மகிழ்ச்சி என்பது அனைவருமே விரும்பும் ஒன்றாக இருந்தாலும், இன்றைய காலத்தில் பலர் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல விஷயங்களுடன் போராடுவதால் மகிழ்ச்சி என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. நாம் அனைவருமே உண்மையான மகிழ்ச்சியைக் கண்டறிவதற்கு, சில கெட்ட விஷயங்களை கட்டாயம் கைவிட்டாக வேண்டும். இந்தப் பதிவில் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க எதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
கடந்த கால வருத்தங்கள்: கடந்த காலத்தில் நடந்த வருத்தமான விஷயங்கள், நிகழ்காலத்தில் நமக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. அவை நமக்கு படங்களை மட்டுமே கற்றுக் கொடுப்பதால், கடந்த கால வருத்தங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே கடந்த கால வருத்தங்கள் மீது அதிக கவனம் செலுத்தாமல் நிகழ்காலத்தில் தனிப்பட்ட வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துங்கள்.
மோசமான உறவுகளைக் கைவிடுங்கள்: எப்போதும் எதிர்மறையாக பேசுவது அல்லது உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் நபர்களால் உங்களது மகிழ்ச்சி பெருமளவுக்கு பாதிக்கப்படலாம். எனவே நீங்கள் பழகும் நபர்களை சரியாகத் தேர்வு செய்யுங்கள். உங்களது உறவை மதிப்பீடு செய்து தொடர்ந்து உங்களுக்கு பிரச்சினையைக் கொடுக்கும் உறவுகளை தைரியமாகக் கைவிடுங்கள்.
அனைத்தையும் கட்டுப்படுத்துவதைத் கைவிடவும்: உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்த முயற்சிப்பது உங்களை சோர்வாகவும், எதிர்மறையாகவும் சிந்திக்க வைக்கலாம். உங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களும் சில உள்ளன என்பதை ஏற்றுக்கொண்டு, உங்களால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்களில் மற்றும் கவனம் செலுத்துங்கள். இது உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக உணரச் செய்யும்.
பொருட்களுக்கு முக்கியத்துவம் தருவதைக் கைவிடவும்: “அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை” என்பது பழமொழி. ஆனால் இதை நாம் ஏற்றுக்கொண்டு நமது வாழ்க்கையை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாழ்க்கையாக வாழ்ந்து விடக்கூடாது. முன்பெல்லாம் கையில் அதிகமாக பணம் இருந்தால் தங்கத்தில் முதலீடு செய்வார்கள், ஆனால் இப்போது எதுபோன்ற பொருட்களை வாங்கலாம் என்றுதான் மனம் சிந்திக்கிறது. பொருட்களை வாங்கி வாங்கி வீட்டுக்குள்ளே அதிக குப்பைகளை சேர்த்துக் கொள்கின்றனர். தேவையான பொருட்களை விட தேவையில்லாத பொருட்களே வீட்டில் அதிகமாக உள்ளன. எனவே ஒருபோதும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருக்காதீர்கள்.
வெறுப்பு மற்றும் மனக்கசப்பைக் கைவிடுங்கள்: வெறுப்பு மற்றும் மனக்கசப்பை அப்படியே வைத்திருப்பது உங்களது மகிழ்ச்சியை கெடுத்துவிடலாம். எனவே மற்றவர்கள் செய்யும் தவறை மன்னிக்க முயற்சி செய்யுங்கள். யார் மீதாவது வெறுப்பு அல்லது மனக்கசப்பு இருந்தால் உடனடியாக அவற்றை கைவிட்டு, உங்களது மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
ஒப்பிடுவதைக் கைவிடுங்கள்: இந்த உலகத்திலேயே ஒரு நபர் செய்யும் மிகவும் மோசமான விஷயம் எதுவென்றால், அது பிறருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வதுதான். இது தேவையில்லாத தர்ம சங்கட உணர்வுகளை ஏற்படுத்தும். எப்போதுமே ஒருவர் போல ஒருவர் இருந்துவிட முடியாது. வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் முன்னேறுவதற்கான முயற்சிகள் இருக்கலாமே தவிர, பிறருடன் ஒப்பீடு செய்து அவர்களைப் போல நாம் இல்லையே என்ற பொறாமை குணம் இருக்கக் கூடாது. இந்த மனநிலை உங்களை வாழ்க்கையில் எதையுமே ரசிக்கவிடாது.
தோல்வி பயத்தை கைவிடுங்கள்: வாழ்க்கையில் ஒருவனால் எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற்றுவிட முடியாது. வெற்றி ஏற்படுவது போல தோல்வியும் சகஜமான ஒன்றுதான். நீங்கள் தோல்வி அடைந்தால் மட்டுமே, ஏதோ ஒரு புதிய விஷயத்தை முயற்சிக்கிறீர்கள் என அர்த்தம். தோல்விக்கு அஞ்சி எதையுமே முயற்சிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் நல்ல நிலையை நீங்கள் அடைய முடியாது. எனவே தோல்வி பயத்தைக் கைவிட்டு, உங்களை முன்னேற்றம் விஷயங்களில் தைரியமாக இறங்குங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள 7 விஷயங்களைக் கைவிடுவது மூலமாக, உங்களது வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியுடன் நீங்கள் இருக்க முடியும்.