"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" "தனிமரம் தோப்பாகாது" அந்தக் காலத்தில் இருந்து இந்த காலம் வரை சொல்லப்படும் ஒற்றுமைக்கான பழமொழிகள்.
நாம் பிறப்பது முதல் இறுதிவரை இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களுடன் இணைந்து இயங்க வேண்டிய சூழல்கள் உள்ளது. பள்ளி, கல்லூரி முதல் அலுவலகம் வரை பெரும்பாலான பகுதிகளில் நாம் ஒரு குழுவுடன் சேர்ந்துதான் செயல்பட்டுக் கொண்டிருப்போம். உலகம் முழுவதும் உள்ள வாழ்வின் நியதி இது.
தனிமனித சாதனைகள் என்பது அதைச் செய்த ஒரே ஒருவருக்கு மட்டுமே பெருமை தருகிறது. ஆனால் குழுவாக இணைந்து ஒரு செயலை சரியாக செய்யும்போது கிடைக்கும் வெற்றி அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது. இதற்கு குழுவாக இணைந்து விளையாடும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் சான்று.
ஆங்கிலத்தில் டீம்வொர்க் என்பார்கள். TEAM என்பதற்கான விரிவாக்கம் இது. T- Together E - Everybody A- Achieves M - More அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் நிறைய சாதிக்க முடியும் என்பதுதான் இதன் பொருள். ஒருவர் மட்டும் தன்னிச்சையாக இயங்கி சாதிக்கலாம் என்று நினைக்காமல் எல்லோரும் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சியும் ஆர்வமுமே டீம் எனப்படுகிறது. மேலும் ஒரு குழுவுடன் சேர்ந்து செயல்படும் தன்மை கொண்ட மனிதர்களே வாழ்வில் வெற்றிகரமான மனிதர்களாக இருக்கிறார்கள்.
குழுவாக இணைந்து வேலைகளைப் பகிர்ந்து செய்யும்போது எளிதாக இருப்பது மட்டுமல்ல எப்படி செயல்பட வேண்டும், எதை பகிர்ந்து கொள்ள வேண்டும், எதை விட்டுக் கொடுக்க வேண்டும் எனும் தன்மைகளை அறியலாம். இந்த தன்மைகளை அறியாதவர்கள் எதிலும் பின்னடைவையே சந்திப்பார்கள்.
ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளை குறித்து மிகக் கவலையுடன் அந்த உளவியல் நிபுணரிடம் பேசினர். "எங்கள் பிள்ளை எல்லா விஷயத்திலும் சிறந்தவனாக இருக்கிறான். ஆனால் எந்நேரமும் வீடு விட்டால் பள்ளி. பள்ளி விட்டால் வீடு என்று எங்களை மட்டுமே நாடுகிறான். அவன் விளையாட்டு முதல் படிப்பு வரை அனைத்தையும் எங்களிடத்தில் நாடுகிறான். அவன் வயதை ஒத்த பிள்ளைகள் அழைத்தாலும் செல்ல மறுக்கிறான். பள்ளியிலும் அவன் தனியாகவே இருப்பதாக ஆசிரியர் சொல்கிறார். இப்படி இருந்தால் இவன் எதிர்காலம் சிறப்பாக அமையாதே? எப்படி இவனை மாற்றுவது என்று புரியவில்லை." அந்தப் பெற்றோரைப் பாராட்டிய அந்த நிபுணர் அவர்கள் பிள்ளை மற்றவர்களுடன் இணைந்து பழகும் வழிகளை சொல்லி அனுப்பினார்.
தன் பிள்ளை அறிவாளியாக இருந்தும் மற்றவர்களுடன் பழக மாட்டேன் என்கிறான் என்று கண்டுபிடித்து அதற்கான தீர்வை தேடிவந்த இந்தப் பெற்றோர் மகனின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்து தந்துள்ளனர். ஏனெனில் சகமனிதர்களுடன் இணைந்து பழகும் பழக்கத்தை தவிர்ப்பது எனும் குறையை அவர்கள் சரி செய்துள்ளனர்.
பிள்ளைகள் எதிர்காலத்தில் ஒரு பணிக்கு செல்லும்போது ஒரு குழுவாக இணைந்து தன்னுடைய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு செயல்பட்டால்தான் வெற்றியை நோக்கி செல்ல முடியும் இதைப் புரிந்து கொண்டு பிள்ளைகளை சிறுவயது முதலே குழுவாக விளையாடவும், பழகவும் கற்றுத் தருவதே வெற்றிக்கு முதல்படி.