

புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும் மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம். -ஜீன்காக்டி
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, தமிழ் அம்மா எங்களை எல்லாம் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
அது என்னவென்றால், அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதில் நீங்கள் என்னவாக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு ஒரு மாணவி நான் கடவுளாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினாள்.
திடுக்கிட்ட ஆசிரியை ஏன் அப்படி ஒரு ஆசை என்று கேட்டார்.
அதற்கு அவள் சொன்ன பதில் எல்லாவற்றையும் படைத்து அழகு பார்க்கலாமே! அதற்காகத்தான் என்றாள்.
ஆசிரியர் இப்படி ஒரு கேள்வி கேட்டதும் எங்களுக்கும் அதிசயமாகத்தான் இருந்தது. காரணம் புது வருடம் பிறந்தால் எல்லோரும் என்னென்ன உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். பத்தாவது படித்துக் கொண்டிருந்தால் அதன் பிறகு என்ன படிக்கப் போகிறீர்கள்? என்று கேட்பார்கள். அதை விடுத்து ஆசிரியர் இப்படி கேட்டதும் எங்களுக்கெல்லாம் எப்படி, என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதற்கு இந்தப் பெண் சொன்ன பதில் எக்காலத்திலும் மறக்க முடியாததாக இருந்தது.
அதை நினைவு கூறும் வகையில் இதோ ஒரு கதை:
அரசர் தனது அமைச்சர்களைப் பார்த்து மறுபிறவியில் என்னவாக பிறக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்.
அமைச்சர்கள் சுதாரித்துக் கொண்டனர்.
மன்னரே... மறுபிறவியல் குதிரையாகப் பிறந்து என் மீது நீங்கள் சவாரி செய்ய வேண்டும் என பிரியப் படுகிறேன்...என்றார் ஓர் அமைச்சர்.
"மாடாகப் பிறந்து மன்னரின் ஆரோக்கியத்திற்கு பசும்பால் கொடுக்க விரும்புகிறேன்..."என்றார் இன்னொருவர்.
மூன்றாவதாக அமைச்சர், "நான் அடுத்த பிறவியில் உங்களுக்கு அப்பாவாக பிறக்க ஆசைப் படுகிறேன்..."என்றார்.
அரசருக்குக் கோபம் வந்துவிட்டது எனக்கே அப்பாவாக பிறக்க ஆசைப்படுகிறாயா? என வாளை உருவினார்.
'பொறுங்கள் அரசே, உங்கள் அப்பாவாக பிறந்தால் ஆயுள் முழுவதும் நிலம், அரண்மனையென சொத்துகளைச் சேர்த்துக் கொடுப்பேனே... அதை நான் அனுபவிக்காமல் நீங்கள்தானே அனுபவிப்பீர்கள்...'என்றார்.
மனம் குளிர்ந்த மன்னர் பொற்காசுகளை மூன்றாவதாகச் சொன்ன அமைச்சருக்கு வழங்கினார்.
"கோழைகளைத் தவிர வேறு எவரும் பொய் சொல்வதில்லை"-- ராமகிருஷ்ண பரமஹம்சர்.