
“ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது” என்ற ஒரு பழமொழி உண்டு. இதில் ஆமை என்பது உயிரினத்தைக் குறிப்பது அல்ல. ஆமை மிகவும் சாதுவான ஒரு பிராணி. பெரியவர்கள் குறிப்பிட்டது இந்த ஆமையை அல்ல. அவர்கள் குறிப்பிட்டது “பொறாமை” எனும் துர்குணத்தை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பொறாமை குணம் என்பது இன்று நேற்றல்ல. அது மனிதனின் மனதில் காலம் காலமாக இருந்து வரும் ஒரு தீய குணம். நமக்கு தெரிந்த ஒரு நண்பர் அல்லது உறவினர் வாழ்வில் படிப்படியாக உயர்ந்து ஒரு உன்னதமான நிலையை அடைந்தால் நமது மனம் அவர்களின் உயர்வை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர்களின் உயர்வை நினைத்தும் வசதியான வாழ்வை நினைத்தும் பொறாமை கொள்ளத் தொடங்குகிறது.
பொறாமையின் காரணமாக அவர்களைப் பற்றிய ஒரு வெறுப்பு உணர்வானது மனதுள் வளர்த்து அவர்களைப் பற்றி பிறரிடம் தவறாகப்பேசி அவர்களிடமிருந்து நாம் மெல்ல மெல்ல விலகத் தொடங்குகிறோம். அல்லது அவர்கள் நம்மை விட்டு விலகிச் செல்ல நாமே காரணமாகி விடுகிறோம்.
ஒருவர் வாழ்வில் உயர்கிறார், வசதி வாய்ப்புகளைப் பெற்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையுடன் வலம் வருகிறார் என்றால் அதற்குப் பின்னால் நிச்சயம் ஒரு பெரும் உழைப்பு இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் உயர்வு என்பது அவ்வளவு சுலபமாகக் கிடைக்கும் விஷயம் அல்ல.
நமக்குத் தெரிந்தவர் அல்லது உறவினர் வாழ்வில் முன்னேறினால் அதற்காக நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளக்கூடாது. ஒருவர் வெற்றி பெற்றால் அவரைச் சந்தித்து உங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்குங்கள். நமக்கு தெரிந்தவர் அல்லது உறவினர் இவர்களின் உதவியோடு நாம் நேர்மையான வழியில் முன்னேறக் கற்க வேண்டும். ஒருவரின் வெற்றியை நீங்கள் கொண்டாடினால் வெற்றி அடைந்தவரின் மனதில் நீங்கள் இடம் பெறுகிறீர்கள் என்று அர்த்தம்.
இதனால் அவர் மனதில் உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் தோன்றும். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்று அவர்களை அணுகினால் அவர்கள் அந்த உதவியை மகிழ்ச்சியோடு உங்களுக்குச் செய்யக் காத்திருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மாறாக நாம் அவர்களுடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டு அவர்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பிறரிடம் தெரிவித்தால் அதனால் நஷ்டம் நிச்சயம் நமக்குத்தான் என்பதை உணரவேண்டும்.
பிறருடைய வெற்றியை உங்களுடைய வெற்றியாகக் கருதுங்கள். பிறருடைய வெற்றியை உங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதிக் கொண்டாடுங்கள். நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுங்கள். இத்தகைய மனது உங்களுக்கு இல்லையென்றால் பரவாயில்லை. நீங்கள் அமைதியாக இருந்து விடுங்கள்.
வாழ்வில் அமைதி என்ற குணம் உங்களுக்கு எப்போதும் நன்மை பயக்கும். பிறருடைய வெற்றியையும் வாழ்வின் உயர்வையும் நீங்கள் நிராகரிப்பதால் என்ன ஆகப்போகிறது என்று சற்று யோசித்துப்பாருங்கள்.
உறவினரின் வெற்றி உங்களுடைய வெற்றி. நண்பர்களின் வெற்றி நமது வெற்றி என்று பிறருடைய வெற்றிகளைத் தயங்காமல் ஏற்கப்பழகுங்கள். அவர்கள் எப்படி வெற்றி அடைகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்கப் பழகுங்கள்.
அவர்களிடம் ஆலோசனை கேட்பதும் தவறில்லை. அவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியோடு அந்த சூட்சுமத்தைச் சொல்லித் தருவார்கள். அதை நீங்கள் பின்பற்றி வெற்றி அடையப் பாருங்கள். இந்த உலகம் உங்களை மதிக்கும். நல்ல மனதுக்காரன் என்று கொண்டாடும்.