புகழ் என்பது தெர்மாமீட்டர் மாதிரி. நிமிடத்திற்கு நிமிடம் வெப்ப மாற்றத்தை வேறுபடுத்திக் காட்டிய வண்ணம் இருக்கும். ஊடகங்களுக்கும் தகவல்கள்தான் முக்கியம்
ஓடிக்கொண்டிருக்கின்ற நதி எதற்காக எந்த அங்கீகாரத்திற்காக ஓடுகிறது. நதியின் சங்கமம் அது தன்னை முற்றிலுமாகக் கடலிடம் ஒப்படைத்துவிடும் சங்கதிதான். கலக்க மறுக்கின்ற நதி சாக்கடையாகத்தான் மாறும்.
பெறுகின்ற அங்கீகாரத்தைப் பொருட்படுத்தாமல் விழுகின்ற மாலைகளால் மகிழ்ச்சியடையாமல் தொடர்ந்து செல்லத் தெரிகின்றவர்கள், எப்போதும் ஒரே மன நிலையுடன் இருக்கின்றவர்கள் பாறைகளையும் பஞ்சு மெத்தையாகக் கருதிக்கொள்கிறார்கள்.
உலகிற்குப் பெரிய பங்களிப்பைச் செய்தவர்கள் பலர் புகழுக்காகச் செய்யவில்லை. தன் திருப்திக்காகச் செய்தார்கள் மானுடத்தின் வளர்ச்சிக்காகச் செய்தார்கள்.
எத்தனை பொருட்களை, யார் கண்டு பிடித்தார்கள் என்கின்ற விவரத்தைத் தெரிந்துகொண்டா நாம் பயன்படுத்துகிறோம்?
பேனாவைத் தினமும் பயன்படுத்துகிறோம். அதைக் கண்டுபிடித்தவரின் பெயர் எல்லாருக்குமே தெரியுமா?
தீக்குச்சி, தொலைக்காட்சி, வானொலி வாகனங்கள் இப்படி எண்ணற்ற சாதனங்கள்.
இவற்றை உருவாக்கியவர்களின் பெயர்கள், உபயோகிப்பவர்கள் எல்லாருக்கும் தெரியுமா?
மனிதன் உழைப்பது. பாடுவது. இசைப்பது, பேசுவது, எழுதுவது, விஞ்ஞானத்தில் ஈடுபடுவது எல்லாம் தன் இருத்தலை நியாயப்படுத்தி கொள்வதற்காக.
மரம் கூட பலருக்கு நிழல் கொடுக்க வேண்டுமே என்று விரைந்து வளர்கிறது. புல்கூட தான் வளர்ந்த மண்ணின் அரிப்பை எதிர்த்து வெள்ளத்துடன் போராட்டம் புரிகிறது. மாமல்லபுரத்தில் எத்தனை அழகிய கம்பீரமான சிற்பங்கள்? அவற்றை செய்தவர்களின் பெயர்கள் தெரியுமா?
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கலைப் பொக்கிஷங்களைத் தந்தவர்கள் எந்த அங்கீகாரத்தை எதிர்பார்த்து அவற்றைச் செய்தார்கள்? செதுக்கினார்கள்?
அவர்களில் பலருக்கு விரல்களில் விரிசல் விழுந்திருக்கலாம். விழிகளில் கற்கள் தெறித்து காய மேற்பட்டிருக்கலாம். உள்ளங்கைகள் சிவந்து புண்ணாகி மிருக்கலாம். முரட்டுப் பாறைகளைப் புரட்டிப் போடும்போது கால்கள் நசுங்கியிருக்கலாம்.'
அவர்களுக்கு யார் எந்த விருது தந்தார்கள்? எந்த மண்டபம் கட்டினார்கள். தாங்கள் செதுக்குகின்ற சிற்பமும், வடிக்கின்ற சிலையும் வாழப்போகின்ற கால அளவைக்கூடக் கணக்கெடுத்துக்கொள்ளாமல் அவர்கள் கவனமெல்லாம் சிற்பத்தின் மீதே இருந்தது. அவர்களே உளியாக மாறினார்கள். சுத்தியலாகவும் ஆனார்கள்.
நமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நாம் வருத்தப்படுகிறோமே, அடுத்தவர்களை அங்கீகரிக்க நாம் என்ன செய்திருக்கிறோம்?
நல்ல நூலை வாசித்தாலும் எழுதியவருக்கு எத்தனை பேர் கடிதம் போடுகிறோம்? நல்ல நிகழ்ச்சியைப் பார்த்ததும் அதற்குக் காரணமானவர்களை தொலைபேசியில் பாராட்டுகிறோமா? நம் சக துறையிலே இருப்பவர்களை ஒரே இரையை நோக்கிப் பாயும் இன்னொரு வேட்டை நாயைப் போலக் கருதுகிறோமே தவிர சிநேகத்துடன் கை குலுக்கிக் கவுரவப்படுத்துகிறோமா?
பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், திருவள்ளுவர் ஆகியோர் காலம் தாண்டியும் அவர்களுக்கு கிடைக்கின்ற அங்கீகாரத்திற்கு காரணம் அவர்கள் அங்கீகாரத்திற்கு ஆசைப்படாமல் வாழ்ந்ததால் தான். உண்மையான அங்கீகாரம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்கின்ற அங்கீகாரம்தான் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது பெயரே செயற்கையானது என்கின்றபோது பெயர்ப் பலகையை என்ன சொல்வது?