பதறாத காரியம் சிதறாது. பரபரப்பு காரியத்தை கெடுத்துவிடுகிறது. சமநிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் சமவெளியில் உருவான நாகரீகம்போல்.
திருப்பதி பெருமாளுக்கு பூ கட்டும் திருப்பணியைச் செய்தவர் அனந்தாழ்வான் என்ற அடியவர். ஒருநாள் பூக்கள் தொடுக்கும் போது பாம்பு அவரது விரலைத் தீண்டியது. பதறாமல் பூமாலை கட்டி பெருமாளுக்கு சாற்றப் போனார். பெருமாள் பதறினாராம். பாம்பு கடித்துவிட்டதே என்று பெருமாள் கூறியதற்கு அனந்தாழ்வார், "சுவாமி, கடித்த பாம்புக்கு விஷம் அதிகம் என்றால் கைங்கர்யம் அங்கே. கடியுண்ட பாம்புக்கு விஷம் அதிகமானால் கைங்கர்யம் இங்கே. பின் என்ன கவலை" என்றார். பாம்பு கடித்து விஷம் அதிகமானால் வைகுந்தம். அங்கும் மாலை கட்டி தொண்டு செய்யலாம். அப்படி இறக்கவில்லை என்றால் இங்கேயே தொடர்ந்து திருப்பணி செய்யலாம் என்று உறுதியாக அனந்தாழ்வான் கூறினார்.
நம்மவர்களின் பலர் கஷ்டங்களால் சாவதைவிட கஷ்டங்கள் பற்றிய கற்பனையிலேயே சாகிறார்கள். ஆபத்துகளைவிட ஆபத்துக்கள் பற்றிய கற்பனைதான் ஆபத்தானவை.
ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒருவர் தன் கையை வெளியே தொங்கவிட்டிருந்தார். திடீர் என்று அவரது விலையுயர்ந்த கை கடிகாரம் கழன்று கீழே விழுந்தது. அவர் பதறித்துடித்தார். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த மற்றொரு நபர் அவர் துயரத்தில் சிறிதும் பங்கேற்கவில்லை. எவ்வித சலனமும் இன்றி வெளியில் வேடிக்கை பார்த்தபடியே பயணம் செய்கிறார். அடுத்த ரயில் நிலையத்தில் ஒரு அதிகாரியை அழைத்து இங்கிருந்து இத்தனையாவது தந்திக் கம்பத்துக்கு அடியில் கடிகாரம் கிடக்கிறது. அதை எடுத்து எதிரில் உள்ளவர் முகவரிக்கு சேர்ப்பிக்கும்படி அறிவுறுத்தினார். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாரா.? தந்திக் கம்பங்களை எண்ணிக் கொண்டு வந்தார். அவர் வேறு யாருமில்லை மூதறிஞர் இராஜாஜிதான்.
மரண தண்டனைக்குரிய கைதிக்காக ஒருவர் வாதாடிக் கொண்டிருந்தபோது மனைவி மரணம் அடைந்த செய்தி தந்தி மூலம் வந்தது. அதை படித்துவிட்டு வழக்கைத் தொடர்ந்தார் வக்கீல். அவர்தான் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். முடிந்துபோன மனைவிக்காக பதறுவதைவிட காப்பாற்ற வேண்டிய உயிருக்காக கடமை ஆற்றும் சமநிலையில் வாழ்ந்த இரும்பு மனிதர்களின் வாழ்க்கை இளைஞனுக்கும் பாடமாகும். சுகமும் துக்கமும் ஆபத்தானவைதான். சமநிலைதான் சரியான வழி.