார்ப்புகள் அற்று வாழ்வது மிகவும் அவசியம். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றமும், உயர்ந்த விரக்தியும் உருவாகும்.
நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்? அதுவும் தீவிரமாக. ஒரே வழிதான் இருக்கிறது... அதன் பெயர் அன்பு.
ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பாசத்தில் முழுமையான தீவிரம் இருக்கும். ஆனால், எதிர்பார்ப்பு இருக்காது. ஏமாற்றங்களை யாரும் எதிர்பார்ப்பதில்லை. உங்களின் எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றம் தருகின்றன.
எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் அன்பு ஒரு போதும் நிலைப்பதில்லை. அன்பு இருக்கும் இடத்தில் எதிர்பார்ப்பு அவசியமில்லை, எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள் ஏமாற்றம் இல்லாமல் வாழ்வீர்கள்.