
கவலையை அழிப்பது கலை. கவலை என்னும் சொல்லில் நடு எழுத்தை கழற்றிவிட்டால் போதும். கலைத்துவிட்டால் போதும் கவலை பறக்கும், கலை பிறக்கும், கல்வி பிறக்கும் முன் கலை பிறந்தது என்று சொல்லலாம்.
கல்விக்கு அடிப்படை மொழி, மொழி முதலில் தோன்றவில்லை. அதாவது பேசும் மொழி முதலில் தோன்றவில்லை. பேசத் தெரியாத ஆதி மனிதனின் உடலும் உள்ளமும் அளவற்ற துன்பத்தை அனுபவிக்கும் போது, அதை வெளிப்படுத்த வேறு வழி தெரியாமல், வாய் விட்டுக் கத்தினான். அந்தக் கத்தலே மெல்ல இசையாக - இசைப் பாட்டாக மாறியது. இந்த இசைப் பாட்டிலிருந்து மொழி பிறந்தது என்று மொழி நூல் அறிஞர் ஆட்டோயெஸ்பர்சன் கூறுகிறார்.
கிரேக்க நாட்டில் ஒரு சிறுவன் சந்தைக்கூடும் இடத்தில் தனது முதல் பேச்சை நிகழ்த்தினான். அறிமுகம் இல்லாத சிறுவன்தான் பேசுகிறான் என்றாலும் சந்தைக்கு வந்தவர்களில் நின்று பேச்சைக் கேட்டு அவன் பேசத் தொடங்கியதுமே சிரிக்க ஆரம்பித்தார்கள் அவன் பேச்சே காதில் விழாத அளவு அவர்கள் சிரிப்பொலி பெருகியது.
சிறுவன் மேடையை விட்டு இறங்கி சிரித்த பெரியவர் ஒருவரை பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள் எனக் காரணத்தை கேட்டான். அதற்கு பெரியவர் பேச்சு என்பது வாக்கு. வாக்கு சுத்தமாக இருக்க வேண்டுமானால் நாக்கு சுத்தமாக இருக்க வேண்டும்.! தம்பி உனக்கு திக்குவாய் என்பது தெரியாதா? எனக் கேட்டபோதுதான் அந்த சிறுவனுக்கே அது நினைவுக்கு வந்தது. ஆம். அவனுக்கு திக்குவாய்.
ஐயா! எனக்கு பேச்சாளனாக வேண்டும் என்ற ஆசை என சிறுவன் கூறியதை கேட்ட பெரியவர், தம்பி! உனக்கு எவ்வளவு விபரீதமான ஆசை இதை விட்டுவிடு எனக்கூறி அங்கிருந்து சென்றார்.
சிறுவன் தளரவில்லை.தொடர்ந்து பெரியவர்களைச் சந்தித்து வழி கேட்டான். ஒருவர் வழி சொன்னார்.
"வழவழப்பான இரண்டு பெரிய கூழாங்கற்களைத் தேடி எடு. அதில் ஒன்றை வாய்க்குள் வலப்பக்கமும் மற்றொன்றை வாய்க்குள் இடப்பக்கமும் வைத்து அடக்கிக் கொள். வாயில் கற்கள் இருக்க, நீ பேசு! உரக்கப் பேசு! எச்சரிக்கையோடு பேசு! கற்கள் இருக்கிற இடத்திலிருந்து நகர்ந்து வாயின் நடுவேவரக்கூடாத இடத்திற்கு வந்து வாய்க்குள் நழுவி வயிற்றுக்குள் போக நேரும். அதனால் விழிப்போடு பேசு.""
அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு நைல் நதியின் கரைக்குப்போய் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகத் தேர்ந்தெடுத்து வாயில் பெரியவர் கூறியபடி இரண்டு கூழாங்கற்களை அடக்கிக் கொண்டு பலமணிநேரம் பசியை மறந்து பல மாதங்கள் பேசினான்.
எந்தச் சந்தையில் பேசியபோது, மக்கள் சிரித்தார்களோ, அதே சந்தையில் பேசினான்.
மக்கள் அவன் பேச்சைக் கேட்டு, வியந்து, மகிழ்ந்து, பாராட்டினார்கள். சில மாதங்களில் அந்தத் திக்குவாய்ச் சிறுவன், திக்கெல்லாம் புகழும் சிறந்த பேச்சாளனானான். அவன் பெரியவனான போது கிரேக்க அரசவையே அவனை அழைத்து மதித்துப் போற்றியது.
அவன் கிரேக்க நாட்டின் தலை சிறந்த சொற்பொழிவாளன் ஆனான். பிறகு உலகத்தின் சிறந்த பேச்சாளன் என்றும் புகழ் அடைந்தான்.
அவன் பெயர் டெமஸ்தனீஸ்.