செக்கன்ட் இன்னிங்ஸ் சிறப்பாக ஆட தயாராவோமா…!

அக்டோபர் 1- உலக முதியோர் தினம்!
செக்கன்ட் இன்னிங்ஸ் சிறப்பாக ஆட தயாராவோமா…!

ப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்துவிடுகிறோம். 50 வயதுக்குப் பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்.

50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயம் புதிய உந்துசக்தியை உருவாக்கக்கூடிய, புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுத்துக் கொள்வதுதான். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள். நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஓர் அர்த்தமுள்ள வாழ்வை தேர்ந்தெடுத்து வாழுங்கள் என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள். 60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள். இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும். அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகுதான்.  உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்களுள், 50+ காரர்கள்தான் அதிகம்.

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள். வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள். திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும். புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்.

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள். சிரித்துப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும். விரோதிகளை விலக்குங்கள்.  பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி  ஒதுக்குங்கள். மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள். நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்.

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள். மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள். உங்களை அவர்கள்  பக்கத்திலேயே படுக்க வைத்துவிடுவர். பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்.

மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள். முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப்படுபவர் களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்.

பொதுவாக 50 வயதை தாண்டியவர்களுக்கு சில நோய் அச்சுறுத்தல்கள் ஏற்படும், குறிப்பாக இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவைகள் இந்த நோய் அச்சுறுத்தல்களை தவிர்த்து நீண்ட ஆயுளுடன் வாழ ஐந்து பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் ஹெல்த் ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

ஆரோக்கியமான, சமச்சீரான உணவுகளை தினசரி தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும், தினமும் 30 நிமிடங்கள் தொடர்ந்தோ அல்லது விட்டு விட்டோ தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் எடையை கூடி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இதுதான் உடல் எடையை கூட்டி இதய, நுரையீரல் பிரச்னைகளை உருவாக்குகிறது என்கிறார்கள். மது அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

எப்போதுமே முதல் இன்னிங்சைவிட, இரண்டாம் இன்னிங்க்ஸ்தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை. மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்டபிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்னை வந்து விடப் போகிறது? வாழ்வோம் நலமுடன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com