வெற்றி வேண்டும் என நினைப்பவர்கள் தோல்விகளைக் கண்டு பயந்துவிட்டால் எப்போதும் அவர்களால் வெற்றியை நோக்கி முன்னேற முடியாது. பயப்படுபவர்கள் வெற்றி வீரர்களாக உருவெடுக்கவே முடியாது. பயத்தைப் பற்றிய இந்த ஜென் கதையைப் பார்ப்போம்.
அந்த ஆசிரமம் ஊரில் இருந்து ஒதுக்குப்புறமாக காட்டை ஒட்டி அமைந்திருந்தது. அங்கு ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார். அடர்ந்தக் காட்டுப்பகுதி என்றாலும் அந்த குருவைக்காண பகல் நேரத்தில் ஏராளமான மக்கள் வந்து சென்றனர். அவரும் தன்னைக் காண வரும் மக்களிடம் நல்லபடியாக உரையாடி தேவையான அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார்.
ஒருநாள் குருவைக் காண்பதற்காக அவரது பழைய சீடன் ஒருவன் வந்திருந்தான். அன்று முழுவதும் குருவின் அருகிலேயே இருந்து, அவரது போதனைகளைக் கேட்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மாலை நேரம் முடிந்து இருள் சூழத் தொடங்கிவிட்டது. சீடன் அங்கிருந்து புறப்பட நினைத்தான். "இரவு நேரமாகிவிட்டது. தங்கியிருந்து, நாளைக் காலையில் புறப்பட்டுச்செல்" என்றார் குரு.
ஆனால் சீடன் மறுத்தான். "ஒரு முக்கியமான பணி இருக்கிறது. அதனால் நான் இன்று இரவே இங்கிருந்து போயாக வேண்டும்" என்றான். அதற்கு மேல் அவனை தடுத்து நிறுத்த விரும்பாத குரு, ‘நல்லது, பத்திரமாகப் போய் வா’ என்று விடை தந்தார்.
மடத்தின் வாசல் வரை வந்த சீடன் வெளியே கருமையான இருள் கவ்விக் கிடந்தது கண்டு தயங்கினான். ஆனால் அவனின் பணி அங்கேயே தங்கிவிடவும் அனுமதிக்க வில்லை. சீடன் தடுமாறுவதைக் கவனித்த குரு ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்தார். அதை சீடனின் கையில் கொடுத்து, ‘புறப்படு’ என்றார்.
தனது நிலை கண்டு உதவி புரிந்த குருவுக்கு நன்றியை தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து விடைபெற்றான்.
ஆனால் அவன் கொஞ்சதூரம் போனதுமே, ‘நில்!’ என்றார் குரு. அவனருகே விரைந்து சென்ற குரு, அவன் கையில் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்த விளக்கின் தீபத்தை, அணைத்தார். பின்னர் ‘இப்போது புறப்படு’ என்றார். சீடன் புரியாமல் குருவைப் பார்த்தான்.
குரு அவனிடம் சொன்னார். "இரவல் வெளிச்சம் உனக்கு நெடுந்தூரம் துணைக்கு வராது. உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. அது எரியாதவரை, இந்த விளக்கால் எந்த பயனும் இல்லை. உன் கையில் விளக்கு தேவை என்றால், உன் உள்ளே பயம் உறைகிறது என்று பொருள். உள்ளத்தில் துணிவிருந்தால், வெளியே விளக்குத் தேவையில்லை. உள்ளுக்குள் இருக்கும் பயம் போகாதவரை உன்னால், வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. இதே இருள், இதே பாதை… இவை எப்போதும் இங்கேதான் இருக்கும். ஆனால் உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்’ என்றார்.
சீடன் இப்போது மனஉறுதியுடன் பயத்தை உதறி அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.
வெற்றி நோக்கிச் செல்லும் எல்லா பாதைகளும் இருள் சூழ்ந்தவைதான். முன்னேறும் துணிவுடையவன் உதவிக்கு எந்த விளக்கையும் எதிர்பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் பயத்தில் விளக்குடன் முன்னேறியவர்களை விட விளக்கின்றி முன்னேறியவர் கள்தான் அதிக அனுபவங்களை பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் அகமே விளக்கு. அதுதான் நம் பயத்தை அகற்றி வெற்றிக்கான ஒளி தந்து வழி காட்டும்.
சிலருக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பயம் அவர்களைப் பின்னுக்கு இழுத்து வேடிக்கை பார்க்க வைக்கும். சிலருக்கு மேடைப்பேச்சு என்றால் உதறும். இன்னும் சிலருக்கோ சாதாரண கரப்பான் பூச்சிக்கும் பயந்து அலறுவர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
பலருக்கும் தன் பணிக்கேற்ற சம்பளத்தை மேலதிகாரியிடம் கேட்க பயம். இதனால் அவர்கள் இழப்பது பணம் மட்டுமல்ல அவர்களின் அடுத்த கட்ட முன்னேற்றமும்தான்.
இதுபோன்ற பயங்களால் நமது வாழ்வை முழுமையாக அனுபவிக்க முடியாதது மட்டுமல்ல நமது வெற்றிக்கும் தடையாக அமைந்து விடும். எனவே ஜென் குரு சொன்னது போல அகவிளக்கை ஏற்றி பயத்தை உதறித் தள்ளி உற்சாகமாக வெற்றி நோக்கி பயணிப்போம்.