
நன்றாக கவனித்துப் பார்த்தால் ஏதேனும் ஒரு குறிக்கோளுடன் தங்கள் செயல்களை செய்பவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விரும்ப மாட்டார்கள். உதாரணமாக பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படிக்கும் மாணவன் வீடியோ கேம் விளையாட ஆர்வம் காட்ட மாட்டான். வயலில் நல்ல மகசூல் எடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைக்கும் விவசாயி பசியைக் கூட மறந்திருப்பார்.
தென்கச்சி சுவாமிநாதன் இதைக் குறித்து ஒரு கதையுடன் அருமையாக விளக்கி சொல்லியிருந்தார்.
அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு ஆசிரமம் சுற்றிலும் பழுத்து தொங்கும் பலவகையான பழ மரங்களுடன் இருந்தது. காலையில் அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மாலையில் அந்த வழியாகத்தான் வீட்டுக்கு திரும்பி வருவார்கள்.
திரும்பி வரும் போது அந்த மரங்களை பழுத்துத் தொங்கும் பழங்களை பறித்தும், கல்லால் அடித்தும், இலைகளை கிள்ளி எறிந்தும் கலாட்டா செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதை தினமும் கவனித்து வந்த சாமியாருக்கு ஒரு சந்தேகம் இதே மாணவர்கள் காலையில் பள்ளிக்கு செல்லும்போது எந்த கலாட்டாவும் குறும்புத்தனம் செய்வதில்லை. ஆனால் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ன காரணம்? அவர்களிடமே கேட்கலாம் என்று முடிவு செய்தார்.
மாலையில் திரும்பி வந்த ஒரு மாணவனிடம் இதைப் பற்றி கேட்டார். அதற்கு அவன் சொன்னான் " ஐயா. நாங்கள் பள்ளிக்கு போகும்போது சரியான நேரத்திற்கு பள்ளிக்கு போய் சேர வேண்டும் பாடத்தை படிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செல்கிறோம். ஆகையால் வேறு எந்த எண்ணமும் எங்களுக்கு தோன்றுவதில்லை. ஆனால் திரும்பி வரும்போது எந்த குறிக்கோளுடனும் நாங்கள் வருவதில்லை. அதனால் இது போன்ற கலாட்டாவும் குறும்புத்தனமும் செய்யும் எண்ணம் தோன்றுகிறது" என்றனர்.
அதைக்கேட்டு ஆசிரமத்தை நோக்கி சென்ற சாமியாருக்கு சுவாமி விவேகானந்தர் சொன்ன கருத்து ஒன்று நினைவுக்கு வந்தது " குறிக்கோளுடன் மனிதன் வாழ வேண்டும். அப்படிப்பட்டவர்கள் சந்தர்ப்பவசத்தால் ஏதேனும் தவறு செய்தாலும் தன்னை திருத்திக் கொண்டு விடுவார்கள். ஆனால் குறிக்கோளும் எந்த லட்சியமும் இல்லாமல் வாழ்க்கை நடத்தினால் தவறு செய்வதே வழக்கமாகிவிடும்." சரிதானே?
ஆகவே நாமும் ஏதாவது ஒரு குறிக்கோளை மனதில் நிறுத்தி வாழ கற்றுக் கொள்வோம். நமது வாழ்க்கை வளமாக அமையும்.