நம்மை நாமே அறிந்து கொள்வதே வெற்றிக்கான முதல் படி!

Motivation Image
Motivation Imagepixabay.com

"முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உங்களைத்தான். தன்னை அறிந்த ஒரு மனிதன் தன்னை விட்டு வெளியில் வந்து, ஒரு பார்வையாளனைப்போல தனது சொந்த எதிர்வினைகளைப் பார்க்க முடியும்"

-ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல தத்துவஞானியும் மற்றும் பொருளாதார நிபுணருமான ஆடம் ஸ்மித் (Adam Smith).சொன்ன பொன்மொழி இது.

ந்தச் சிறுமி எப்போது பார்த்தாலும் ஒரு காகிதம் எடுத்து ஏதாவது வரைந்து கொண்டே இருப்பாள். அவள் வரைவது வெறும் பென்சில் கோடுகள் மட்டுமே. ஏனெனில் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்த குழந்தை அவள். அவள் வரையும் அந்த காகிதங்களை வரைந்து முடித்தவுடன் கசக்கி வெளியே தூக்கி எறிந்து விடுவாள். காரணம் வறுமையில் வாடும் அவள் தாய் "இதெல்லாம் தேவையா உனக்கு" போய் வேலையை பார்.."என்று கரித்துக் கொட்டுவாள் என்ற பயம்.

அந்த வழியில் செல்லும் ஒரு இளைஞர் தினமும் அந்த குடிசையில் இருந்து விழும் இந்த காகிதங்களை பொறுக்கி  என்னவென்று பார்க்கிறார். ஒரு நாள் அந்த இளைஞர் அந்த சிறுமியை வீடு தேடி சென்று "பிரம்மாண்டமான ஓவியப்போட்டி ஒன்று நடைபெறுகிறது அதில் உன்னுடைய பெயர் தரலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்கிறார்.

சிறுமியோ "போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு திறமையும் இல்லை. எங்கள் வீட்டில் அனுமதியும் இல்லை. "என்று மறுக்கிறாள்.

"அதை பற்றி நீ கவலைப்படாதே உங்கள் வீட்டில் நான் அனுமதி வாங்கிக் கொள்கிறேன். நீ வரைந்தால் போதும். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வரை. உன்னிடம் திறமை இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். உனக்குத்தான்  உன்னுடைய திறமை தெரியவில்லை" என்று பேசி அவள் வீட்டிலும் சம்மதம் வாங்கி அந்த ஓவியப்போட்டியில் அவளை கலந்து கொள்ள வைக்கிறார்.

அனைவரும் வண்ணங்களை கொட்டி வரைந்திருந்த அனைத்து சித்திரங்களிலும் இந்த சிறுமி வரைந்திருந்த வெறும் பென்சில் கோடுகளால் ஆன நவீன ஓவியம் ஒன்று அனைவரையும் கவர்ந்தது. அது புலியின் வாயில் ஆடு, ஆட்டின் வாயில் புல்லு என இயற்கை உணவுச் சங்கிலியை குறித்த ஒரு ஓவியம். போட்டியாளர்கள் மனதார இந்த சிறுமியை தேர்ந்தெடுத்து அவளுக்கு பணப்பரிசுகளை அளித்து மகிழ்கின்றனர். சிறுமியின் தாய்க்கோ பெருமகிழ்ச்சி.

அந்த சிறுமியால் நம்பவே முடியவில்லை நானா வரைந்தேன்? என்று. தன்னை அழைத்து வந்த அந்த இளைஞரிடம் சென்று "எப்படி என்னை தேர்ந்தெடுத்து இதற்கு அழைத்து வந்தீர்கள்?" என கேட்கிறாள்.

"நான் உன் வீடு வழியே செல்லும் போதெல்லாம் நீ வரைந்து வீசிய காகிதங்கள்தான் உன் திறமையை காட்டின." என அவன் தான் சேகரித்த அந்த ஓவியங்களை காட்டுகிறான். "உன்னுடைய திறமை உனக்கு தெரியவில்லை நீ முயன்றால் ஓவிய அரசியாகவே ஆகலாம்" என்று அவளுக்கு தன்னம்பிக்கை தத்துவிட்டு செல்கிறார் அந்த இளைஞர்.   

இப்படித்தான் பெரும்பாலோர் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை அலட்சியப்படுத்தி தேவையற்ற ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு அலைவார்கள். உண்மையில் தங்களைப் பற்றி தெரிந்து கொண்டு தங்களுக்கு என்ன வரும், எதில் ஈடுபாடு உண்டு என்பதை அறிந்து அதில் அதிகமான முயற்சியும் ஈடுபாடும் காட்டினால் நிச்சயம் வெற்றிதான்.

பொதுவாக கோபப்படும் நபர்களை பார்த்து அவர் ஒரு "ஷார்ட் டெம்பர்" என்று அழைப்பார்கள். அவருக்கே தெரியாது. அவர் எப்படி கோபப்படுவது. அதுதான் உண்மை. அவருக்கு அது தெரிந்திருந்தால் நிச்சயம் இந்த பெயரை அவர் விரும்ப மாட்டார். நாம் எப்படி என்ற ஒரு சுயபரிசோதனை நிச்சயம் நமக்கு உதவும்.

ஒரு சிலருக்கு பிரயாணங்கள் மிகவும் பிடிக்கும். சிலருக்கோ வீட்டிலிருக்கும் அமைதி பிடிக்கும். சிலர் விமானத்தையே ஓட்டக்கூடிய துணிவு கொண்டவர்களாக இருப்பார்கள். வேறு சிலரோ சைக்கிளைக் கூட தொடுவதற்கு அஞ்சுவார்கள். இப்படி  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அவரவரின் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
எந்த பாத்திரத்தில் சமைப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது?
Motivation Image

ஆனால் அந்த வாழ்க்கையை அப்படியே விடாமல் தனக்கு விமானம் ஓட்டக்கூடிய துணிவு இருக்கிறது என்பதைக் கண்டு  அதற்கு ஏற்ற முயற்சிகளை எடுத்தால் மட்டுமே  ஒரு விமானியாக அவரால் வெற்றி பெற முடியும் சைக்கிளை தொடுவதற்கு அஞ்சும் மனிதர் தனக்கு இருக்கும் அந்த பலவீனத்தை உணர்ந்து அதை அகற்றும் விதமாக தினமும் பயிற்சிகள் எடுத்து தன்னை பலசாலியாக நிரூபித்தால் தான் வெற்றி பெற முடியும்.

தன்னை அறிந்து கொண்டவர்களே பின்னாளில் பெரும் சாதனையாளராக மாறுகிறார்கள். நாம் என்னவாகப் போகிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு முதலில் நம்மை நாம் அறிய வேண்டும். நமக்கு இது தகுந்ததா  இல்லையா என்பதை ஆராய்ந்து தன்னைப் பற்றி உணர்ந்தவர்கள் ஒரு பார்வையாளராக செயல்பட்டு தங்கள் மீதே விமர்சனம் செய்யும் தகுதியை அடைவார்கள். இதுவே வெற்றிக்கான வழியையும் உருவாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com