துன்பத்தை வரவேற்போம்!

motivation articles
motivation articles

-ம. வசந்தி

துன்பங்கள் நேர்வது நம்மை அழிப்பதற்காக அல்ல. ஆக்குவதற்காகவே துன்பங்களினாலும் சோகங்க ளினாலும் கடவுள் நம்மை வலிமையாக்குகிறார். மெல்லிய உணர்வுகள் மேன்மையான எண்ணங்கள் அற்புதமான செயல்கள் என்று உயரிய குறிக்கோள்களை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறார். இதை விளக்க அழகானதொரு உண்மை நிகழ்ச்சியே உள்ளது.

ஒரு மாலை நேரம் அழகான ஒரு பூந்தோட்டம். இளைஞர் ஒருவர் அங்கு அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பட்டுப்பூச்சி கூடு ஒன்று அவர் கண்ணில்பட்டது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதில் சிறிய துவாரம் ஒன்று ஏற்பட்டது. கூட்டிலே இருந்த புழு துளை வழியாக வெளியே வர முயற்சிப்பது தெரிந்தது. கூட்டை விட்டு வெளியேறி அழகான வண்ணத்துப்பூச்சியாக உருமாறி அது சிறகடித்து பறக்கும் காட்சியை காண அந்த இளைஞர் ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் திடீரென அந்தப் புழு முயற்சி செய்வதை நிறுத்திவிட்டது. 

அதனிடம் எந்த சலனமும் இல்லை. அந்த புழு களைத்துப்போய் தனது முயற்சியை கைவிட்டு விட்டது என்று அதற்கு உதவி செய்ய அவர் முடிவெடுத்தார். மரப்பட்டை ஒன்றினால் பூச்சிக்கூட்டின் துவாரத்தை நன்றாக கிழித்து அதை பெரிதாக்கினார். பட்டுப்பூச்சி மிக எளிதாக வெளிப்பட்டது. ஆனால் அது மிகவும் சிறியதாக இருந்தது .அதன் உடல் வாடி இருந்தது. இறக்கைகள் மிகவும் சுருங்கிப் போயிருந்தன. இருந்தாலும் எந்த நேரத்திலும் அதன் சிறகுகள் விரியும். அது இறக்கைகளை அடித்துக் கொண்டு மலர்களை நோக்கி பறந்து செல்லும் என்ற நம்பிக்கையில் இளைஞர் காத்திருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அந்தப் பட்டாம்பூச்சியினால் பறக்கவே முடியவில்லை. சூம்பிப் போன இறக்கைகளுடன் அதனால் மெதுவாக ஊர்ந்துதான் போக முடிந்தது  கருணை உள்ளம் கொண்ட அந்த இளைஞரின் மனம் மிகவும் வேதனைப்பட்டது  அந்த பட்டாம்பூச்சிக்கு ஏன் இந்த நிலை? பட்டாம்பூச்சி தனது உடலை வருத்திக்கொண்டுதான் பூச்சிக் கூட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என்பது இயற்கையின் நியதி. அந்த சிறிய ஓட்டையை விட பெரியதாக உள்ள தனது உடலை அதனுள் நுழைத்து பெரும் போராட்டத்திற்கு பின் அது வெளியே வரும்போது அதன் உடல் பகுதியில் இருக்கும் திரவங்கள் அதன் இறக்கையில் பாய்கின்றன. இதனால் அதன் சிறகுகள் விரிகின்றன: உறுதியடை கின்றன: அதன் உடலை சுமந்து கொண்டு பறக்கும் வலிமை பெறுகின்றன. இவ்வாறு உடல் வேதனைகளை அனுபவித்தால்தான் புழு வடிவத்தில் இருக்கும் அந்த ஜீவன் அழகான வண்ணத்துப்பூச்சியாக உருமாற முடியும்.

இதையும் படியுங்கள்:
மனிதனை மேன்மைப்படுத்துவது எது தெரியுமா?
motivation articles

கூட்டில் இருந்து விடுபட்டவுடன் சிறகடித்து ஆனந்தமாக பறக்க முடியும் என்பது இறைவன் வகுத்த நியதி. இதுபோன்ற சாதாரண சங்கடங்கள் இறைவனின் பெரிய திட்டங்களில் விளக்க இயலாத ஓர் அங்கம் .என்பது இளைஞருக்கு தெரியாததால் பட்டாம்பூச்சியின் துன்பத்தை துடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் அந்த பூச்சியை முடமாக்கி விட்டார்.

நமக்கும் வாழ்க்கையின் பல தருணங்களில் தடைகள் தேவைப்படுகின்றன. சவால்களே இல்லாத வாழ்க்கையை ஒருவேளை கடவுள் நமக்கு அளித்திருந்தால் நாமும் முடமாகி போய் இருப்போம். பறக்க முடியாத பட்டாம்பூச்சிகளாக இருப்போம். கடவுளிடம் பலம் வேண்டுமென்று கேளுங்கள். அவர் துன்பங்களை அளித்தால் மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றின் மூலம் நீங்கள் பெறுவது அதே பலம் தான் என்பதை உணருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com